இங்கிலாந்தில் விளையாடவுள்ள ஸ்ரேயாஷ் ஐயர்

England County Cricket

277
espncricinfo

இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் ஸ்ரேயாஷ் ஐயர், இங்கிலாந்து கௌண்டி கழகமான லெங்கஷையர் அணியில் விளையாடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரேயாஷ் ஐயர், லெங்கஷையர் அணிக்காக இம்முறை நடைபெறவுள்ள றோயல் லண்டன் ஒருநாள் தொடரில் ஒரு மாதத்துக்கும் கூடிய காலப்பகுதிக்கு விளையாடவுள்ளார். அதன்படி, எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி அணியுடன் இணைவுள்ளார்.

இங்கிலாந்து ஒருநாள் அணியிலிருந்து ஆர்ச்சர், ஜோ ரூட் நீக்கம்

இவர், லெங்கஷையர் அணியில் விளையாடவுள்ள 6வது இந்திய வீரர் என்ற பெருமையை பெறவுள்ளார். இதற்கு முன்னர் பாரூக் என்ஜினீர், விவிஎஸ் லக்ஷ்மன், சௌரவ் கங்குலி, தினேஷ் மொங்கையா மற்றும் முரளி கார்த்திக் ஆகியோர் இந்த அணிக்காக விளையாடியுள்ளனர்.

லெங்கஷையர் அணியில் விளையாடவுள்ளமை குறித்து கருத்து வெளியிட்ட ஸ்ரேயாஷ் ஐயர், “லெங்கஷையர், நீண்ட நாட்களாக இந்திய கிரிக்கெட்டுடன் இணைந்திருக்கும் ஒரு பிரபலமான இங்கிலாந்து கிரிக்கெட் கழகம். புகழ்வாய்ந்த வீரர்களான பாரூக் என்ஜினீர், விவிஎஸ் லக்ஷ்மன் மற்றும் சௌரவ் கங்குலி ஆகியோர் விளையாடிய கழகத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளமையை பெருமையாக நினைக்கிறேன். 

ஓல்ட் ட்ரபோர்ட் மைதானம் முன்னணி சர்வதேச மைதானங்களில் ஒன்று. அங்கு விளையாடுவதையும், பயிற்றுவிப்பாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் சக வீரர்களை பார்ப்பதற்கு ஆவலுடன் உள்ளேன்” என்றார்.

அதேநேரம், ஸ்ரேயாஷ் ஐயரை அணியில் இணைப்பது குறித்து லெங்கஷையர் அணியின் பணிப்பாளர் போல் எலோட் குறிப்பிடுகையில், “வளர்ந்துவரும் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரராகவும், தலைவராகவும் ஜொலித்து வருபவர் ஸ்ரேயாஷ் ஐயர். அவருடைய திறமையை ஓல்ட் ட்ரெபோர்ட் மைதானத்தில் பார்வையிடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஸ்ரேயாஷ் ஐயர் ஐ.பி.எல். இறுதிப்போட்டிவரை தலைமை தாங்கியுள்ளார். அத்துடன் முதற்தர போட்டிகளில் விளையாடியுள்ளார். அவருடைய திறமை அதிக அழுத்தமான தருணங்களில் மிகவும் அமைதியாக வெளிப்பட்டுள்ளது. எனவே, எமது இளம் அணிக்கு அவரால் சிறப்பாக பங்காற்ற முடியும்” என்றார்.

லெங்கஷையர் அணியானது தங்களுடைய முதல் றோயல் லண்டன் ஒருநாள் போட்டியில், சசெக்ஸ் அணியை எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<