பாக். பயிற்சியாளர் மிஸ்பா, வக்கார் யூனிஸ் திடீர் இராஜினாமா

1635

T20 உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் அந்த அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர்.

தங்களின் பதவி விலகல் முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு இன்று காலை முறைப்படி அறிவித்துவிட்டுத் தமது முடிவை உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டார்கள்.

T20 உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

அடுத்த மாதம் T20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், மிஸ்பா உல் ஹக், வக்கார் யூனிஸ் ஆகிய இருவரினதும் பதவி விலகலானது கிரிக்கெட் உலகில் மிகப் பெரிய பேசும்பொருளாக மாறிவிட்டது.

நியூசிலாந்து அணி எதிர்வரும் 11ஆம் திகதி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், T20 தொடர்களில் விளையாட உள்ளது. இதற்காக பாகிஸ்தான் அணி எதிர்வரும் 8ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் ஒன்றுகூட உள்ளது

இந்த நிலையில், பாகிஸ்தான் அணி இன்று T20 உலகக் கிண்ணத்துக்கான அணி விபரத்தை வெளியிட்டது. ஆனால் பாகிஸ்தான் அறிவிக்கப்பட்ட 2 மணி நேரத்திற்குள் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பந்துவீச்சுப் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும் தங்களது பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் தலைமைப் பயிற்சியாளர்களாக மிஸ்பாவும், பந்துவீச்சுப் பயிற்சியாளராக வக்கார் யூனிஸும் நியமிக்கப்பட்டனர். இருவரின் பதவிக் காலம் முடிய இன்னும் ஓராண்டு காலம் இருக்கும்போதே விலகியுள்ளனர்.

ICC இன் ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் விருதுக்கான பெயர்கள் அறிவிப்பு

இதேவேளை, பயிற்சியாளர் பதவியை இராஜினாமா செய்தது குறித்து மிஸ்பா உல் ஹக் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்

“கடந்த 2 வருடங்களாக பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளேன். இதில் நீண்ட நாட்கள் எனது குடும்பத்தினரை பிரிந்து உயிரியல் பாதுகாப்பு வலயத்திலேயே இருந்துள்ளேன். எனவே ஓய்வு வேண்டும் என்பதற்காக நான் பதவி விலகுகிறேன். T20 உலகக் கிண்ணத் தொடர் வரும் இந்த நேரத்தில் பதவி விலகுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் தான்

இருப்பினும் புதிதாக ஒருவர் பதவியேற்று அணியை வழிநடத்தினால் நன்றாக இருக்கும். கடந்த 2 வருடங்களும் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். இனிவரும் தொடர்களில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, வக்கார் யூனிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிஸ்பா தனது முடிவு குறித்து என்னிடம் பகிர்ந்துக்கொண்டார். நானும் அவரும் ஒன்றாக தான் பணியாற்ற வந்தோம். 2 வருடங்கள் ஒன்றாக செயல்பட்டோம். எனவே பதவி விலகும் போதும் ஒன்றாக விலக வேண்டும் என நினைக்கிறேன். கடந்த 16 மாதங்கள் நாங்கள் உயிரியல் பாதுகாப்பு வலய சூழலிலே இருந்துள்ளோம். இதுதான் எங்களுக்கு கடும் அழுத்தத்தை கொடுத்துவிட்டது. ஆனால் வீரர்கள் சோர்ந்துவிடாமல், அடுத்துவரும் தொடர்களில் வெற்றி பெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

T20 உலகக் கிண்ணத்திலிருந்து தமிம் இக்பால் திடீர் விலகல்

இதனிடையே, இம்மாதம் நடைபெறவுள்ள நியூசிலாந்து தொடர், அதன்பிறகு நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான T20 தொடர் ஆகியவற்றுக்கு பாகிஸ்தான் அணியின் இடைக்காலப் பயிற்சியாளராக சக்லைன் முஷ்டாக்கையும், அப்துல் ரசாக்கையும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<