இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மிதாலி ராஜ் புதிய சாதனை

497

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவியும் துடுப்பாட்ட வீராங்கனையுமான மிதாலி ராஜ், நேற்று (1) இடம்பெற்ற நியூசிலாந்து மகளிர் அணியுடனான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் விளையாடியதன் மூலம், கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் 200 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய முதல் வீராங்கனையாக சாதனை படைத்திருக்கின்றார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அண்மைக்காலமாக பல சாதனைகள் புரிய முக்கிய காரணமாக இருந்த மிதாலி ராஜ், மகளிர் ஒரு நாள் போட்டிகளில்  இதுவரையில் 51.33 என்கிற சராசரியுடன் 6,662 ஓட்டங்களை குவித்திருப்பதோடு மகளிர் ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீராங்கனையாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்கா சென்ற இலங்கை மகளிர் முதல் போட்டியில் தோல்வி

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தென்னாபிரிக்க மகளிர்…

அதோடு இந்திய அணிக்காக 1999ஆம் ஆண்டு அறிமுகமாகிய மிதாலி ராஜ், இந்திய மகளிர் அணி இதுவரையில் ஆடிய 263 மகளிர் ஒரு  நாள் போட்டிகளில் 200 போட்டிகளில் விளையாடியிருக்கின்றார்.

தான் இதுவரையில் விளையாடிய ஒரு நாள் போட்டிகளில் 7 சதங்களை விளாசியிருக்கும் மிதாலி ராஜ், சச்சின் டெண்டுல்கர், சனத் ஜயசூரிய மற்றும் ஜாவேட் மியன்டாட் போன்ற பிரபல கிரிக்கெட் வீரர்களுக்குப் பின்னர் நீண்ட காலம் சர்வதேச போட்டிகளில் ஆடிய நபராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், தற்போது நியூசிலாந்து சென்றிருக்கும் இந்திய மகளிர் அணி, நியூசிலாந்து மகளிர் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரினை 2-0 எனக் கைப்பற்றவும் மிதாலி ராஜ் குறித்த தொடரின் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் அபார அரைச்சதம் (63) ஒன்றினை பெற்று உதவியிருந்தார்.

36 வயதாகும் மிதாலி ராஜ் ஒரு நாள் போட்டிகள் தவிர்த்து இந்திய மகளிர் அணிக்காக 85 T20 போட்டிகளிலும், 10 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

  >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<