9ஆவது ஐ.பி.எல் கிரிக்கட் போட்டித் தொடரின் 37ஆவது போட்டி இன்று மாலை டாக்டர்  ராஜசேகர ரெட்டி கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரயிசஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா முதலில் சன் ரயிசஸ் ஹைதராபாத் அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்புவிடுத்தார்.

இதன்படி ஹைதராபாத் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக டேவிட் வோர்னரும்  சீகர் தவானும் களமிறங்கினார்கள். இது வரையிலான ஆட்டங்களில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்த இந்த ஜோடி இப்போட்டியிலும் அசத்தலாக விளையாடி முதல் விக்கட்டுக்கு 85 ஓட்டங்களைக் குவித்தது. அதன் பின் வோர்னர் 33 பந்துகளில் 48 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

வரலாற்றில் இன்று : மே மாதம் 08

அவரின் விக்கட்டைத் தொடர்ந்து களம் புகுந்த  கேன் வில்லியம்சன் 2 ஓட்டங்களோடு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனை அடுத்து தனது 100-வது போட்டியில் விளையாடும் யுவராஜ் சிங் களமிறங்கினார். தவான்-யுவராஜ் ஜோடி மும்பை பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து ஓட்டங்களைக் குவித்தனர். அதிரடியாக ஆடி  23 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பெற்ற யுவராஜ் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடித்த நிலையில் 20-வது ஓவரில் தவறுதலாக மட்டையால் விக்கட்டை அடித்து ஹிட் விக்கட் முறையில் ஆட்டமிழந்தார். தவான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 57 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 87 ஓட்டங்களைக் குவித்தார். இறுதியில் சன் ரயிசஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கட்டுகளை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றது. மும்பை அணியின் சார்பாகப் பந்துவீச்சில் ஹர்பஜன் சிங் இரண்டு விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு 178 என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த மும்பை இந்தியன்ஸ் அணி முதல் ஓவர் தொடக்கமே விக்கட்டுகளை இழந்து பெரும் நெருக்கடிக்கு உள்ளானது.  தொடர்ந்தும் குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கட்டுகளை இழந்து 16.3 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 92 ஓட்டங்களுக்கு சுருண்டது. மும்பை அணி சார்பில் அதிக பட்ச ஓட்டமாக ஹர்பஜன் சிங் ஆட்டம் இழக்காமல் 21 ஓட்டங்களைப் பெற்றார். சன் ரயிசஸ் ஹைதராபாத் அணியின் சார்பாகப் பந்து வீச்சில் அஷிஷ் நெஹ்ரா மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை வீழ்த்தினர். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக அஷிஷ் நெஹ்ரா தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்