மும்பை அணியின் வெற்றியுடன் நள்ளிவிரவில் நாடு திரும்பிய மாலிங்க

1162
IPLT20.COM

ஐ.பி.எல். தொடரில் நேற்று (03) நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, தங்களுடைய 100வது ஐ.பி.எல். வெற்றியை பதிவு செய்துள்ளது.

உலகக் கிண்ண இலங்கை அணி குறித்து தேர்வுக் குழுத் தலைவர் சூசகம்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை ….

ஐ.பி.எல். வரலாற்றை பொருத்தவரை 100 வெற்றிகளை பெற்ற முதல் அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று பெற்றுக்கொண்டது. இரண்டாவது இடத்தில் 93 வெற்றிகளுடன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி உள்ளது. குறிப்பாக இம்முறை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்றிருந்த சென்னை அணிக்கு முதல் தோல்வியினை வழங்கி 100வது வெற்றியினை மும்பை அணி பெற்றுள்ளது.

வான்கடே மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா மற்றும் கிரன் பொல்லார்ட் ஆகியோரின் அதிரடியுடன் 170 ஓட்டங்களை குவித்திருந்தது. முக்கியமாக கடைசி 12 பந்துகளில் மும்பை அணி 45 ஓட்டங்களை விளாசியதுடன், பிராவோவின் இறுதி ஓவரில் 29 ஓட்டங்கள் பெறப்பட்டது.

பின்னர், களமிறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தும் வகையில் ஜேசன் பெஹ்ரெண்டொர்ப் மற்றும் லசித் மாலிங்க பந்து வீச, ஹர்திக் பாண்டியா மத்திய வரிசை வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். இறுதியில், 20 ஓவர்கள் துடுப்பெடுத்தாடிய போதும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியால் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் அபாரமாக பந்து வீசிய ஹர்திக் பாண்டியா 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்த, லசித் மாலிங்க 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தநிலையில், நேற்றைய போட்டியில் பந்து வீச்சில் பிரகாசித்திருந்த லசித் மாலிங்க அடுத்த 2 போட்டிகளிலும் விளையாட மாட்டார் என மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்துள்ளது.

இலங்கையில் இன்று ஆரம்பமாகியுள்ள சுப்பர் ப்ரொவின்சியல் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக மாலிங்க, நேற்று போட்டி முடிந்தவுடன் நாடு திரும்பியுள்ளார். உலக்கிண்ணத்துக்கான தயார்படுத்தலாக சுப்பர் ப்ரொவின்சியல் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகின்றது. எனினும், மாலிங்க ஐ.பி.எல். தொடரில் முழுமையாக விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை அனுமதியளித்திருந்தது.

எவ்வாறாயினும், உலகக்கிண்ணத்தை கருத்திற்கொண்டு லசித் மாலிங்க உள்ளூர் போட்டியில் பங்கேற்கும் முகமாக மும்பை இந்தியன்ஸ் அணியிடம் அனுமதி கோரியதுடன், நாடு திரும்பியுள்ளார். இன்று அதிகாலை நாடு திரும்பிய இவர், இன்று கண்டி – பல்லேகலை மைதானத்தில் நடைபெற்று வரும் கண்டி அணிக்கு எதிரான போட்டியில் காலி அணி சார்பாக தற்போது விளையாடி வருகின்றார்.

போட்டி சுருக்கம்

மும்பை இந்தியன்ஸ் – 170/5 (20), சூர்யகுமார் யாதவ் 59 (43), குர்னால் பாண்டியா 42 (52),  ஹர்திக் பாண்டியா 25 (8), கிரன் பொல்லார்ட் 17 (7), ரவீந்திர ஜடேஜா 10/1

சென்னை சுப்பர் கிங்ஸ் – 133/8 (20), கேதர் ஜாதவ் 58 (54), சுரேஷ் ரெய்னா 16 (15), ஹர்திக் பாண்டியா 20/3, லசித் மாலிங்க 34/3, ஜேசன் பெஹ்ரெண்டொர்ப் 22/2

முடிவு – மும்பை இந்தியன்ஸ் அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<