சிதத் வெத்தமுனியின் சகோதரர்களில் ஒருவர் மரணம்

256

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சிதத் வெத்தமுனியின் மூத்த சகோதரர்களில் ஒருவரான மித்ர வெத்தமுனி தனது 67ஆவது அகவையில் வைத்து நேற்று (19) காலமடைந்திருக்கின்றார்.

மூன்று அங்கத்தவர்களை கொண்ட வெத்தமுனி சகோதரர்கள் குழுவில் வயது அடிப்படையில் இரண்டாவது நபராக இருக்கும் மித்ர வெத்தமுனி, தனது ஏனைய இரண்டு சகோதரர்கள் போன்றும் இலங்கை கிரிக்கெட் அணியினை சர்வதேசப் போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக பிரதிநிதித்துவம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணிக்கு எதிராக 1983 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்ட மித்ர வெத்தமுனி இலங்கை அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், ஒரு ஒரு நாள் போட்டியிலும் விளையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

>>அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலிருந்து நுவன் பிரதீப் நீக்கம்

இலங்கை அணிக்கான அறிமுகத்தினைப் பெற முன்னர் மித்ர வெத்தமுனி 1970 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் உள்ளுர் முதல்தரப் போட்டிகளிலும் சிறந்த வீரராக செயற்பட்டதோடு, கொழும்பு ஆனந்த கல்லூரியினுடைய கிரிக்கெட் அணியின்  தலைவராகவும் செயற்பட்டிருக்கின்றார்.

மித்ர வெத்தமுனியின் பூதவுடல் தற்போது இல. 48, எலிபேங் வீதி, கொழும்பு – 05 என்னும் முகவரியில் வைக்கப்பட்டிருப்பதோடு, இறுதிக் கிரியைகள் நாளை பொரல்லை பொது மயான பூமியில் பிற்பகல் மூன்று மணியளவில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மித்ர வெத்தமுனி அவர்களின் இழப்பிற்கு ThePapare.com, அதனது ஆழ்ந்த இரங்கல்களை அவரின் குடும்பத்தினருக்கு தெரிவித்துக்கொள்கின்றது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<