நான்கு இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று

151

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவிருந்த ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர், நவ்தீப் சைனி ஆகிய நான்கு இந்திய வீரர்கள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதையடுத்து இந்திய குழாத்தில் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.

அத்துடன், இந்திய கிரிக்கெட் அணியின் உதவியாளர்கள் மூவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 T20i போட்டிகளில் விளையாடவுள்ளது. ஒருநாள் தொடர் பெப்ரவரி 6ஆம் திகதியும், T20i தொடர் பெப்ரவரி 16ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளன.

இதில் ஒருநாள் தொடர் அஹமதாபாத்திலும் T20i தொடர் கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளன. கொல்கத்தாவில் நடைபெறும் மூன்று T20i போட்டிகளுக்கும் 75 சதவீத ரசிகர்களை அனுமதிக்க மேற்கு வங்க அரசு முடிவெடுத்துள்ளது.

ஆனால், அஹமதாபாத்தில் வேகமாக பரவி வருகின்ற கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு 3 ஒருநாள் போட்டிகளிலும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என குஜராத் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்றைய தினம் (02) அஹமதாபாத் வந்தடைந்தனர். இதன்போது அனைத்து வீரர்களுக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் ஷிகர் தவான், ருதுராஜ் கெயிக்வாட், ஸ்ரேயஸ் அய்யர், நவ்தீப் சைனி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், இந்திய அணியின் களத்தடுப்பு பயிற்சியாளர் டி. திலீப், பாதுகாப்பு அதிகாரி பி. லோகேஷ், மசாஜ் நிபுணர் ராஜீவ் குமார் ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒருவார காலம் தனிமையில் இருந்து தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு அணியுடன் இணைவார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதுஇவ்வாறிருக்க, இந்திய அணியின் முக்கிய வீரர்கள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டதை அடுத்து முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாட அணித்தலைவர் ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பாண்ட், தீபக் ஹூடா என ஐந்து துடுப்பாட்ட வீரர்கள் மட்டுமே அணியில் உள்ளார்கள்.

இதன் காரணமாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மயங்க் அகர்வாலை உடனடியாக ஒருநாள் அணியில் இணைத்துக்கொள்ள அந்நாட்டு தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனவே, இன்று அஹமதாபாத்துக்கு வரும் மயங்க் அகர்வால், மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். அதன்பிறகு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்ற முதலாவது ஒருநாள் போட்டியில் பயிற்சிகள் எதுவுமின்றி அவர் உடனடியாக விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, இந்திய குழாத்தில் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்ட தமிழகத்தின் ஷாருக்கான், சாய் கிஷோர், ரிஷி தவானுக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இந்திய அணியின் உப தலைவர் கேஎல் ராகுல் தனது சகோதரியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதனால் அவர் முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடமாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<