ரங்கன ஹேரத்தின் மறக்க முடியாத போட்டிகள்

101

தென்னாபிரிக்காவுக்கு எதிராக 2011இல் பெற்றுக்கொண்ட வரலாற்று டெஸ்ட் வெற்றி மற்றும் 2014 T20 உலகக் கிண்ண காலிறுதிப் போட்டியில் பெற்றுக் கொண்ட வெற்றிகள் தான் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத போட்டிகளாக அமைந்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார்.  

ThePapare.com  இணையத்தளம் ரங்கன ஹேரத் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோருடன் நேரலை (Live) மூலம் பிரத்தியேக நேர்காணல் ஒன்றை மேற்கொண்டிருந்தது

இந்த நேர்காணலில் ரங்கன ஹேரத்திடம் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத கிரிக்கெட் போட்டி எது? என கேட்கப்பட்டது. இதற்கு அவர் பதிலளிக்கையில்,  

”முதலில் 1999ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுடன் விளையாடிய எனது முதலாவது டெஸ்ட் போட்டியைக் கூறலாம். எந்த விளையாட்டு வீரருக்குமே அவர்களது முதல் போட்டி மறக்க முடியாததாத்தான் இருக்கும். அவுஸ்திரேலியா போன்ற பெரிய அணிக்கு எதிராக விளையாடிய எனது முதலாவது சர்வதேசப் போட்டி மறக்க முடியாத ஒன்றாக உள்ளது

ஹேரத்துக்கு கிரிக்கெட் மறு வாழ்வு கொடுத்த சங்கக்கார

அதேபோல, சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய போட்டியாக 2011இல் தென்னாபிரிக்கா அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரைக் கூறமுடியும்.  

இதன் முதலாவது டெஸ்ட் போட்டியில் நாங்கள் தோல்வியைத் தழுவினோம். டர்பனில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் நாங்கள் வெற்றி பெற்று வரலாறு படைத்தோம்.

இதில் நான் 9 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதினைப் பெற்றுக் கொண்டேன். உண்மையில் அதற்குமுன் நாங்கள் தென்னாபிரிக்காவில் எந்தவொரு டெஸ்ட் போட்டியும் வென்றதில்லை

குறிப்பாக அந்தப் போட்டியில் குமார் சங்கக்கார, திலான் சமரவீர சதங்களைக் குவித்திருந்ததுடன், ஷானக்க வெலகெதர 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர்.  

எனவே, இந்த வரலாற்று வெற்றிக்கு அணியில் உள்ள அனைத்து வீரர்களும் பங்களிப்பு செய்திருந்தனர்.  

இதேநேரம், 2014இல் பங்களாதேஷில் நடைபெற்ற T20 உலக்க கிண்ணப் போட்டியில் நியூஸிலாந்து அணியுடனான ஆட்டத்தில் 3 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை நான் கைப்பற்றி அடுத்த சுற்றுக்குத் தெரிவாகிய போட்டியும் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத போட்டியாக அமைந்தது.   

அதேமாதிரி 2014இல் இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெற்றி கொண்டோம். அஞ்செலோ மெதிவ்ஸ் அபாரமாக விளையாடி (லீட்ஸ் மைதானத்தில்) சதமடித்தார். அவருடன் இணைந்து நான் நல்லதொரு இணைப்பாட்டத்தை செய்திருந்தேன்.  

அத்துடன், 2016இல் அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையில் அவுஸ்திரேலியாவை 3-0 என வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றினோம். அந்தத் தொடரில் நான் தொடர் நாயகன் விருதினை பெற்றுக் கொண்டேன்.  

எனவே அந்தத் தொடரில் நான் வெளிப்படுத்திய திறமைகளும் மறக்க முடியாத போட்டியாக அமைந்திருந்தது” என தெரிவித்தார்.  

இதனிடையே, 2011 உலகக் கிண்ணத்தில் முதல்தடவையாக ரங்கன ஹேரத் இலங்கை அணிக்காக விளையாடியிருந்தார். அந்தப் போட்டித் தொடர் முழுவதும் இலங்கை அணி சிறப்பாக விளையாடியிருந்ததுடன், இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் விளையாடுகின்ற வாய்ப்பையும் பெற்றுக் கொண்டது

இந்த நிலையில், 2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன் ரங்கன ஹேரத் உபாதைக்குள்ளாகினார். அவரது உபாதையானது இலங்கை அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை கொடுத்திருந்தது.

இதனிடையே, 2011 உலகக் கிண்ணத்தில் தோல்வியைத் தழுவியது குறித்து ரங்கன ஹேரத் கருத்து தெரிவிக்கையில்

உண்மையில் 2011இல் தான் நான் முதல்தடவையாக உலகக் கிண்ணப் போட்டியொன்றில் இலங்கை சார்பாக பங்குகொண்டேன். குறிப்பாக அந்தக் காலப்பகுதியில் நான் நிறைய ஒருநாள் போட்டிகளில் விளையாடாவிட்டாலும், தேர்வாளர்கள் உலகக் கிண்ண அணியில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்கள்.

நான் அந்தத் தொடரில் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடவில்லை. பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகளுடன் விளையாடினாலும், துரதிஷ்டவசமாக எனக்கு ஏற்பட்ட உபாதையினால் இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் போனது. உண்மையில உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நாட்டுக்காக விளையாடுவதென்பது மிகப் பெரிய பாக்கியம். ஆனால் எனக்கு விளையாட முடியவில்லை

2014 T20 உலகக் கிண்ண காலிறுதியில் என்ன நடந்தது?

என்னைப் பொறுத்தமட்டில் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனாலும், அன்றைய நாள் எமது அணியைப் போல முழு இலங்கையர்களும் கவலைப்பட்ட நாள். இந்தியாவுடனான தோல்வி மறக்கமுடியாத ஒரு அனுபவமாக இருந்தது

எனினும், இறுதிப் போட்டியில் மஹேல ஜயவர்தன பெற்றுக்கொண்ட சதம் மற்றும் எமது வீரர்கள் சிறப்பாக விளையாடியிருந்தனர்.  

குறிப்பாக, லசித் மாலிங்க சச்சின் டெண்டுலர்கள் மற்றும் சேவாக்கின் விக்கெட்டுக்களை ஆரம்பத்திலேயே வீழ்த்தி நெருக்கடி கொடுத்தார். ஆனாலும், டோனியும், கௌதம் காம்பீரும் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்கள்

எதுஎவ்வாறாயினும், எனக்கு இலங்கை அணிக்காக உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட கிடைத்தமையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்” என தெரிவித்தார்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<