இம்முறை FA கிண்ண தொடருக்கு அனுசரணை வழங்கும் எபோனி ஹோல்டிங்ஸ்

439

வன்டேஜ் FA கிண்ண தொடரின் 16 அணிகள் சுற்றுப்போட்டி 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதன் இறுதிப் போட்டி நவம்பர் கடைசியில் நடைபெறும். 

இலங்கை கால்பந்து வரலாற்றியில் முதல் முறையாக FA கிண்ண சம்பியன்ஷிப் போட்டிக்கு அனுசரணை வழங்க எபோனி ஹோல்டிங்ஸ் நிறுவனம் (வன்டேஜ் சட்டைகள்) பெருமையுடன் முன்வந்துள்ளது.

FA கிண்ணம் இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் (FFSL) நடத்தப்படும் நீண்டகால மற்றும் நொக் அவுட் அடிப்படையிலான முன்னணி தொடராகும்.

நாடெங்குமுள்ள 60 கால்பந்து லீக்குகளின் 715 அணிகளின் பங்கேற்புடன் இந்த ஆண்டு சம்பியன்ஷிப் தொடர் 2018 ஏப்ரல் 22 ஆம் திகதி ஆரம்பமானது. இந்த தொடர் தற்போது ’16 அணிகள் சுற்றை’ எட்டியுள்ளது. இந்த போட்டிகள் இன்று (24 ஒக்டோபர் 2018) தொடக்கம் நடைபெறவுள்ளது.  

சுபர் சன் – நியு யங்ஸ் இடையிலான ஆரம்பப் போட்டி சமநிலையில் நிறைவு

சம்பியன் அணிக்கு 700,000 ரூபாய் பணப்பரிசும் இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிக்கு 500,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது.

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா, எபோனி ஹோல்டிங்ஸின் அனுசரணை பற்றி கருத்துக் கூறும்போது, ”FA கிண்ண சம்பியன்ஷிப்பில் 16 அணிகள் சுற்றுக்கு எபோனி ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடம் இருந்து பங்களிப்பு பெறப்பட்டதை இட்டு நாம் பெருமை மற்றும் மகிழ்ச்சி கொள்வதோடு, எதிர்வரும் ஆண்டுகளின் FA கிண்ணத்திற்காக அவர்களின் அனுசரணையை நாம் எதிர்பார்த்துள்ளோம். இலங்கை கால்பந்துக்கு தமது சிறப்பான பங்களிப்பை செய்ததற்காக எபோனி ஹோல்டிங்ஸுக்கு எமது நன்றிகளை தெரிவிக்கிறோம்” என்று குறிப்பிட்ட டி சில்வா, ”இலங்கை கால்பந்தை உயர்ந்த இடத்திற்கு கொண்டுவர முயற்சிக்கும் எமது பயணத்திற்கு உங்கள் அனைவரது ஆதரவையும் நாம் கோருகிறோம்” என்று நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

எபோனி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு ரம்சி நஹீம் கூறியதாவது, ”ஒரு ஆண்கள் ஆடை வர்த்தகக் குறியீடு என்ற வகையில் இலங்கை கால்பந்துக்கு ஆதரவு வழங்குவது எமது பொறுப்பாகும். இந்த தொடருக்காக பிரத்தியேக பங்குதாரராக இலங்கை கால்பந்துக்கு ஆதரவு வழங்க இது சரியான நேரம் என்று நாம் கருதினோம். தனிச் சிறப்பு மிக்க விளையாட்டு ஊடாக நாட்டில் உள்ள இளைஞர்களை வலுவூட்ட கிடைத்தது கௌரவமாகும்” என்றார்.   

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<