லெஜன்ட்ஸ் லீக் தொடரின் சம்பியன்களாக மாறிய வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணி

5211

நேற்று (29) நடைபெற்று முடிந்திருக்கும் லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், 25 ஓட்டங்களால் ஆசிய லயன்ஸினை வீழ்த்தியிருக்கும் வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது.

முன்னாள் முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, ஓமானின் மஸ்கட் நகரில் ஆரம்பமாகியது.

பிரண்டன் டெய்லருக்கு தடைக்காலத்தினை வழங்கிய ICC

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆசிய லயன்ஸ் அணித்தலைவரான மிஸ்பா உல் ஹக் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணிக்கு வழங்கினார்.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணி கெவின் பீடர்சன் மற்றும் கோரி அன்டர்சன் ஆகியோரின் அதிரடியோடு 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 256 ஓட்டங்கள் பெற்றது.

வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் கோரி அன்டர்சன் 43 பந்துகளுக்கு 8 சிக்ஸர்கள் மற்றும் 7 பெளண்டரிகள் அடங்கலாக 94 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருக்க, கெவின் பீடர்சன் 22 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பெளண்டரிகள் உடன் 48 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆசிய லயன்ஸ் அணியின் பந்துவீச்சில் நுவன் குலசேகர 3 விக்கெட்டுக்களையும், முத்தையா முரளிதரன் மற்றும் சமிந்த வாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 257 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய, ஆசிய லயன்ஸ் அணி வெற்றி இலக்கிற்காக போராடிய போதும் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 231 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியடைந்தது.

T20i கிரிக்கெட்டிற்கு தற்காலிக விடைகொடுக்கும் தமிம் இக்பால்

ஆசிய லயன்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்த மொஹமட் யூசூப் 21 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் ஒரு பெளண்டரி அடங்கலாக 39 ஓட்டங்கள் பெற, சனத் ஜயசூரிய 23 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 38 ஓட்டங்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணியின் பந்துவீச்சில் அல்பி மோர்கல் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், மொன்டி பனேசர் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக கோரி அன்டர்சனும், தொடர் நாயகனாக மோர்னே மோர்கலும் தெரிவாகினர்.

போட்டியின் சுருக்கம்

வேர்ல்ட் ஜயன்ட்ஸ் – 256/5(20) கோரி அன்டர்சன் 94*, கெவின் பீடர்சன் 48, நுவான் குலசேகர 45/3

ஆசிய லயன்ஸ் – 231/8 (20) மொஹமட் யூசுப் 39*, சனத் ஜயசூரிய 38, அல்பி மோர்கல் 35/3

முடிவு – வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணி 25 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<