தேசிய அணி வாய்ப்பை அரைச்சதம் பெற்று நிரூபித்த சதீர, திரிமான்ன

351

இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாட்டில் (SLC) பிரிவு A கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான மேஜர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்றைய தினம் நிறைவுக்கு வந்தது.

இன்றைய ஆட்டங்களை பொருத்தவரை, நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் குழாமில் இணைக்கப்பட்டுள்ள சதீர சமரவிக்ரம மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் அரைச்சதம் கடந்து, இலங்கை அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதுடன், அஞ்செலோ பெரேரா, சச்சித்ர சேரசிங்க, கித்ருவான் விதானகே மற்றும் அஷேன் பண்டார ஆகியோர் தங்களுடைய சதங்களை எட்டியுள்ளனர்.

அபார பந்துவீச்சால் எதிரணிக்கு சவால் விடுத்த மொஹமட் ஷிராஸ்

இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாட்டில்…

பதுரெலிய கிரிக்கெட் கழகம் எதிர் BRC

மக்கொன சர்ரே கிராம கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், தங்களது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த BRC அணி, இன்றைய ஆட்ட நேர முடிவில் 358 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இந்த அணிசார்பில் அபாரமாக ஆடிய அணித் தலைவர் ருமேஷ் புத்திக 95 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்ததுடன், ஹஷேன் ராமநாயக்க ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களையும், தேஷான் டயஸ் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளனர். பந்து வீச்சில் சச்சித் பத்திரன 120 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதேவேளை இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பதுரெலிய கிரிக்கெட் கழகம், தங்களுடைய முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 258 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதுரெலிய கிரிக்கெட் கழகம் சார்பில், சுப்ரமணியம் ஆனந்த 65 ஓட்டங்களையும், நதீர நாவல 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, அபாரமாக பந்துவீசிய மொஹமட் சிராஸ் 44 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 258 (84), சுப்ரமணியம் ஆனந்த 65, நதீர நாவல 57, மொஹமட் சிராஸ் 44/5

BRC – 318/5 – ருமேஷ் புத்திக 95, ஹஷேன் ராமநாயக்க 74*, சச்சித் பத்திரன 120/3


சோனகர் கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்

கொழும்பு பி.சரா மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய சோனகர் கிரிக்கெட் கழகம் சகல விக்கெட்டுகளையும் இழந்து 320 ஓட்டங்களை பெற்றுள்ளது.

144 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தை ஆரம்பித்த சோனகர் கிரிக்கெட் கழகத்தின் சார்பில் இன்றைய தினம் சாமர சில்வா 87 ஓட்டங்களையும், ரமேஷ் மெண்டிஸ் 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இதேவேளை நேற்றைய தினம் இரோஷ் சமரசூரிய 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, பந்து வீச்சில் சமிந்த பண்டார 82 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், சானக கோமசாரு 105 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதேவேளை, இன்றைய தினம் தங்களது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த துறைமுக அதிகாரசபை அணி ஆட்டநேர முடிவில் 93 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. பந்து வீச்சில் தரிந்து கௌஷால் மற்றும் மலித் டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

சோனகர் கிரிக்கெட் கழகம் – 320 (91.5) – சாமர சில்வா 87, இரோஷ் சமரசூரிய 51, ரமேஷ் மெண்டிஸ் 49, சமிந்த பண்டார 82/4, சானக கோமசாரு 105/3

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் – 93/6 – அதீச நாணயகார 30, தரிந்து கௌஷால் 24/2, மலித் டி சில்வா 23/2

நியூசிலாந்து செல்லும் இலங்கை அணியில் முக்கிய மாற்றங்கள்

நியூசிலாந்து அணிக்கு எதிராக அடுத்த…

NCC எதிர் றாகம கிரிக்கெட் கழகம்

கொழும்பு NCC மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின், இரண்டாவது நாளான இன்று தங்களது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள றாகம கிரிக்கெட் கழகம் லஹிரு திரிமான்னவின் அரைச்சதத்துடன் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை பெற்றுள்ளது.

லஹிரு திரிமான்ன அதிகபட்சமாக 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, சமிந்த பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களை பெற்றுள்ளார். பந்து வீச்சில் சச்சித்ர பீரிஸ் 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதேநேரம், தங்களது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய NCC அணி அஞ்செலோ பெரேராவின் சதத்தின் உதவியுடன் 272 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அஞ்செலோ பெரேரா 123 ஓட்டங்களையும், சாமிக கருணாரத்ன 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்ததுடன், இஷான் ஜயரத்ன 73 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், அமில அபோன்சோ 93 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

NCC – 272 (73.3) – அஞ்செலோ பெரேரா 123, சாமிக கருணாரத்ன 138, இஷான் ஜயரத்ன 73/4, அமில அபோன்சோ 93/3

றாகம கிரிக்கெட் கழகம் – 168/5 (55) – லஹிரு திரிமான்ன 51, சமிந்த பெர்னாண்டோ 38*, சச்சித்ர பீரிஸ் 60/2


செரசன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

செரசன்ஸ் கிரிக்கெட் கழகத்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மைதானத்தில் விளையாடி வரும் கோல்ட்ஸ் அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் சதீர சமரவிக்ரவின் அரைச்சதத்தின் உதவியுடன்133 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

சதீர சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 23 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள, கசுன் ராஜித 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதேவேளை தங்களுடைய முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய செரசன்ஸ் கிரிக்கெட் கழகம், அஷேன் பண்டாரவின் அபார சதத்தின் உதவியுடன் 316 ஓட்டங்களை குவித்தது.

அஷேன் பண்டார 106 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மிலிந்த சிறிவர்தன 70 ஓட்டங்களையும், ஜீவந்த 79 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் கவிஷ்க அஞ்சுல 68 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

செரசென்ஸ் கிரிக்கெட் கழகம் – 316 (62) – மிலிந்த சிறிவர்தன 70, அஷேன் பண்டார 106, ஜீவந்த 79, கவிஷ்க அஞ்சுல 68/3

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 133/5 – சதீர சமரவிக்ரம 56*, அவிஷ்க பெர்னாண்டோ 23, கசுன் ராஜித 40/2


SSC எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

SSC மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் SSC அணி 3 விக்கெட்டுகளை இழந்து 92 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் முதல் இன்னிங்ஸில் SSC அணி 229 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்த நிலையில், இன்றைய தினம் தங்களது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு கிரிக்கெட் கழகம் 225 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அந்த அணிசார்பில் லசித் அபேரத்ன 92 ஓட்டங்களை விளாச, லஹிரு மதுஷங்க  ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் அபாரமாக செயற்பட்ட தரிந்து ரத்நாயக்க 75 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மறுமுனையில் தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் SSC அணி சார்பில் சந்துன் வீரகொடி 47 ஓட்டங்களையும், கௌஷால் சில்வா 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, அஷான் பிரியன்ஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

போட்டியின் சுருக்கம்

SSC – 229 – கௌஷால் சில்வா 41, சந்துன் வீரகொடி 35, சச்சித்ர சேனாநாயக்க 32, லக்ஷான் சந்தகன் 50/4, லஹிரு கமகே 27/2

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 225 (83) – லசித் அபேரத்ன 92, லஹிரு மதுசங்க 32*, தரிந்து ரத்நாயக்க 75/7

SSC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 92/3 (21) – சந்துன் வீரகொடி 47, கௌஷால் சில்வா 35, அஷான் பிரியன்ஜன் 22/2

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 55

இலங்கையை சொந்த மண்ணில்…

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கழகம்

கட்டுநாயக்க MCG மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தமிழ் யூனியன் அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 322 ஓட்டங்களை பெற்றுள்ளது.

தமிழ் யூனியன் அணி சார்பில், சச்சித்ர சேரசிங்க  112 ஓட்டங்களையும், கித்ருவான் வித்தானகே 105 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, பந்து வீச்சில் இமேஷ் விமுக்தி 60 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இதேவேளை சிலாபம் மேரியன்ஸ் அணி, தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 210 ஓட்டங்களை பெற்றிருந்தது. இந்த அணி சார்பில் ஹர்ஷ குரே 68 ஓட்டங்களையும், யசோத லங்கா 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, ரமித் ரம்புக்வெல்ல 54 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் தமிழ் யூனியன் கழகம் இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 31 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கழகம் – 210 (56.5) – ஹர்ஷ குரே 68, யசோத லங்கா 48, ரமித் ரம்புக்வெல்ல 54/5

தமிழ் யூனியன் கழகம் – 322/6 (91) – சச்சித்ர சேரசிங்க  112, கித்ருவான் விதானகே 105, இமேஷ் விமுக்தி 60/3

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<