பெறுபேறுகள் தொடர்பாக மெதிவ்ஸ்

2179
Mathews backs misfiring Thirimanne

இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த இலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெதிவ்ஸ், அணி வீரர்களான குசால் மென்டிஸ், ரங்கன ஹேரத் ஆகியோரைப் பாராட்டிய போதிலும், லஹிரு திரிமான்ன தொடர்பாகத் தெளிவான தகவல்களை வழங்கவில்லை.

இத்தொடரில் ஓரளவு தொடர்ச்சியான துடுப்பாட்டப் பெறுபேறுகளை வெளிப்படுத்திய இளம் வீரரான குசால் மென்டிஸ், 6 இனிங்ஸ்களில் 31.20 என்ற சராசரியில் 156 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இது, இலங்கை சார்பாக இத்தொடரில் பெறப்பட்ட 3ஆவது அதிக ஓட்டங்களாகும். இத்தொடரில் இலங்கையின் நாயகனாகத் தெரிவான கௌஷால் சில்வா, 193 ஓட்டங்களைப் பெற்றதோடு, டினேஷ் சந்திமால், 172 ஓட்டங்களைப் பெற்றார். ஆனால், சந்திமாலின் 126 ஓட்டங்கள், ஒரே இனிங்ஸில் பெறப்பட்டவையாகும்.

முக்கியமான 3ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடும் குசால் மென்டிஸூக்கு, அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமென  மெதிவ்ஸ் தெரிவித்தார். அத்தோடு, மென்டிஸிடம் அதிக திறமைகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நுவான் பிரதீப்பின் “நோ போல்” தீர்ப்பு சரியானதா? தவறானதா?

“நாங்கள் யாரையாவது தெரிவுசெய்தால், அவர்களுக்குப் போதுமான வாய்ப்புகள் வழங்குவதோடு, அவரோடு பொறுமையாக இருக்க வேண்டும். வீரர்களை அடிக்கடி மாற்ற நாம் விரும்பவில்லை. திறமையுடனும் திறனுடனும் ஒரு வீரரை அடையாளங் கண்டால், அவருக்கு நீங்கள் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.

மெதிவ்ஸ்ஸின் அதிகமான பாராட்டு, இலங்கையின் மூத்த வீரரான ரங்கன ஹேரத்துக்குச் சென்றது. 38 வயதான ஹேரத், 5 இனிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடி, ஓர் அரைச்சதம் உள்ளடங்கலாக 21.8 என்ற சராசரியில் 109 ஓட்டங்களைப் பெற்றதோடு, 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அத்தோடு, களத்தடுப்பிலும் ஓடியாடிச் செயற்பட்டார். அதை, மெதிவ்ஸ் பாராட்டினார்.

“ஹேரத், அருமையாகச் செயற்பட்டார். அவருக்கு 38 வயதாகிறது. அவர் தனது சகலதுறைத் திறமையூடாக, அணிக்குப் பங்களித்தார். அத்தோடு, மைதானத்தில் அவர் பாய்ந்தும், விழுந்தும் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தார். (அணியில்) வயதான நபர், பாய்ந்து, பவுண்டரிகளைத் தடுப்பதைப் பார்ப்பது சிறப்பாக இருந்தது” என்றார்.

பல விமர்சனங்களுக்கு மத்தியில், இந்தத் தொடரில் சேர்க்கப்பட்ட லஹிரு திரிமான்ன, 5 இனிங்ஸ்களில் 17.4 என்ற சராசரியில் 87 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தார். திரிமான்ன தொடர்பில் கேட்டபோது, தெளிவான பதிலை வழங்க, மெதிவ்ஸ் மறுத்தார்.

இத்தொடர் ஆரம்பிக்கும்போது, அணியிலுள்ள சிறந்த துடுப்பாட்ட வீரர் என திரிமான்னவை வர்ணித்திருந்த மெதிவ்ஸ், இப்போது கேட்கும்போது, “சில துடுப்பாட்ட வரிசைகள் தொடர்பாக நாங்கள் முடிவுகளை எடுக்கவில்லை” என்றார்.

“இந்தத் தொடர், அனைத்துத் துடுப்பாட்ட வீரர்களுக்கும் சவாலாக அமைந்தது. எந்தவொரு வீரரையும் நான் தனித்துக் குறிப்பிட விரும்பவில்லை. நாமனைவரும் பொறுப்பை எடுக்க வேண்டும். சந்திமாலைத் தவிர, எவராலும் சதத்தைப் பெற முடிந்திருக்கவில்லை. யாரையும் நான் கைவிட விரும்பவில்லை. இணைந்த அணியாக நாம் இருந்து, கடுமையாகப் பணியாற்ற வேண்டும். (திரிமான்ன துடுப்பெடுத்தாடும்) நான்காம் இலக்கம் தொடர்பாக, முடிவெதனையும் நாம் எடுத்திருக்கவில்லை” என, மெதிவ்ஸ் மேலும் தெரிவித்தார்.

ஆதாரம் – விஸ்டன் இலங்கை  

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்