அதிவேக வீரராக அக்கானியும், வீராங்கனையாக மிச்செலியும் முடிசூடினர்

129
Akani Simbine & Michelle-Lee Ahye

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற பொதுநலவாய விளையாட்டு விழாவின் 21ஆவது அத்தியாயத்தின் அதிவேக வீரராக தென்னாபிரிக்காவின் அக்கானி சிம்பைனும், அதிவேக வீராங்கனையாக ட்ரினிடாட் அண்ட் டொபேகோ வீராங்கனை மிச்செலி லீ ஆஹெயும் முடிசூடிக் கொண்டனர்.

கோல்ட் கோஸ்ட்டின் கராரா மைதானத்தில் நேற்று(09) நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டியில், வெற்றி பெறுவார் என பலரும் நம்பி இருந்த ஜமைக்காவின் யொஹான் பிளேக்கை பின்தள்ளி தென்னாபிரிக்காவின் அக்கானி சிம்பைன்(10.03 செக்.) தங்கப் பதக்கத்தை வென்றதுடன், பொதுநலவாய விளையாட்டு விழாவின் அதிவேக வீரராகவும் மாறினார்.  

25 வயதான அக்கானி, முன்னதாக 2016 றியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும், கடந்த வருடம் லண்டனில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 5ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உசைன் போல்ட்டின் ஓய்வுக்குப் பிறகு ஜமைக்காவின் நம்பிக்கை நட்சத்திரமாக தங்கப் பதக்கத்தை வெல்லும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய பிளேக், எதிர்பாராத விதமாக 10.19 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். இதேநேரம் தென்னாபிரிக்காவின் மற்றுமொரு வீரரான ஹென்றிகோ ப்ரொங்சீஸ்(10.17 செக்.) வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதேவேளை, பொதுநலவாய விளையாட்டு விழாவின் அதிவேக வீராங்கனையாக, போட்டியை 11.14 செக்கன்களில் நிறைவுசெய்த ட்ரினிடாட் அண்ட் டொபேகோ வீராங்கனை மிச்செலி லீ ஆஹெ தங்கப் பதக்கம் வென்றார்.  

குத்துச்சண்டையில் இலங்கை வீரர்களுக்கு பதக்கங்கள் பெறும் வாய்ப்பு

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று..

இதன்படி, முன்னதாக 2016 றியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும், கடந்த வருடம் லண்டனில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர்களில் 6ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்ட 25 வயதான மிச்செலி, பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் ட்ரினிடாட் அண்ட் டொபேகோவுக்கு தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்த முதல் வீராங்கனையாகவும் வரலாற்றில் இடம்பிடித்தார்.

இதில் ஜமைக்கா நாட்டு வீராங்கனைகளான கிறிஸ்டானியா வில்லியம்ஸ்(11.21 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், கயான் இவான்ஸ்(11.22 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

அவுஸ்திரேலியா முன்னிலை

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் முடிவில் போட்டிகளை நடாத்தும் அவுஸ்திரேலிய அணி 41 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. 23 தங்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாம் இடத்திலும், 11 தங்கங்களுடன் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.