மெஸ்ஸிக்கு முதல் கிண்ணத்தையும் நெய்மாருக்கு கண்ணீரையும் கொடுத்த போட்டி

3004
Getty
 

கோபா அமெரிக்கா 2021 கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றதன் மூலம் உலகின் முன்னணி வீரராக கருதப்படும் லியொனல் மெஸ்ஸி தனது சர்வதேச போட்டிகளில் முதலாவது கிண்ணத்தை கைப்பற்றியுள்ளார். 

பிரேசில் மற்றும் அர்ஜென்டினா அணிகள், அரையிறுதிப் போட்டிகளில் முறையே பெரு மற்றும் கொலம்பியா அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன. பிரேசிலின்  ரியோ மார்க்கான அரங்கில் மிகவும் விறுவிறுப்பாக நடந்த இறுதிப் போட்டியில், இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டன.  

PSG அணியுடன் இணைகிறார் ராமோஸ்

போட்டியின் 22ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா  அணியின் மத்தியகள வீரரான ரொட்ரிகோ டி போல் தந்த தூர பந்தை ஏன்ஜெல் டி மரியா எதிரணியின் கோல் கம்பத்திற்குள் புகுத்தினார்.

இதன்பின்னர் பதில் கோலடிக்கும் எண்ணத்தில் ஆக்ரோசமாக ஆடிய நடப்புச் சம்பியன் பிரேசில் அணியின் 13 கோலடிக்கும் உதைகளில்  2 உதைகளே கோலை நோக்கி சென்றன. போட்டியின் 90 நிமிடங்களில் கிட்டத்தட்ட 60% பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் பிரேசில் அணி வைத்திருந்தாலும், அவர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. 

எனினும், 53 ஆவது நிமிடத்தில் பிரேசில் அணியின் றிசார்லிஸ்ஸன் அடித்த கோல் ஒன்று OFF-SIDE காரணமாக நிராகரிக்கப்பட்டது. எனவே, போட்டி நிறைவில் அர்ஜென்டினா  அணி தமது 15ஆவது கோபா அமெரிக்கா கிண்ணத்தை கைப்பற்றியது.

கடந்த 2019 இல் பிரேசில் அணி கோபா அமெரிக்கா கிண்ணத் தொடரை வெல்லும் போது, உபாதை காரணமாக இறுதிப் போட்டியில் விளையாட முடியாது போன நெய்மர், இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய போதும் பிரேசில் அணியால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் போட்டி நிறைவு பெற்றவுடன் அவர் கீழே விழுந்து அழுத காட்சிகள் கெமெராக்களில் பதிவாகின. 

கட்டாருடன் A குழுவில் இலங்கை 23 வயதின்கீழ் கால்பந்து அணி

கடந்த 2005இல் அர்ஜென்டினா அணிக்கு மெஸ்ஸி அறிமுகமாகியதிலிருந்து  அர்ஜென்டினா  அணி மிகப்பெரும் தொடரொன்றில் பெறும் முதலாவது கிண்ணம் இதுவாகும். 

அடுத்த இடம்பெறவுள்ள 2024 கோபா அமெரிக்கா தொடர் விளையாடும் போது 37 வயதை தாண்டவுள்ள மெஸ்ஸிக்கு, தான் விளையாடிய இறுதி கோபா அமெரிக்கா தொடராக இது பார்க்கப்பட்டது. 

இந்த தொடரில் அதிக கோல்களையும் (4), அதிக பந்து பரிமாற்றங்களையும் (5) வழங்கிய மெஸ்ஸி, இந்த தொடரின் சிறந்த வீரர் மற்றும் அதிக கோல் பெற்ற வீரர் என்பவற்றுக்கான விருதுகளைப் பெற்றார். 

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<