பிரேசிலை வீழ்த்தி மொரோக்கோ வரலாற்று வெற்றி

International Football

143

ஆபிரிக்க நாடான மொரோக்கோ கால்பந்து அணி, ஐந்து முறை பிபா உலகக் கிண்ண சம்பியனான பிரேசிலை வரலாற்றில் முதல் முறையாக வெற்றி கொண்டு உலக கால்பந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளது.

உலகின் முன்னணி கழக மட்ட லீக் போட்டிகளுக்கு இடைவேளை வழங்கப்பட்டு, பல அணிகளும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி வருகின்றன. இந்நிலையில், இலங்கை நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை (26) அதிகாலை மொரோக்கோ மற்றும் உலகின் முன்னணி அணியான பிரேசில் இடையிலான நட்பு ரீதியிலான போட்டி மொரோக்கோவின் IBN Batouta அரங்கில் இடம்பெற்றது.

குறித்த போட்டிக்கு முன்னர், அண்மையில் தனது 82ஆவது வயதில் உயிரிழந்த பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பிலேயிற்கு இரு அணி வீரர்களும் தமது மரியாதையை செலுத்தினர்.

போட்டியின் 29ஆவது நிமிடத்தில் மத்திய கள வீரர் பிலால் கொடுத்த பந்தினால், சோபியான் பொபல் (Sofiane Boufal) மொரோக்கோ அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

பின்னர், 67ஆவது நிமிடத்தில் பிரேசில் அணித் தலைவரும் மென்செஸ்டர் யுனைடட் அணியின் மத்திய கள வீரருமான கசிமிரொ மூலம் போட்டி சமப்படுத்தப்பட்டது. எனினும், மொரோக்கோ அணிக்கு மாற்று வீரராக வந்த அப்துல்ஹமீத் சபிரி, கசிமிரொவின் கோல் பெறப்பட்டு 15 நிமிடங்கள் செல்வதற்குள் தனது அணிக்கான அடுத்த கோலைப் போட்டு, மொரோக்கோ அணியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெறச் செய்தார்.

கடந்த வருடம் கட்டாரில் இடம்பெற்ற பிபா உலகக் கிண்ணத் தொடரில் முன்னணி அணிகளை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த மொரோக்கோ அணியின் இந்த வெற்றியானது, உலக கால்பந்து ரசிகர்களினால் மீண்டும் அதிகம்  பேசப்படும் ஒரு விடயமாக மாறியுள்ளது.

மொரோக்கோ வீரர்கள் 2022 உலகக் கிண்ணத்தில் 16 அணிகள் சுற்றில் முன்னாள் உலக சம்பியன் ஸ்பெயினை பெனால்டியில் வீழ்த்தியதுடன், காலிறுதியில் ரொனால்டோவின் போர்த்துக்கல் அணியை 1-0 என வெற்றி கொண்டு, கால்பந்து உலகக் கிண்ண வரலாற்றில் முதலாவது ஆபிரிக்க அணியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

அதேபோன்று, அவ்வணி உலகக் கிண்ணத்தில் குழு F இற்கான போட்டியொன்றில் பெல்ஜியம் அணியையும் 2-0 என வெற்றி கொண்டு, கடந்த உலகக் கிண்ணத்தில் அனைத்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்த அணியாகவும் இருந்தது. இந்நிலையிலே தற்போது பிரேசில் அணியையும் வீழ்த்தி தம் பெயரை மீண்டும் உலகிற்கு நினைவூட்டியுள்ளது.

எனினும், இறுதி 8 அணிகளுடன் உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியதை அடுத்து பிரேசில் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் டைட் தனது பதவியை ராஜினாமா செய்தமையினால், இடைக்கால பயிற்றுவிப்பாளர் Ramon Menezes  இன் பயிற்றுவிப்பிலுயே பிரேசில் அணி மொரோக்கோவிடனான இந்தப் போட்டியில் விளையாடியது.

மேலும், உலகக் கிண்ண குழாத்தில் இருந்து 23 வீரர்களில் வெறும் 10 வீரர்கள் மாத்திரமே இந்தப் போட்டியில் விளையாடியமை சுட்டிக்காட்டத்தக்கது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<