பந்துவீச்சு ஆலோசகராக பணியாற்றத் தயாராகும் இலங்கையின் நட்சத்திர வீரர்

2761

2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளில் ஒரு வீரராக விளையாடுவதையும் பார்க்க பந்துவீச்சு ஆலோசகராக செயற்படுவது அணிக்கு பொருத்தமானது என இலங்கை கிரிக்கெட் முகாமைத்துவம் தீர்மானித்தால், எந்தவொரு தயக்கமும் இன்றி சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதற்கு தான் தயாராகவுள்ளதாக இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க தெரிவித்தார்.

[rev_slider LOLC]

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான 34 வயதாகும் லசித் மாலிங்க கடந்த காலங்களில் இலங்கை அணிக்கு பாரிய சேவையாற்றிய முக்கிய வீரராவார். முத்தையா முரளிதரன் மற்றும் சமிந்த வாஸுக்குப் பிறகு பந்துவீச்சாளராக இலங்கை அணிக்கு அதிகளவு வெற்றியைப் பெற்றுக்கொடுத்த வீரராகவும் அவர் விளங்குகிறார்.

அதிலும் குறிப்பாக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கிண்ணத்தை இலங்கைக்கு முதற்தடவையாக பெற்றுக்கொடுத்த இலங்கை அணியின் தலைவராகவும் அவர் பணியாற்றினார். அது மாத்திரமன்றி, டி20 போட்டிகளில் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுக்கொண்ட ஒரேயொரு இலங்கை வீரரும் மாலிங்கதான்.

T-20 உலகக் கிண்ணத்தில் ஏற்படவுள்ள வரலாற்று திருப்புமுனை

எனினும், தொடர் உபாதைகள் மற்றும் போதியளவு திறமைகளை வெளிப்படுத்தாமை உள்ளிட்ட காரணங்களால் இவர் இலங்கை அணியிலிருந்தும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றார்.

இதனையடுத்து, கிரிக்கெட் உலகில் வீரர்களை செல்வந்தர்களாக மாற்றுகின்ற முக்கியமான கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் போட்டிகளில் கடந்த 10 வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த லசித் மாலிங்கவை அவ்வணி விடுவித்திருந்தது. இதன்படி, இவ்வருடத்துக்கான ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்தில் முதற்தடவையாக கலந்துகொண்ட மாலிங்கவை, குறைந்த பட்சம் ஏலத்தில் எடுக்கலாம் என எதிர்பார்த்திருந்த போதிலும், அவரை எந்தவொரு அணியும் வாங்கவில்லை. இதனால் மாலிங்க மாத்திரமின்றி, அவரை விரும்புகின்ற கோடிக்கணக்கான ரசிகர்களும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்தனர்.

இந்நிலையிலையே, மாலிங்க ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அண்மையில் வழங்கிய செவ்வியில், 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு முன்னதாக சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெற எதிர்பார்த்துள்ளதாக அறிவித்துள்ளார்.

”தற்போதுள்ள நிலைமையில் நான் அணிக்காக விளையாடுவதை விட சக வீரர்களுக்கு ஆலோசனை வழங்குவது பொருத்தமானது எனஇலங்கை கிரிக்கெட் நிறுவனம் எதிர்பார்த்தால் எந்தவொரு தயக்கமுமின்றி மறுநாளே கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதற்கு தயாராகவுள்ளேன். ஆனால் இன்னும் சிறப்பாக விளையாடுகின்ற திறமை என்னிடம் இருப்பதை நான் நன்கு அறிவேன். ஆனால் இறுதி பதினொருவர் அணியில் உலகக் கிண்ணத்தில் விளையாட முடியாவிட்டால், குறைந்தபட்சம் ஆலோசகராக அணிக்கு ஒத்துழைப்பு வழங்க நான் தயாராகவுள்ளேன்” என்றார்.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன் பங்களாதேஷில் நிறைவுக்கு வந்த முத்தரப்பு ஒரு நாள் தொடரிலும் மாலிங்கவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தெரிவுக்குழு தெரிவித்திருந்தது. ஆனால் தனக்கு எதற்காக இத்தொடரில் ஓய்வு வழங்கப்பட்டது என்பது புரியாத புதிராகவே உள்ளது என மாலிங்க தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

2016ஆம் ஆண்டு காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக மாலிங்க கிரிக்கெட் போட்டிகளிலிருந்து சிறிது காலம் ஓய்வு பெற்றார். எனினும், கடந்த வருட முற்பகுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 போட்டிகளில் மீண்டும் களமிறங்கியிருந்தார். அதிலும் குறிப்பாக சுமார் ஒன்றரை வருடங்களாக ஒரு நாள் போட்டிகளில் விளையாடாமல் இருந்த மாலிங்க, கடந்த வருடம் ஜுன் மாதம் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியிருந்தார்.

இந்நிலையில், மாலிங்க இறுதியாக பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் ராங்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியிருந்ததுடன், அவ்வணிக்காக 8 போட்டிகளில் கலந்துகொண்டு 8 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார். அத்துடன் இலங்கை அணிக்காக இறுதியாக இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது ஒற்றை டி20 போட்டியில் விளையாடியிருந்தார்.

எனினும், உபாதைக்குப் பிறகு 2017ஆம் ஆண்டு மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் களமிறங்கிய மாலிங்க, கடந்த வருடத்தில் மாத்திரம் 6 டி20 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுக்களையும், 13 ஒரு நாள் போட்டிகளில் கலந்துகொண்டு 10 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

”என்னுடைய திறமைகளை பார்க்காமல் தொடர்ந்து அணியிலிருந்து புறக்கணிப்பது ஏன் என்பதை புரிந்துகொள்ள முடியாமல் உள்ளது. தெரிவுக்குழுவினர் எனது திறமையை எவ்வாறு அளவிடுகின்றார்கள் என்பதை அறிந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன். ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகின்ற வீரர்கள் மாத்திரம் தான் டி20 போட்டிகளிலும் விளையாடுவார்கள் என தெரிவுக்குழுவினர் தெரிவித்திருந்தனர். எனவே ஒரு நாள் போட்டிகளில் விளையாட மாட்டேன் என நான் ஒருபோதும் கூறவில்லை. முதலில் என்னால் சிறப்பாக விளையாட முடியுமா என்பதை தீர்மானிக்க குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும். இந்த புதிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டதையடுத்து எனக்கு இதுவரை எந்தவொரு போட்டியிலும் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே வெளிநபர்களின் தலையீடு காரணமாகவே இவர்கள் வேண்டுமென்றே என்னை புறக்கணித்து வருகின்றதை இதன் மூலம் உணர முடிகின்றது” என மாலிங்க தெரிவித்தார்.

முக்கோணத் தொடர் சம்பியனுக்கு பங்களாதேஷ் டெஸ்ட்டில் சவால் தருமா?

”என்னாலும் மீண்டும் திறமையை வெளிக்காட்டி அணியில் மீண்டும் இடம்பெற முடியும். ஆனால் அங்கு வேறொரு காரணம் இருக்குமாயின், தெரிவுக்குழுவினர் பதவி விலகும் வரை என்னால் அணிக்குள் வரமுடியாது.

அதேநேரம், கிரிக்கெட் விளையாடுவததை ஒருபோதும் நிறுத்திவிட மாட்டேன் என தெரிவித்த மாலிங்க, யாருடனும் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை. அதைவிட எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்துவிட்டு ஒதுங்கியிருப்பது மிகவும் நல்லது. எனவே இலங்கை அணியில் எனக்கு சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால் வெளிநாட்டு அணியொன்றுக்கு எனது சேவையைப் பெற்றுக்கொடுக்க ஆர்வமாக இருப்பதாகவும்” அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஐ.பி.எல் ஏலத்தில் எந்தவொரு அணியாலும் வாங்ப்படாமை  தொடர்பில் மாலிங்க கருத்து வெளியிடுகையில்,

ஐ.பி.எல் ஏலத்தில் என்னை எடுக்காதது கவலையில்லை. ஐ.பி.எல் அரங்கில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரராக நான் விளங்கிய போதும், டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாட வாய்ப்பு கிடைக்காமை கவலையளிக்கிறது. ஐ.பி.எல் தொடரில் ஒரு அணியில் 4 வெளிநாட்டு வீரர்களுக்கு மாத்திரம்தான் விளையாட முடியும். எனவே என்னுடைய வயதைக் கருத்திற் கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் என்னை விடுவிக்க அவர்கள் முடிவு செய்திருப்பார்கள்” என தெரிவித்தார்.

34 வயதாகும் மாலிங்க, ஒரு நாள் அரங்கில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்ததுடன், 4 ஹெட்ரிக் விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய உலகின் முதலாவது பந்துவீச்சாளராகவும் சாதனை படைத்தார். யோக்கர் பந்தில் உலகின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களையெல்லாம் நிலைகுலையச் செய்த உலகின் முதல் வேகப்பந்துவீச்சாளராக வலம்வந்த மாலிங்க, 2004ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகம் பெற்றுக்கொண்டார். இதுவரை 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 101 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளதுடன், 204 ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றி 7 ஐந்து விக்கெட்டுக்கள் உள்ளடங்கலாக 301 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார். அதேநேரம், டி20 அரங்கில் அதிக விக்கெட்டுக்களைக் (331) கைப்பற்றிய உலகின் 2ஆவது வீரராகவும் மாலிங்க விளங்குகிறார். எனினும், 2010ஆம் ஆண்டு டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வுபெற்ற அவர், 2014ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற டி20 உலகக்கிண்ணத்தில் இலங்கை அணியின் தலைவராகச் செயற்பட்டு சம்பியன் பட்டத்தை வென்றுகொடுக்க முக்கிய காரணமாக இருந்த வீரருமாவார்.