கோலின்றி முடிவுற்ற எல் கிளாசிகோ

75

ஸ்பெயின் லா லிகா தொடரில் பார்சிலோனா மற்றும் ரியல் மெட்ரிட் அணிகள் மோதிய எல் கிளாசிகோ போட்டி இழுபறியுடன் கோலின்றி சமநிலையில் முடிவுற்றது. இதன்மூலம் பார்சிலோ புள்ளிப்பட்டியலில் கோல் வித்தியாசத்துடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது.

பார்சிலோனாவின் சொந்த மைதானமான கேம்ப் நூவில் நடைபெற்ற இந்தப் போட்டியின் ஆரம்பம் தொட்டு இரு அணிகளும் கோல் முயற்சிகளில் ஈடுபட்டபோதும் போட்டி விறுவிறுப்பு இறைவாகவே நீடித்தது. 2002 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரு அணிகளும் மோதிய போட்டி ஒன்று கோலின்றி முடிவுற்றது இது முதல் முறையாகும்.

போட்டி சமநிலையானதால் பார்சிலோனா லா லிகா புள்ளிப்பட்டியலில் 17 போட்டிகளில் 36 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிப்பதோடு ரியல் மெட்ரிட்டும் 36 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

அரசியல் பிரச்சினை காரணமாக கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி நடைபெறவிருந்த எல் கிளாசிகோ போட்டியே பிற்போடப்பட்டு நடத்தப்பட்டது. பார்சிலோனாவை தலைநகராகக் கொண்ட கட்டலான் பிராந்தியம் ஸ்பெயினிடம் இருந்து பிரிந்து தனிநாடு கோரி தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. 

போட்டி நடைபெறும் வேளையிலும் அரங்குக்கு வெளியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதோடு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல்களும் ஏற்பட்டன.  

கடற்கரை பந்துகள் மைதானத்திற்குள் வந்ததால் இரண்டாவது பாதியில் சிறிது நேரம் போட்டி தடைப்பட்டது. 

எனினும் மைதானத்திற்குள் கோல் பெறுவதற்காக இரு அணிகளும் போராட வேண்டி ஏற்பட்டது. சினேடின் சிடேனின் ரியல் மெட்ரிட் அணி இடைவேளைக்கு முன் கோலை நோக்கி 12 உதைகளை செய்தது. கசிமிரோ தலையால் முட்டிய பந்து கோல் நிலையை நெருங்கியபோது கரார்ட் பிகு போராடித் தடுத்தார். இரு பெனால்டி வாய்ப்புகள் கோரப்பட்டபோதும் அவை மறுக்கப்பட்டன.  

மறுபுறம் பார்சிலோனா, நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியில் அதிகம் நம்பி இருந்தது. முதல் பாதியில் அவர் தடைகளை முறியடித்து கோல் எல்லைவரை பந்தை எடுத்துச் சென்று கோலை நோக்கி உதைத்தபோது மெட்ரிட் தலைவர் செர்ஜியோ ராமோஸ் தடுத்தார்.

முதல் பாதி: பார்சிலோனா 0 – 0 ரியல் மெட்ரிட்

இரண்டாவது பாதி ஆட்டத்திலும் இதே இழுபறி நிலை நீடித்தது. எனினும் ரியல் மெட்ரிட்டின் கரெத் பேல் பந்தை வலைக்குள் செலுத்தியபோதும் அது ஓப் சைட் என நிராகரிக்கப்பட்டது. 

மெஸ்ஸி பரிமாற்றிய பந்தைக் கொண்டு ஜோர்டி அல்பாவுக்கு கோல்பெற வாய்ப்பு ஒன்று கிட்டியபோதும் அவரது உதை கோல் கம்பத்திற்கு வெளியால் பறந்தது. 

இரண்டாது பாதியின்போது பார்சிலோனாவுக்கு கோல் வாய்ப்புகள் கிட்டியபோதும் தவறுகள் மற்றும் பந்தை சரிவர கட்டுப்படுத்தாததால் அந்த வாய்ப்புகள் தவறிப்போயின.  

பார்சிலோனா அடுத்து தனது சொந்த மைதானத்தில் வரும் டிசம்பர் 21 ஆம் திகதி அலாவெஸ் அணியை எதிர்கொள்ளவிருப்பதோடு வரும் ஞாயிற்றுக்கியழமை ரியல் மெட்டிர், அட்லடிகோ பில்போ அணியை எதிர்கொள்ளவுள்ளது. 

முழு நேரம்: பார்சிலோனா 0 – 0 ரியல் மெட்ரிட்