ஆசிய இளையோர் விளையாட்டு விழாவில் தங்கம் வென்று வரலாறு படைத்தார் லஹிரு

Asian Youth Games 2025

237
Asian Youth Games 2025

பஹ்ரெய்னில் நடைபெற்றுவரும் 3ஆவது ஆசிய இளையோர் விளையாட்டு விழாவில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட லஹிரு அச்சிந்த இலங்கைக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்து சாதனை படைத்தார்.

ஆசிய இளையோர் விளையாட்டு விழா வரலாற்றில் இலங்கை வென்ற முதல் தங்கப் பதக்கமும் இதுவாகும்.

அத்துடன், அடுத்த ஆண்டு செனகல் நாட்டில் நடைபெறவுள்ள இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பையும் அவர் உறுதி செய்தார்.

45 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் அதிகமான வீரர்கள் பங்குகொண்டுள்ள 3ஆவது ஆசிய இளையோர் விளையாட்டு விழா நேற்று முன்தினம் (22) பஹ்ரைனில் ஆரம்பமாகியது. இம்முறை விளையாட்டு விழாவில் இலங்கையிலிருந்து 100 வீர, வீராங்கனைகள் பங்குபற்றியுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று (23) நடைபெற்ற ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இரத்தினபுரி புனித அலோஷியஸ் தேசிய பாடசாலையைச் சேர்ந்த லஹிரு அச்சிந்த, போட்டித் தூரத்தை 3 நிமிடங்கள், 57.42 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இப்போட்டியில் சீன வீரர் லிஹுஆ ஷா (3:58.73) வெள்ளிப் பதக்கத்தையும், ஹொங்கொங் வீரர் ஹோ சுன் அவ் (4:05.09) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இதேவேளை, பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் நெத்மி கிம்ஹானி வெண்கலப் பதக்கத்தை வென்றார். புத்தளம் புனித அந்திரேயார் கல்லூரி மாணவியான இவர், அப் போட்டியை நிறைவுசெய்ய 4 நிமிடங்கள், 52.32 செக்கன்களை எடுத்துக் கொண்டார்.

INSERT nethmi image here

அப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனை நஸ்மினா ராக்கிம்ஜோவா (4:51.20) தங்கப் பதக்கத்தையும் கசக்ஸ்தான் வீராங்கனை விக்டோரியா மெல்னிக்கோவா (4:51.61) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

இதனிடையே, ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் பங்குகொண்ட கஹவத்த மத்திய மக வித்தியாலய வீரர் சவிந்து சுதாரக 14.16 மீற்றர் தூரம் பாய்ந்து 4ஆவது இடத்தைப் பிடித்தார். அதேபோல், ஆண்களுக்கான 110 மீற்றர் தடையோட்டத்தின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றிருந்த கிசல் ஓஷத, அப் போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் இரண்டாவது தகுதிகாண் போட்டியில் பங்குபற்றிய நீர்கொழும்பு, கேட்வே சர்வதேசப் பாடசாலை வீரரான சானுக்க கொஸ்தா 47.79 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து முதலாம் இடத்தைப் பெற்று இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றார்.

இது தவிர, பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் முதலாவது தகுதிகாணில் பங்குபற்றிய பெந்தொட்ட காமினி தேசிய பாடசாலை வீராங்கனை செனாதி தேவ்ஹாரா (59.92 செக்.) 6ஆவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார். பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் முதலாவது தகுதிகாண் சுற்றை 12.36 செக்கன்களில் நிறைவு செய்த கம்பஹா ஹொலி க்ரொஸ் கல்லூரியின் தாரணி நிர்மினா அரை இறுதிக்கு முன்னேறி இருந்தார். எனினும் இரண்டாவது அரை இறுதிப் போட்டியை 12.37 செக்கன்களில் நிறைவு செய்த அவரால் 7 ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<