மெதிவ்ஸுக்கு துடுப்பாட்ட ஆலோசனை வழங்கிய குமார் சங்கக்கார

2395

நியூசிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் குசல் மெண்டிஸுடன் இணைந்து சாதனை இணைப்பாட்டமொன்றைப் பெற்று இலங்கை அணியை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து மீட்பதற்கு அஞ்செலோ மெதிவ்ஸ் முக்கிய காரணமாக இருந்தார்.

இந்த நிலையில், தனது இந்த அபார துடுப்பாட்டத்துக்கு இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான குமார் சங்கக்காரவிடம் இருந்து ஆலோசனைப் பெற்றதாகவும், இதற்கான அனைத்து கௌரவமும் குமார் சங்கக்காரவை சாரும் என அஞ்செலோ மெதிவ்ஸ் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் தரவரிசையில் குசல் மெண்டிஸை முந்திய அஞ்செலோ மெதிவ்ஸ்

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி)…

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மழையின் குறுக்கீடு காரணமாக வெற்றி தோல்வியின்றி கடந்த 19 ஆம் திகதி வெலிங்டனில் நிறைவுக்கு வந்தது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, முதல் இன்னிங்ஸிற்காக 282 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அஞ்செலோ மெதிவ்ஸ் 83 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்று சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, பதிலுக்கு முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி, டொம் லெதமின் இரட்டைச் சதத்தின் துணையுடன் 578 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன் பின்னர் 296 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி, 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. எனினும், அதன் பிறகு 4 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த குசல் மெண்டிஸ் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கை அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர்.

இதில் குசல் மெண்டிஸ் சதம் கடந்து ஆட்டமிழக்காது 141 ஓட்டங்களையும், அஞ்செலோ மெதிவ்ஸ் சதம் கடந்து ஆட்டமிழக்காது 120 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். இவ்விருவரும் இணைந்து இணைப்பாட்டமாக 274 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். இந்த ஓட்ட எண்ணிக்கையே இப்போட்டியை சமநிலைப்படுத்துவதற்கு பெரும் துணையாக இருந்தது.

தொடர் உபாதைகள், உடற்தகுதி இல்லாமை உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களுக் ஆளாகி தலைமைப் பதவி மற்றும் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட அஞ்செலோ மெதிவ்ஸ், நியூசிலாந்து தொடரில் மீண்டும் களமிறங்கி வெற்றிகரமான ஆரம்பத்தைப் பெற்று தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

இதனிடையே, நியூசிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் இவ்வாறு துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பதற்கு குமார் சங்கக்காரவிடம் இருந்து பெற்ற ஆலோசனைகள் பெரிதும் உதவியதாக அஞ்செலோ மெதிவ்ஸ் தெரிவித்தார்.

அகில தனன்ஞயவின் போட்டித் தடையும், இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலமும்

இலங்கையின் நட்சத்திர சுழற்பந்து…

கடந்த 2015 ஆம் ஆண்டு, இலங்கை அணி கடைசியாக பங்கேற்ற டெஸ்ட் போட்டியில் இதே மைதானத்தில் தான் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான குமார் சங்கக்கார இரட்டைச் சதமடித்திருந்தார்.  

எனவே, இந்த மைதானத்தில் சங்கக்கார எவ்வாறு இரட்டைச் சதமடித்தார் என்பதை தெரிந்து கொள்வதற்காக போட்டிக்கு முன்னர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருந்ததாக க்ரிக் இன்போ (Cricinfo) இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் அஞ்செலோ மெதிவ்ஸ் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

”முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன் நான் குமார் சங்கக்காரவுடன் பேசினேன். ஏனெனில் நாங்கள் இந்த மைதானத்தில் தான் இறுதியாக டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தோம். அதில் குமார் சங்கக்கார இரட்டைச் சதம் (203 ஓட்டங்கள்) அடித்தார். எனவே அந்தப் போட்டியில் எவ்வாறான துடுப்பாட்ட நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டது என்பது பற்றி அவரிடம் கேட்டறிந்தேன். ஒவ்வொரு பந்துவீச்சாளருக்கும் ஒவ்வொரு முறையிலான துடுப்பாட்டப் பிரயோகங்களை பயன்படுத்துமாறு அவர் என்னிடம் தெரிவித்தார். எனவே அவருடைய ஆலோசனைiயும், எனது அனுபவத்தையும் ஒன்று சேர்த்து விளையாடிய காரணத்தால் தான் இந்தப் போட்டியில் பிரகாசிக்க முடிந்ததாக” அவர் தெரிவித்தார்.

ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக ஆடுகளத்தில் இருந்த மெதிவ்ஸ், தன்னுடன் மறுமுனையில் துடுப்பாடிய குசல் மெண்டிஸுடன் இணைந்து விக்கெட்டை பறிகொடுக்காமல் நிதானத்துடனும், பொறுமையுடனும் துடுப்பாடியிருந்ததுடன், அதற்காக ஒவ்வொரு ஓவர் முடிவிலும் அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஆலோசனைகளையும் வழங்கினார்.

காது கேட்காமலும், வாய் பேசாமலும் உலக கிரிக்கெட் சம்பியனான நம்மவர்கள்

சாதாரண ஒரு மனிதனைப் போல எமக்கு…

ஆனால், இவ்விரண்டு வீரர்களினதும் இணைப்பாட்டத்தை முறியடிக்க நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் பல சந்தர்ப்பங்களில் பவுண்சர் பந்துகளை வீசி அச்சுறுத்தல் கொடுக்க ஆரம்பித்தனர். எனினும், அவர்களது பவுண்சர் பந்துகளுக்கு சிறந்த முறையில் முகங்கொடுத்த மெதிவ்ஸ் – குசல் ஜோடி இறுதியில் இலங்கையை தோல்வியிலிருந்து மீட்டுக் கொடுத்தனர்.

கடந்த காலங்களில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஓட்டங்களைக் குவிப்பதில் தடுமாற்றத்தை சந்தித்து வந்த குசல் மெண்டிஸ், இப்போட்டியில் தனது 6 ஆவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்து தன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் முதல் 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியிருந்தோம். அதன் பிறகு போட்டியின் நான்காவது நாளில் குசல் மெண்டிஸுடன் இணைந்து பொறுமையாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டோம். இதற்காக நாங்கள் நிறைய விடயங்களைப் பற்றி பேசினாம். எமக்கு மட்டுமல்ல, அணியின் ஏனைய வீரர்களுக்கும் அது மிகவும் சிறப்பான நாளாகும். உண்மையில் குசல் மெண்டிஸ் போன்ற இளம் வீரரிடம் இருந்து இவ்வாறான அபாரமான துடுப்பாட்டமொன்றை பார்க்க முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. எனவே எமது அனுபவங்களை பயன்படுத்தி இந்த இன்னிங்ஸில் சிறப்பாக விளையாட முடியும் என்பதையும் நாங்கள் அறிந்து கொண்டோம் என தெரிவித்தார்.

அதுமாத்திரமின்றி, நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் ஆக்ரோஷமாக பந்துவீசினார்கள் எங்களது உடல்களை குறிவைத்து பந்துவீசியிருந்தார்கள். அந்தப் பந்துகளை தொடாத வரை நான் ஆட்டமிழக்க மாட்டேன் என்பது எனக்கு தெரியும். அந்தப் பந்துகள் உடலைத் தாக்கிய போதிலும் நான் உறுதியாக நிலைத்து நின்றேன். அது என்னை காயப்படுத்தும ஆனால் என்னை ஆட்டமிழக்கச் செய்யாது என்பது எனக்கு தெரிந்திருந்தது என குறிப்பிட்டார்.

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 58

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய…

நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கும் நான் அதே செய்தியையே தெரிவிக்க விரும்பினேன். நீங்கள் உடலை இலக்குவைத்து பவுண்சர் பந்துகளை வீசலாம். ஆனால் நான் இலகுவில் ஆட்டமிழக்க மாட்டேன் என்ற செய்தியை நியூசிலாந்து அணி வீரர்களுக்கு தெரிவிக்க விரும்பினேன் என மெதிவ்ஸ் மேலும் தெரிவித்தார்.

அதேபோன்று போட்டியின் கடைசி நாள் எமக்கு மிகவும் தீர்மானமிக்கதாக அமைந்தது. ஆனால் அன்றைய நாள் முழுவதும் மழை பெய்யும் என அவ்வப்போது எதிர்வுகூறப்பட்டது. அது தொடர்பில் நான் குசல் மெண்டிஸுடன் பேசினேன். ஏனெனில் போட்டியின் கடைசி நாளில் நிலைமை இன்னும் மாறலாம் என்ற நிலை தென்பட்டது. ஆனால் மழையின் குறுக்கீடு காரணமாக போட்டி கைவிடப்பட்டது என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை சார்பாக அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் அஞ்செலோ மெதிவ்ஸ் எட்டாவது இடத்தில் உள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 என மூவகை கிரிக்கெட்டிலும் 11, 934 ஓட்டங்களைக் குவித்துள்ள மெதிவ்ஸுக்கு 12 ஆயிரம் ஓட்டங்கள் மைல்கல்லை எட்டுவதற்கு இன்னும் 66 ஓட்டங்களே தேவைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2ஆவது டெஸ்ட் போட்டியில் அஞ்செலோ மெதிவ்ஸ் இந்த மைல்கல்லை எட்டுவார் என்பது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<