விஜய் சங்கர் அதிரடியில் கொல்கத்தாவை வீழ்த்தியது குஜராத்

Indian Premier League 2023

87

IPL தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று மாலை (29) நடைபெற்ற 38ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

விஜய் சங்கர் குவித்த அபார சதம் மற்றும் பந்துவீச்சாளர்களின் சிறப்பான பங்களிப்பினால் குஜராத் அணிக்கு இந்த வெற்றி கிடைத்தது.

மொஹாலியில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

கொல்கத்தா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக நாராயணன் ஜெகதீசன் மற்றும் ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் ஆகியோர் களமிறங்கினர் ஜெகதீசன் 15 பந்துகளில் 19 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த ஷர்துல் தாகூர் டக்அவுட் ஆகி ஆட்டமிழந்தார். வெங்கடேஷ் ஐயர் 11 ஓட்டங்களையும், நிதிஷ் ராணா 4 ஓட்டங்களையும் எடுத்து பெவிலியன் திரும்பினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரின்கு சிங் 20 பந்துகளில் 19 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

கொல்கத்தா அணியின் விக்கெட்டுகள் ஒருபக்கம் வீழ்த்தப்படாலும் இன்னொரு முனையில் சிறப்பாக விளையாடிய ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் 39 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகளுடன் 81 ஓட்டங்களை எடுத்து வலுச்சேர்த்தார். இதனால் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 179 ஓட்டங்களை எடுத்தது.

குஜராத் சார்பில் அதிகபட்சமாக மொஹமட் ஷமி 3 விக்கெட்டுகளையும், ஜோஸ் லிட்டில் மற்றும் நூர் அஹமட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 180 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் அணி வீரர்கள் களமிறங்கினர். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சாஹா 10 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்க, சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த அணித்தலைவர் ஹ்ர்திக் பாண்டியா நிதானமாக ஆடி ஓட்டங்களைக் குவித்தார். இதில் பாண்டியா 26 ஓட்டங்களையும், சுப்மன் கில் 49 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழக்க, குஜராத் அணி 93 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியிருந்தது.

அதன்பிறகு ஜோடி சேர்ந்த தமிழக வீரர் விஜய் சங்கரும், டேவிட் மில்லரும் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சிறந்த முறையில் எதிர்கொண்டு ஓட்டங்களைக் குவித்தனர்.

இதில் விஜய் சங்கர் 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகளுடன் 24 பந்துகளில் 51 ஓட்டங்களையும், டேவிட் மில்லர் 2 சிக்ஸர்கள் மற்றும் பௌண்டரியுடன் 18 பந்துகளில் 32 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் எடுக்க, குஜாரத் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் மூன்று ஓவர்களுக்கு 24 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி, இதுவரை ஆடிய 8 போட்டிகளில் 6 இல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதற்கு அடுத்த மூன்று இடங்களில் ராஜஸ்தான், லக்னோ மற்றும் சென்னை அணிகள் இருக்கின்றன.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<