பாக். கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகும் மைக் ஹெஸன்

Pakistan Cricket

20

பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் T20I அணிகளின் தலைமைப் பயிற்சியாளராக நியூசிலாந்தைச் சேர்ந்த மைக் ஹெஸன் நியமிக்கப்பட்டுள்ளார்.  

கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அந்த அணியின் பயிற்சியாளர்களை தொடர்ச்சியாக மாற்றி வருகிறது. இந்த நிலையில், குறித்த பதவிக்கு நான்கு வெளிநாட்டினர் உட்பட மொத்தம் ஏழு பேர் விண்ணப்பித்திருந்தனர். இறுதியில் பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் T20I அணியின் தலைமைப் பயிற்சியாளராக மைக் ஹெசனைக் நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

பங்காளதேஷ் அணிக்கு எதிராக இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள 5 போட்டிகளைக் கொண்ட T20I தொடரில் இருந்து இவர் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட உள்ளார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. 

இதனிடையே, பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் T20I அணிகளின் தலைமைப் பயிற்சியாளராக மைக் ஹெஸன் நியமிக்கப்பட்டமை தொடர்பில் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தலைவர் நக்வி கூறியதாவது, பாகிஸ்தானின் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவரது நிபுணத்துவத்தையும், தலைமையையும் நாங்கள் எதிர்நோக்குகிறோம் என்று கூறினார். 

அண்மைக்காலமாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சறுக்கலை சந்தித்து வரும் பாகிஸ்தான் அணி, இவரது பயிற்றுவிப்பின் கீழ் வெற்றிப்பாதைக்கு திரும்பும் என்று கருதப்படுகிறது. 

50 வயதான மைக் ஹெஸன் ஏற்கனவே 2012 முதல் 2018 வரை நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்துள்ளார். அத்துடன் 2019 முதல் 2023 வரையான காலப்பகுதியில் ஐபிஎல் தொடரில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். 

ஹெசன் தற்போது பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் நடப்புச் சம்பியனான இஸ்லாமாபாத் யுனைடெட்டின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். 

கடந்த 2023ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் அணியின் ஐந்தாவது வெளிநாட்டு தலைமைப் பயிற்சியாளராக மைக் ஹெஸன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முன்பாக, கிராண்ட் பிராட்பர்ன், மிக்கி ஆர்தர் மற்றும் சைமன் ஹெல்மட் ஆகியோர் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்களாக செயல்பட்டுள்ளனர். 

இறுதியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கேரி கிர்ஸ்டன், கில்லஸ்பி உள்ளிட்டோர் சில நாட்களிலேயே தமது பதவியில் இருந்து விலகிய நிலையில், அந்த அணியின் இடைக்காலப் பயிற்சியாளராக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவித் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<