ஓய்வின் பின்னரும் ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்காக மசகட்சா

39

சர்வதேச கிரிக்கெட்டிற்கு அண்மையில் பிரியாவிடை கொடுத்திருந்த ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஹமில்டன் மசகட்சாவிற்கு புதிய பதவி ஒன்று கிடைத்திருக்கின்றது.  

அந்தவகையில், ஹமில்டன் மசகட்சா ஜிம்பாப்வே கிரிக்கெட் சபையின் புதிய கிரிக்கெட் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். தற்போது 36 வயதாகும் ஹமில்டன் மசகட்சா, தனக்கு கிடைத்திருக்கும் புதிய பதவியினை நவம்பர் மாதம் 01ஆம் திகதியிலிருந்து பொறுப்பேற்கவுள்ளார்.  

ஜிம்பாப்வே கிரிக்கெட் சபை, தமது அண்மைய பொதுக்கூட்டம் ஒன்றில் எடுத்த முடிவுக்கு அமைவாகவே ஹமில்டன் மசகட்சாவினை புதிய கிரிக்கெட் இயக்குனராக நியமனம் செய்திருக்கின்றது.  

ஜிம்பாப்வே கிரிக்கெட் சபையின் தலைவரான தவேன்கா முகுலானி மசகட்சாவின் நியமனம் குறித்து இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.  

”இந்த முக்கிய நியமனம் எங்களுக்கு கிரிக்கெட் விளையாட்டினை அனைத்து வகைகளிலும் முன்னேற்ற இருக்கும் விருப்பத்தினை தெளிவாக வெளிப்படுத்துகின்றது. அதோடு இந்த நியமனம், எங்களது கிரிக்கெட் நிர்வாகத்தினையும் முன்னேற்ற உறுதுணையாக இருக்கும்.” 

கிரிக்கெட் இயக்குனர் பொறுப்பு மாத்திரம் அல்லாது மசகட்சாவிற்கு ஜிம்பாப்வேயின் தேசிய கிரிக்கெட் அணிகளுக்கு வெற்றிகரமான தலைமைத்துவத்தினை கற்றுக் கொடுக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டிருக்கின்றது. 

கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்காக ஆடியிருக்கும் ஹமில்டன் மசகட்சா 9,543 ஓட்டங்களை குவித்திருப்பதோடு 57 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<