T20 உலகக் கிண்ணத்திலிருந்து விலகினார் மொஹமட் ஷமி

BCCI

58

கணுக்கால் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் ஷமி, ஜுன் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எவ்வாறாயினும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடக்கூடும் என பிசிசிஐ செயலாளார் ஜெய்ஷா கூறியுள்ளார். 

இதனிடையே, விபத்தில் சிக்கி படுகாயமடைந்து கடந்த ஓராண்டுக்கு கூடுதலாக ஓய்வில் இருந்த இந்திய அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ரிஷப் பாண்ட், இம்முறை ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டால் அவர் நிச்சயம் T20 உலகக் கிண்ணத் தொடருக்கான அணித் தேர்வில் இருப்பார் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மேலும் தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் இம்மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இத்தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பை பெறுவார்கள் என்பதால், இத்தொடர் மீது அதிக கவனம் பெற்றுள்ளது. 

இந்த நிலையில், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் ஷமி நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் போது காயமடைந்த ஷமி, அதன்பின் நடைபெற்ற அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் நடைபெற்ற தொடர்களை தவறவிட்டார்அதேபோல, அண்மையில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்தும் அவர் விலகினார் 

இருப்பினும், அவர் ஐபிஎல் தொடருக்கு முன் முழு உடற்தகுதியை எட்டி மீண்டும் களமிறங்குவார்  என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மொஹமட் ஷமி இங்கிலாந்து சென்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால் நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார். இந்த நிலையில், இந்தாண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து மொஹமட் ஷமி விலகியுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், ‘செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் மொஹமட் ஷமி இந்திய அணியில் இணைவார்என தெரிவித்தார். இதன் மூலம் T20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து மொஹமட் ஷமி விலகியது உறுதியாகியுள்ளது 

T20 உலகக் கிண்ணத்; தொடரில் இருந்து மொஹமட் ஷமி விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 7 போட்டிகளில் மட்டுமே விளையாடிய மொஹமட் ஷமி 24 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தினார் 

இந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வீதி விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரிஷப் பாண்ட், அந்த விபத்தில் அடைந்த காயம் காரணமாக கடந்த ஓராண்டாக சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி எந்தவொரு போட்டிகளிலும் பங்கேற்று விளையாடாமல் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதனிடையே, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு ரிஷப் பாண்ட்டிற்கு தேசிய கிரிக்கெட் அகடமி அனுமதி வழங்கியுள்ளது. அண்மையில் அவருக்கு மேற்கொள்ளபட்ட பரிசோதனையின் முடிவில், ரிஷப் பாண்ட் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான உடற்தகுதியை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் நடப்பு ஐபிஎல் சீசனில் ஒரு துடுப்பாட்ட வீரராக மட்டுமே விளையாட வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.   

அவர் கடந்த சில மாதங்களாக விக்கெட் காப்பு பயிற்சிகளை செய்து வந்தாலும், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை ஒரு துடுப்பாட்ட வீரராக மட்டும் பயன்படுத்துமாறு தேசிய கிரிக்கெட் அகடமி கூறியதாக தகவல் வெளியாகியனது. இந்த நிலையில், ரிஷப் பாண்ட்டால் விக்கெட் காப்பு செய்ய முடியும் என்றால் இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடரிலும் அவர் விளையாட வாய்ப்புள்ளது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார் 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<