இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு தான் விண்ணப்பிக்கவில்லை – மஹேல

989

இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் மற்றும் துடுப்பாட்ட ஜாம்பவானுமாகிய மஹேல ஜயவர்தன, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவுள்ளதாக வெளியிடப்படும் செய்திகளில் உண்மை இல்லையெனவும், இப்போதைய நிலையில் முழு நேர பயிற்றுவிப்பாளராக எந்த அணியிலும் இணைந்து கொள்ளும் நோக்கமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியிலிருந்து குமார் சங்கக்காரவுடன் ஒய்வு பெற்ற மஹேல ஜயவர்தன பல்வேறு கிரிக்கெட் அணிகளுக்கு பயிற்சியாளராகக் கடமையாற்றி வருகின்றார். அந்த வகையில், இவ்வருடம் நடைபெற்ற இந்திய முதல் தர டி20 தொடரா ஐ.பி.எல். தொடரில் மும்பாய் இந்தியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக இணைந்து கொண்ட மஹேல ஜயவர்தன மும்பாய் இந்தியன்ஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு பெரும் பங்காற்றியிருந்தார். அத்துடன், மஹேலவின் வழிகாட்டலில் ஐ.பி.எல் போட்டிகளில் மும்பாய் இந்தியன்ஸ் அணி முழு ஆதிக்கத்தையும் செலுத்தியிருந்தது.

அத்துடன், சிறிய காலம் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட ஆலோசகராகவும் கடமையாற்றியதோடு, பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகளில் களமிறங்கிய குல்னா டைட்டன்ஸ் அணிக்காகவும் தமது பங்களிப்பை வழங்கியிருந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு சன் ரைஸ் அணியை இறுதிப் போட்டிக்கு வழி நடத்திய டொம் மூடியுடன் இந்திய கிரிக்கெட் அணித் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவிக்காக மஹேல விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து அணில் கும்ப்ளே ராஜினாமா செய்ததையடுத்தே இவ்வாறான பல்வேறுபட்ட செய்திகள் வெளிவந்துள்ளன. எவ்வாறெனினும் இந்திய அணியுடனான எல்லாச் செய்திகளையும் தான் நிராகரிப்பதாக தனது ட்விட்டர் மூலம் மஹேல தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், என்னைப் பற்றிய பல்வேறான செய்திகள் வெளிவந்துக்கொண்டிருக்கின்றது, இன்றைய நிலையில் நான் முழு நேர பயிற்றுவிப்பாளர் பதவியை எதிர்பார்க்கவில்லை. நான் முழுமையாக மும்பாய் இந்தியன்ஸ் மற்றும் குல்னா அணிகளில் கவனம் செலுத்துவதாகவும் ட்விட்டரில் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.