இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற மேஜர் கழக T20 தொடரின் சம்பியனாக வனிந்து ஹஸரங்க தலைமையிலான கொழும்பு கிரிக்கெட் கழகம் முடிசூடியுள்ளது.
பாணந்துறை விளையாட்டு கழகத்துக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொழும்பு கிரிக்கெட் கழகம் வெற்றிபெற்றது.
>>பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு<<
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாணந்துறை அணி விஷேன் ஹலம்பகேவின் அபாரமான துடுப்பாட்டத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் நிறைவில் 28 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
விஷேன் ஹலம்பகே 37 பந்துகளில் 73 ஓட்டங்களை விளாசியதுடன், செனித ஹலம்பகே 17 பந்துகளில் 36 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் விஷ்வ பெர்னாண்டோ மற்றும் சதுரங்க டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சற்று சவாலான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொழும்பு கிரிக்கெட் கழக அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிஷான் மதுஷ்க ஓட்டமின்றி ஆட்டமிழந்தார். எனினும் மறுமுனையில் களமிறங்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லசித் குரூஸ்புள்ளே இறுதிப்போட்டியில் மிகச்சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்.
லசித் குரூஸ்புள்ளே 38 பந்துகளில் 78 ஓட்டங்களை விளாசியதுடன், துல்னித் சிகேரா 38 ஓட்டங்கள், வனிந்து ஹஸரங்க 25 ஓட்டங்கள் மற்றும் சதுரங்க டி சில்வா 20 ஓட்டங்கள் என விளாச கொழும்பு கிரிக்கெட் கழக அணி 17.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<