உபாதைக்குப் பிறகு மீண்டும் களமிறங்குகிறார் மெதிவ்ஸ்

1050

இலங்கை கிரிக்கெட் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளின் தலைவரான அஞ்செலோ மெதிவ்ஸ், மீண்டும் முதல்ரப் போட்டிகளில் களமிறங்கவுள்ளார்.

பின்தொடை எலும்பு பகுதியில் ஏற்பட்டிருக்கும் வலி, கெண்டைக் கால் மற்றும் கணுக்கால் காயங்களால் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்த அஞ்செலோ மெதிவ்ஸ் கடந்த 4 மாதங்களாக முக்கியமான போட்டித் தொடர்களில் இருந்து விலகியிருந்ததுடன், இலங்கை அணியின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்ட பிறகு இவ்வருடத்தில் ஒரேயொரு போட்டியில் மாத்திரம் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இதன் பிறகு அஞ்செலோ மெதிவ்ஸ் பந்துவீச மாட்டார்

இலங்கை கிரிக்கெட் அணியின் ஒரு நாள் மற்றும் T20 போட்டிகளுக்கான தலைவரான …

எனினும், இலங்கை அணியில் அடிக்கடி உபாதக்குள்ளாகின்ற முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்து வருகின்ற மெதிவ்ஸ், கடந்த வருட முற்பகுதியில் தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தின்போது ஏற்பட்ட காயத்தால் உடனே நாடு திரும்பினார்.

இதனைத் தொடர்ந்து ஐந்து மாதங்கள் ஓய்விலிருந்த அவர் இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண தொடரில் மீண்டும் அணிக்குத் திரும்பினார். அப்போது அவர் சிறப்புத் துடுப்பாட்ட வீரராக மாத்திரமே போட்டிகளில் பங்கேற்றிருந்தார்.

இதனையடுத்து கடந்த செப்டெம்பரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஐக்கிய அரபு இராச்சிய சுற்றுப் பயணத்தை ஒட்டி இடம்பெற்ற பயிற்சியின்போது மெதிவ்ஸின் கெண்டைக் கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து எட்டு வாரங்கள் போட்டிகளில் இருந்து விலகியிருந்த அவர் கடந்த வருட இறுதியில் நடைபெற்ற இந்திய சுற்றுப்பயணத்திலேயே மீண்டும் அணியில் இணைந்தார்.

எனினும், இந்தியாவுடனான இரண்டாவது T-20 போட்டியில் அஞ்செலோ மெதிவ்ஸின் பின்தொடைப் பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக, அவருக்கு மீண்டும் நாடு திரும்ப வேண்டி ஏற்பட்டது. அத்துடன், அவருக்கு சுமார் இரண்டு வாரங்கள் போட்டிகளில் இருந்து விலகியிருக்கவும் நேர்ந்தது.

இந்நிலையில், இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக சந்திக ஹத்துருசிங்க கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டதை அடுத்து, இலங்கை அணிக்கு நிரந்தர தலைவர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

T-20 வருகையால் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி என்கிறார் முரளிதரன்

உலகம் பூராகவும் T-20 போட்டிகள் பிரபல்யமடைவதற்கு முன் பந்து வீசுவது …

இதனையடுத்து, கடந்த ஜனவரி மாதம் பங்களாதேஷில் நடைபெற்ற முக்கோண ஒரு நாள் தொடரில் இலங்கை அணிக்கு மீண்டும் திரும்பிய மெதிவ்ஸ், ஜிம்பாப்வே அணியுடனான லீக் போட்டியின் போது தொடை எலும்பு பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக குறித்த போட்டித் தொடரிலிருந்தும் விலகி நாடு திரும்பினார்.

எனினும், கடந்த மாதம் இலங்கையில் நடைபெற்ற சுதந்திர கிண்ண முக்கோண T-20 தொடரிற்கு முன் இடம்பெற்ற உடற் பரிசோதனையில் கலந்துகொண்டு மீண்டும் அணிக்கு தேர்வாகிய மெதிவ்ஸுக்கு உத்தேச குழாத்தில் இடம்பெறும் வாய்ப்பும் கிட்டியது.

ஆனால், பயிற்சிகளின் போது ஏற்பட்ட கணுக்கால் காயத்தினால் 6 வாரங்கள் போட்டிகளில் இருந்து வெளியேற வேண்டிய நிலைக்கு அவர் மீண்டும் தள்ளப்பட்டார். இதனால் இலங்கையில் நடைபெற்ற சுதந்திர கிண்ண முத்தரப்பு தொடரிலும் அவருக்கு விளையாட முடியாமல் போனது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் 2ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 4 அணிகள் பங்கேற்கும் மாகாணங்களுக்கிடையிலான முதல்தர கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது.

இதில் கண்டி அணியின் தலைவராக அஞ்செலோ மெதிவ்ஸ் நியமிக்கப்பட்டார். எனினும், மெதிவ்ஸின் உபாதை பூரணமாக குணமடையாத காரணத்தினால் இதுவரை நடைபெற்ற 2 போட்டியிலும் அவர் விளையாடவில்லை.

இந்நிலையில், எதிர்வரும் 21ஆம் திகதி சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள காலி அணிக்கெதிரான 3ஆவதும், இறுதியுமான போட்டியில் தான் மீண்டும் களமிறங்கவுள்ளதாக க்ரிக் பஸ் இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட செவ்வியில் மெதிவ்ஸ் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

”நான் மீண்டும் போட்டிகளில் விளையாடுவதற்கு தயாராகி விட்டேன். எனக்கு உதவிய அனைவருக்கும் முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிலும் குறிப்பாக, உபாதையிலிருந்து மீள்வதற்கு உதவிய மருத்துவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்” என்றார்.

”மருத்துவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய உபாதையிலிருந்து முழுமையாக குணமடையும் நோக்கில் தற்போது இடம்பெற்று வருகின்ற மாகாணங்களுக்கிடையிலான முதல்தரப் போட்டிகளின் முதலிரண்டு போட்டிகளிலும் என்னால் விளையாட முடியாது போனது. எனினும், காலி அணியுடனான 3ஆவது போட்டியில் விளையாடவுள்ளேன்.  

அத்துடன், உள்ளூர் மட்டத்தில் பிரகாசித்து வருகின்ற வீரர்களுடன் விளையாடுவது மிகவும் சவாலாக உள்ளது. அதில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற இளம் வீரர்களுக்கு தேசிய அணியில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கவுள்ளது. எனவே, மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக மாகாணங்களுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட ஒருசில போட்டிகளிலும் விளையாடுவதற்கு நான் எதிர்பார்த்துள்ளேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஆங்கில நாளிதழான சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு இலங்கை தெரிவுக் குழுவின் தலைவர் கிரஹம் லெப்ரோய் அண்மையில் வழங்கிய விசேட செவ்வியில், மெதிவ்ஸின் உபாதையை கருத்திக்கொண்டு இனிவரும் காலங்களில் முழுநேர துடுப்பாட்ட வீரராக மாத்திரம் அவர் செயற்படுவார் எனவும் இனிவரும் போட்டிகளில் பந்துவீச மாட்டார் எனவும் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பில் மெதிவ்ஸ் கருத்து வெளியிடுகையில்,அடுத்த சில மாதங்களுக்கு நான் பந்துவீச மாட்டேன். தேர்வாளர்கள் துடுப்பாட்டத்தில் மாத்திரம் கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளார்கள். எனவே, அடுத்து வரும் சில சுற்றுப்பயணங்களில் சிறப்பாக விளையாடுவதற்கும், உலகக் கிண்ணத்தை நெருங்கியவுடன், மீண்டும் பந்துவீசுவதற்கு எதிர்பார்த்திருக்கின்றேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை பயிற்றுவிப்பாளர் குழாமில் மீண்டும் இடம்பெறவுள்ள அதிரடி மாற்றங்கள்

இலங்கை கிரிக்கெட்டின் உயர் செயற்திறன் பிரதானியாக, அசங்க குருசிங்கவை நியமிக்க …

இலங்கை கிரிக்கெட் அணிக்கு 2017ஆம் ஆண்டு மிகவும் ஏமாற்றம் மிக்கதாக இருந்தது. 57 சர்வதேசப் போட்டிகளில் ஒரு டெஸ்ட் தொடரையும், 2 T-20 தொடர்களையும் மாத்திரமே வெற்றிபெற்று வருடமொன்றில் மோசமான தோல்விகளை சந்தித்த உலகின் 2ஆவது அணியாகவும் இடம்பிடித்தது. அதேபோல, டெஸ்ட் தரப்படுத்தலில் 6ஆவது இடத்தையும், ஒரு நாள் மற்றும் T-20 தரவரிசையில் 8ஆவது இடங்களையும் இலங்கை அணி பெற்றுக்கொண்டது.  

எமது அணியின் அண்மைக்கால பின்னடைவுகள் குறித்து பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர்களுடன் அதிகம் கலந்துரையாடியுள்ளோம். தற்போது நாம் 2019 உலகக் கிண்ணத்துக்காக திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம், இதற்கு எமக்கு இன்னும் 12 மாதங்கள் மட்டுமே உள்ளன. அதேநேரம், இந்த காலப்பகுதியில் நடைபெறவுள்ள ஒவ்வொரு இருதரப்புத் தொடர்களும் எமக்கு முக்கியமானது என்பதை உணர்ந்து, போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அத்துடன், இளம் வீரர்களுக்கும் அணியில் வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதுடன், முக்கியமான வீரர்கள் உபாதைகளுக்கு உள்ளாவதை தவிர்ப்பதற்கும் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் மெதிவ்ஸ் தெரிவித்தார்.  

எது எவ்வாறாயினும், எதிர்வரும் ஜுன் மாதம் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் அஞ்செலோ மெதிவ்ஸ் இலங்கை அணியில் இடம்பெறுவதை உறுதி செய்வதற்கு மாகாணங்களுக்கிடையிலான இறுதிப் போட்டி அவருக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.   

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…