மெர்க்கன்டைல் கிரிக்கட் தொடரில் இன்றைய தினத்தில் 2 போட்டிகள் நடைபெற்றன. இதில் ஜோன் கீல்ஸ் மற்றும் மாஸ் ஆகிய அணிகள் வெற்றியைப் பதிவு செய்தன.

சம்பத் வங்கி எதிர் மாஸ் யுனிச்செலா

சம்பத் வங்கி மற்றும் மாஸ் யுனிச்செலா அணிகளுக்கு இடையிலான போட்டி கட்டுநாயக்க FTZ மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சம்பத் வங்கி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.

போட்டி நடுவர்கள் : சுசந்த திசாநாயக்க / தீபால் குணவர்தன

போட்டி மத்தியஸ்தர் : பெசில் பெரேரா

இதன்படி முதலில் ஆடிய சம்பத் வங்கி அணி நிர்ணயம் செய்யப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 253 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஜீவன் மெண்டிஸ் 80 ஓட்டங்களையும், ஹஸந்த பெர்னாண்டோ 37 ஓட்டங்களையும், சமிக கருணாரத்ன 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

மாஸ் யுனிச்செலா அணியின் பந்து வீச்சில் டில்ருவான் பெரேரா மற்றும் மலிங்க பண்டார ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை தம்மிடையே பங்கு போட்டனர்.

பின்னர் 237 என்ற வெற்றி இலக்கை நோக்கி மாஸ் யுனிச்செலா அணியினர் துடுப்பெடுத்தாடி 40.5 ஓவர்களில் 7 விக்கட்டுகள் இழப்பிற்கு 236 ஓட்டங்களைப் பெற்ற வேளையில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டியின் முடிவு டக்வத் மற்றும் லுவிஸ் விதிமுறைக்கு உட்படுத்தப்பட்டது.

அதன்படி மாஸ் யுனிச்செலா அணியினர் 26 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர். மாஸ் யுனிச்செலா அணி சார்பில் தனுஷ்க குணதிலக அபாரமாக ஆடி 109 ஓட்டங்களையும், அண்மையில் சர்வதேச கிரிக்கட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்ற திலகரத்ன டில்ஷான் 52 ஓட்டங்களையும் பெற்றனர்.

சம்பத் வங்கி அணியின் பந்து வீச்சில் கசுன் ரஜித மற்றும் ஜீவன் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

சம்பத் வங்கி – 253/9 (50)

ஜீவன் மெண்டிஸ் 80, ஹஸந்த பெர்னாண்டோ 37, சமிக கருணாரத்ன 26

டில்ருவான் பெரேரா 49/3, மலிங்க பண்டார 55/3

மாஸ் யுனிச்செலா – 236/7 (40.5)

தனுஷ்க குணதிலக 109, திலகரத்ன டில்ஷான் 52

ஜீவன் மெண்டிஸ் 40/2, கசுன் ரஜித 38/2

டக்வத் மற்றும் லுவிஸ் முறையில் மாஸ் யுனிச்செலா அணி 26 ஓட்டங்களால் வெற்றி


ஹட்டன் நெஷனல் வங்கி எதிர் ஜோன் கீல்ஸ்

மெர்க்கன்டைல் கிரிக்கட் தொடரின் டிவிஷன்பிரிவின் 11ஆவது போட்டி இன்று சரே விலேஜ் மைதானத்தில் இடம்பெற்றது.

இந்தப் போட்டியில் ஹட்டன் நெஷனல் வங்கி மற்றும் ஜோன் கீல்ஸ் ஆகிய அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜோன் கீல்ஸ் அணி முதலில் ஹட்டன் நெஷனல் வங்கி அணியை துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தது.

போட்டி நடுவர்கள் : ரவீந்திர விமலசிறி / சந்திக அமரசிங்ஹ

போட்டி மத்தியஸ்தர் : மஹேஷ் ஜயசேகர

அழைப்பை ஏற்று முதலில் ஆடிய ஹட்டன் நெஷனல் வங்கி அணி 47.3 ஓவர்களில் 158 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது. இந்த அணி சார்பாக யோஹான் பெர்னாண்டோ 38 ஓட்டங்களையும், ஹசான் குணதிலக 20 ஓட்டங்களையும் பெற்றனர். ஜோன் கீல்ஸ் அணியின் பந்து வீச்சில் விக்கும் பண்டார 4 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

பின்பு 159 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய ஜோன் கீல்ஸ் அணியினர் மிகவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 17.1 ஓவர்களில் 2 விக்கட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்த அணி சார்பாக வளர்ந்து வரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் லஹிரு மிலந்த ஆட்டம் இழக்காமல் 84 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 40 ஓட்டங்களையும், ரொஷேன் சில்வா 27 ஓட்டங்களையும் பெற்றனர்.

போட்டியின் சுருக்கம்

ஹட்டன் நெஷனல் வங்கி – 158/10 (47.3)

யோஹான் பெர்னாண்டோ 38, ஹசான் குணதிலக 20

விக்கும் பண்டார 21/4

ஜோன் கீல்ஸ் – 162/2 (17.1)

லஹிரு மிலந்த 84*, திமுத் கருணாரத்ன 40, ரொஷேன் சில்வா 27

ஜோன் கீல்ஸ் அணி 8 விக்கட்டுகளால் வெற்றி