இலங்கை – அவுஸ்திரேலிய தொடருக்கான நடுவர் குழாம் அறிவிப்பு

Australia tour of Sri Lanka 2022

372

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள T20I, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான நடுவர்கள் மற்றும் போட்டி மத்தியஸ்தர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்று அதிகமாக இருந்த காலப்பகுதியில் சர்வதேச போட்டிகளுக்கு உள்ளூர் நடுவர்கள் மாத்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தனர்.

>>இலங்கை அணியுடன் மீண்டும் இணையும் லசித் மாலிங்க

எனினும், இரண்டு நாடுகளுக்கும் பொதுவான நடுவர்கள் மற்றும் போட்டி மத்தியஸ்தர்களை பயன்படுத்தவேண்டும் என ஐசிசி மீண்டும் தங்களுடைய விதிமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன் அடிப்படையில் அனைத்து தொடர்களுக்குமான போட்டி மத்தியஸ்தர்களாக இந்தியாவின் ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் இலங்கையின் ரஞ்சன் மடுகல்ல ஆகியோரை நியமித்துள்ளது.

இவர்களுடன் T20I மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான போட்டி மத்தியஸ்தர்கள் குழாத்தில், ஐசிசி உயரடுக்கு நடுவர் குழாத்தைச் சேர்ந்த குமார் தர்மசேனவுடன், ஐசிசி நடுவர்களான ருச்சிர பல்லியகுருகே, ரவீந்ர விமலசிறி, லிண்டன் ஹெனிபல் மற்றும் பிரகீத் ரம்புக்வெல்ல ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

T20I மற்றும் ஒருநாள் தொடர்களில் உள்ளூர் நடுவர்கள் மாத்திரம் இடம்பெற்றிருந்தாலும், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான நடுவர்கள் குழாத்தில் வெளிநாட்டு நடுவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

இதில் இந்தியாவைச் சேர்ந்த நிதின் மேனன் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கல் கோக் ஆகியோர் இடம்பெற்றுள்ளதுடன், இலங்கையைச் சேர்ந்த குமார் தர்மசேன, ருச்சிர பல்லியகுருகே மற்றும் லிண்டன் ஹெனிபல் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடரானது, மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருடன் எதிர்வரும் 7ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<