அவுஸ்திரேலிய அணியிலிருந்து விலகும் மிட்செல் மார்ஷ்

134

கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜிம்பாப்பே அணிக்கெதிரான ஒருநாள் தொடர் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் மிட்செல் மார்ஷ் விலகியுள்ளார்.

அவருக்குப் பதிலாக விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ஜோஷ் இங்கிலிஸ் அவுஸ்திரேலிய அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளாலும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகளாலும் வெற்றியீட்டிய அவுஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.

இந்தநிலையில், ஜிம்பாப்வே அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியின் போது அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் மிட்செல் மார்ஷிற்கு காயம் ஏற்பட்டத்து. அவரது காயம் தீவிரமடைந்துள்ளதால், ஜிம்பாப்வேவுடனான தொடரிலிருந்து விலகுவதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அதேபோல, ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடர் நிறைவடைந்த பிறகு நடைபெறவுள்ள நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலும் அவர் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மிட்செல் மார்ஷிற்கு மாற்று வீரராக ஜோஷ் இங்கிலிஷ் எஞ்சிய ஒருநாள் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அடுத்த மாதம் இந்திய அணிக்கு எதிரான T20 சுற்றுப் பயணத்தில் மிட்செல் மார்ஷ் விளையாடவுள்ளார். அதனைத் தொடர்ந்து நடைபெறுகின்ற T20 உலகக் கிண்ணத் தொடரை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தை முதல் முறையாக அவுஸ்திரேலிய அணி வென்றது. இந்த வெற்றியில் மிட்செல் மார்ஷின் பங்களிப்பு முக்கிய இடம் வகித்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<