வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான A பிரிவு சம்பியனாக எக்ஸ்போ லங்கா

906

நீண்ட இடைவெளியின் பின்னர் ஆரம்பமாகி, மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான கால்பந்து தொடரின் 2017ஆண்டுக்கான போட்டிகளில், எல். பி பினான்ஸ் அணியை 1-0 என வீழ்த்தியதன்மூலம் A பிரிவு சம்பியனாக எக்ஸ்போ லங்கா நிறுவன அணி தெரிவாகியுள்ளது.

ஏற்கனவே இடம்பெற்று முடிந்த போட்டிகளின் முடிவுகளின்படி, இந்தப் பிரிவில் அங்கம் வகித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அணியை 6-2 என்ற கோல்கள் கணக்கில் எக்ஸ்போ லங்கா அணியும், 4-2 என்ற கோல்கள் கணக்கில் எல்.பி பினான்ஸ் அணியும் வெற்றி கொண்டிருந்தன.  

குழு மட்டத்தில் முன்னிலையில் உள்ள எக்ஸ்ப்போ லங்கா, HNB நிறுவனங்கள்

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான கால்பந்து லீக் தொடரின் மூன்றாம் வாரப் போட்டிகளின் முடிவுகளின்..

எனவே, A பிரிவு சம்பியனாக வருவதற்கு எல்.பி பினான்ஸ் அணியுடனான போட்டியை சமநிலையில் முடித்தால் போதும் என்ற நிலை எக்ஸ்போ லாங்காவுக்கு இருந்தது. எனினும் எல்.பி பினான்ஸ் அணி சம்பியனாவதற்கு கட்டாயம் வெற்றி தேவைப்பட்டது.

இந்நிலையில், களனிய கால்பந்து மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில், எல்.பி பினான்ஸ் அணி சார்பாக விளையாடிய வீரர்கள், இலங்கையின் மிகப் பெரிய தொடரான டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் ரினௌன், ஜாவா லேன், சுப்பர் சன் மற்றும் புளு ஸ்டார் அணிகளில் விளையாடிய வீரர்களாக இருந்தனர். மறு முனையில் கொழும்புக் கால்பந்துக் கழகம் சார்பாக விளையாடும் 7 வீரர்கள் எக்ஸ்போ லங்கா அணிக்காக விளையாடினர்.

ஆட்டத்தின் ஆரம்பத்தில் எல்.பி பினான்ஸ் அணியின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. எதிரணியின் கோல் பரப்பை ஆக்கிரமித்த அவர்கள், அதிகமான கோல் வாய்ப்புக்களைப் பெற்றும், அவற்றை இறுதி நேரத்தில் கோட்டை விட்டனர்.

குறிப்பாக முன்கள வீரர்களான சப்ராஸ் கைஸ் மற்றும் அப்துல்லாஹ் ஆகியோர் அழகான வாய்ப்புக்கள் பலவற்றைப் பெற்றும் அவற்றை கோல்களாக நிறைவு செய்யவில்லை.

அது போன்றே மத்திய களத்தில் இருந்து செயற்பட்ட ரிஸ்கான் மற்றும் இளம் வீரர் முஜீப் ஆகியோரும் தமக்கு கிடைத்த வாய்ப்புக்களின்போது சிறந்த நிறைவை மேற்கொள்ளவில்லை.

எதிர் தரப்பான எக்ஸ்போ லங்கா அணிக்காக, தேசிய அணி வீரர் சர்வான் ஜோஹர், மத்திய களத்தில் இருந்து சிறந்த முறையில் நீண்ட தூரப் பந்துப் பரிமாற்றங்களை வழங்கிய போதும், ஏனைய வீரர்களால் அவை திறன்படப் பெற்றுக்கொள்ளப்படவில்லை.

முதல் பாதி: எல். பி பினான்ஸ் 0 – 0 எக்ஸ்போ லங்கா

பின்னர் ஆரம்பமாகிய இரண்டாவது பாதியில் முதல் பாதி போல் இன்றி தமது ஆதிக்கத்தையும் அதிகரித்தது எக்ஸ்போ லங்கா அணி. அவ்வணி வீரர்கள் கவுன்டர் அட்டாக் மூலம் ஆடி, எதிரணிக்கு அழுத்தம் கொடுத்தனர்.

அவ்வணி வீரர் நிரான் கனிஷ்க, தனது ஏனைய வீரர்களுக்கு சிறந்த பங்களிப்பு வழங்கும் வகையில் மைதானத்தில் அனைத்து பகுதிகளிலும் ஓடி விளையாடினார். தனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புக்களின் மூலமும் அவர், சக வீரர்களுக்கான வாய்ப்புக்களை தன்னால் இயன்ற அளவு ஏற்படுத்திக் கொடுத்தார்.

டொக்யார்ட், சம்பத் வங்கி, யூனியன் வங்கி மற்றும் எல்.பி பினான்ஸ் அணிகள் முன்னிலையில்

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான கால்பந்து லீக்கின் மூன்றாம் வாரப்போட்டிகளின்…

போட்டியில் எக்ஸ்போ லங்கா அணிக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாக ரௌமி மொஹமட் பெற்ற ப்ரீ கிக் வாய்ப்பை குறிப்பிடலாம். இதன்போது, வேகமாக செயற்பட்ட அவர், பந்தை சர்வானுக்கு வழங்க, சர்வான் எதிரணி கோல் காப்பாளர் சதீஷ் குமாரை தாண்டி பந்தை எடுத்து ஆட்டத்தின் முதல் கோலைப் பெற்றார்.

அதன் பின்னரும் சர்வானுக்கு கோல் பெறுவதற்கான இரண்டு வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்தும், அவர் அதன்மூலம் பயன்பெறவில்லை.

ஆட்டத்தின் இறுதி நேரத்தில் எல். பி பினான்ஸ் அணியின் இளம் வீரர் நவீன் ஜுட்டின் கால்களுக்கு பந்து வந்த நிலையில், அது அவ்வணிக்கு கோல் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. எனினும், அதன்போது நடுவர் தரங்க புஷ்பகுமார போட்டி நிறைவு பெறுவதற்கான சைகையைக் காண்பித்தார்.

இதன் காரணமாக, சர்வான் பெற்றுக்கொடுத்த கோலின் உதவியுடன் எக்ஸ்போ லங்கா அணி, பிரபல வீரர்கள் பலர் விளையாடிய எல்.பி பினான்ஸ் அணியை வீழ்த்தி, சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டது.

முழு நேரம்: எல். பி பினான்ஸ் 0 – 1 எக்ஸ்போ லங்கா

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – நிரான் கனிஷ்க (எக்ஸ்போ லங்கா)