இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவுள்ள மஹேல

1479

இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவிக்கு இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் மற்றும் துடுப்பாட்ட ஜாம்பவான் மஹேல ஜயவர்தன விண்ணப்பிக்கவுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் அணில் கும்ப்ளே பதவியிலிருந்து ராஜினாமா செய்ததையடுத்தே, அவருக்குப் பதிலாக தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்ள விண்ணப்பிக்கவுள்ளதாக குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைமை பயிற்றுவிப்பாளருக்கான விண்ணப்பத் திகதி ஜூலை மாதம் 9ஆம் திகதி வரை பிற்போடப்பட்டதையடுத்தே குறித்த உயர் பதவிக்கு மஹேல ஜயவர்தன விண்ணப்பிக்கவுள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹேல ஜயவர்தன, இந்திய முதல்தர போட்டிகளான ஐ.பி.எல் போட்டிகளுக்காக மும்பாய் இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்னதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக கடமையாற்றியிருந்தார். அதனையடுத்து மும்பாய் இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியை, முதல் தடவையாக பயிற்றுவிப்பாளர் என்ற வகையில் ஏற்றுக்கொண்ட அவர் 10ஆவது ஐ.பி.எல் கிண்ணத்தை மும்பாய் இந்தியன்ஸ் அணி கைப்பற்றுவதற்கு பெரும் பங்காற்றினார்.

நெட்வெஸ்ட் T-20 தொடரிலிருந்து விலகிய மஹேல ஜயவர்தன

அனுபவம் மிக்க கிரிக்கெட் வீரரான மஹேல ஜயவர்தன, 652 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றி 25,957 ஓட்டங்களைக் குவித்துள்ளார். 40 வயதாகும் மஹேல 54 சதங்களையும் 136 அரைச் சதங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், எதிர்வரும் ஜூலை மாதம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ள நெட்வெஸ்ட் T-20 தொடரில் விளையாடுவதற்கு ஒப்பந்தமாகியிருந்த நிலையில், அத்தொடரிலிருந்து விலகி டொம் மூடி மற்றும் ரிச்சர்ட் பைபஸ் ஆகியோருடன் மூன்றாவது வெளிநாட்டு விண்ணப்பதாரியாக இந்த உயரிய பதவியை பெறுவதற்கு விண்ணப்பிக்கவுள்ளார்.

ஏற்கனவே, தலைமை பயிற்றுவிப்பாளருக்கான போட்டியில் இந்திய அதிரடி துடுப்பாட்ட வீரர் விரேந்தர் செவாக் தகுதிபெறும் வாய்ப்பு அதிகமுள்ள  நிலையில், கடந்த வருடம் ஐ.பி.ல் போட்டிகளில் சன்ரைஸ் ஹைதராபாத் அணி கிண்ணத்தைக் கைப்பற்றுவதற்கு வழி நடத்திய பயிற்சியாளர் டொம் மூடி இந்திய அணியின் பயிற்றுவிப்பாளராக வருவதை பெயர் குறிப்பிடாத இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலர் வரவேற்றுள்ளனர்.

அந்த வகையில், மஹேல ஜயவர்தன இந்த உயரிய பதவிக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் தலைமை பயிற்றுவிப்பாளருக்கான பதவி மஹேல உட்பட விரேந்தர் செவாக் மற்றும் டொம் மூடி ஆகியோருக்கிடையிலான மும்முனைப் போட்டியாக அமையலாம்.

இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி மற்றும் அணில் கும்ளே ஆகியோருக்கு இடையிலான பிழையான புரிந்துணர்வுகளால் ஏற்ப்பட்ட பிளவுக்கு பின்னர் உடனடியாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை புதிய பயிற்றுவிப்பாளருக்கான பதவியை விளம்பரப்படுத்தியிருந்தது.  உடை மாற்றும் அறையில் நடைபெற்றிருந்த சில சம்பவங்களால் பயிற்றுவிப்பாளர் அணி கும்ளேயுடன் அதிருப்தி அடைந்திருந்த இந்திய அணித் தலைவர் ஜூன் மூன்றாம் திகதி பாகிஸ்தான் அணியுடனான போட்டிக்கு முன்னர் இது குறித்து பேசியிருந்தார்.

மகளிர் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியை வீழ்த்திய நியூசிலாந்து

எவ்வாறெனினும், தனது கூற்றுக்களால் பின்வாங்காத அணில் கும்ளே, அவரில்லாமல் விராத் கோஹ்லி முன்செல்வதே நல்லதென்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். மேலும், ”முதல் தடவையாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை என்னுடைய பாணி மற்றும் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக அணியில் தொடர்வதை குறித்து முறையிட்டுள்ளதாக நேற்றைய தினம் தெரிவித்த போது நான் ஆச்சரியம் அடைந்தேன். நான் எப்பொழுதும் அணித் தலைவர் பயிற்றுவிப்பாளருக்கிடையிலான எல்லைகளை மதிப்பளித்தே நடந்து கொண்டேன். இருந்தாலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை எங்களுக்குள் இருந்த பிழையான புரிந்துணர்வுகளை தீர்க்க முயன்றது. எனினும், இறுதிவரை எங்களால் ஒத்துவர முடியாததால், ராஜினாமா செய்ய முடிவெடுத்ததாக” தனது அறிக்கையில் அணில் கும்ளே தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அணில் கும்ளேயுடனான தலைமை பயிற்றுவிப்பாளர் ஒப்பந்தம் சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளுடன் நிறைவுற இருந்த போதிலும், அணிக்கு அவர் பொறுப்பாக இருந்த காலங்களில் இந்திய அணி சிறப்பான வெற்றிகளை பெற்றுக்கொண்டதன் காரணமாக குறித்த ஒப்பந்தமானது மேலும் நீடிக்கக் கூடிய சாத்தியங்கள் காணப்பட்ட நிலையிலேயே அணில் கும்ளே தனது ராஜினாமா கடிதத்தை கையளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் போட்டித் தொடரொன்றில் பயிற்றுவிப்பாளர் இல்லாத நிலையிலேயே தற்போது விளையாடி வருகின்றது. இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக அணில் கும்ளேவுக்கு பரிந்துரை செய்த இந்திய   கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களான சௌரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் விவிஎஸ் லக்‌ஷ்மன் ஆகியோரே மீண்டும் அடுத்த தலைமை பயிற்றுவிப்பாளரையும் பரிந்துரை செய்யவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.