பயிற்சிப் போட்டியில் திறமையை நிரூபித்த இலங்கை வீரர்கள்

195

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இடையே இன்று (21) நடைபெற்று முடிந்திருக்கும் பயிற்சி ஒருநாள் போட்டியில் குசல் மெண்டிஸ் தலைமையிலான அணி, குசல் பெரேரா தலைமையிலான அணியினை 2 ஓட்டங்களால் வீழ்த்தி த்ரில்லர் வெற்றியினை பதிவு செய்துள்ளது.

முதலிரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு

தற்போது பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, அங்கே பங்களாதேஷ் அணியுடன் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி. இன்) ஒருநாள் சுபர் லீக்கிற்காக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.

அதன்படி, இந்த ஒருநாள் தொடருக்கு தயாராக இலங்கை ஒருநாள் அணியின் வீரர்கள் இடையே 40 ஓவர்கள் கொண்ட பயிற்சிப் போட்டி, இன்று குசல் பெரேரா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகிய வீரர்களின் தலைமையில் உள்ள அணிகள் இடையே நடைபெற்றது. 

இந்தப் பயிற்சிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற குசல் மெண்டிஸ் தலைமையிலான அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்து 40 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 284 ஓட்டங்களை குவித்தது.

குசல் மெண்டிஸ் அணியின் துடுப்பாட்டத்தில் நிரோஷன் டிக்வெல்ல ஆட்டமிழக்காமல் 88 ஓட்டங்கள் பெற்று அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையினை பதிவு செய்ய, நான்கு மாத இடைவெளி ஒன்றின் பின்னர் இலங்கை அணியில் இணைந்திருக்கும் குசல் மெண்டிஸ் 69 ஓட்டங்களை எடுத்தார்.

மறுமுனையில் குசல் பெரேரா தலைமையிலான அணியின் பந்துவீச்சில் தனுஷ்க குணத்திலக்க, அசித்த பெர்னாந்து, இசுரு உதான மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.

Shadow Players திட்டத்தினை ஆரம்பித்துள்ள இலங்கை கிரிக்கெட்

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 285 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய குசல் பெரேரா தலைமையிலான அணி, போராட்டம் காண்பித்த போதிலும் 37.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து போட்டியில் சிறிய ஓட்டவித்தியாசம் ஒன்றில் தோல்வியினை தழுவியது.

குசல் பெரேரா தலைமையிலான அணியின் துடுப்பாட்டத்தில் போராட்டம் காட்டிய அஷேன் பண்டார ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களைப் பெற்றிருக்க, வனிந்து ஹஸரங்க 79 ஓட்டங்களை எடுத்திருந்தார். அதேவேளை, இசுரு உதான 47 ஓட்டங்களை எடுத்து தனது திறமையினை வெளிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் தெரிவு

இதேநேரம், குசல் மெண்டிஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் வேகப்பந்துவீச்சாளரான சாமிக்க கருணாரட்ன 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்தமை குறிப்பிடத்தக்கது.

இப்பயிற்சிப் போட்டியினை அடுத்து பங்களாதேஷ் – இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி எதிர்வரும் திங்கட்கிழமை (23) மிர்பூரில் ஆரம்பமாகின்றது.

போட்டியின் சுருக்கம்

குசல் மெண்டிஸ் XI – 284/5 (40) நிரோஷன் டிக்வெல்ல 88*, குசல் மெண்டிஸ் 69, தனுஷ்க குணத்திலக்க 1/26

குசல் பெரேரா XI – 282 (37.2) அஷேன் பண்டார 80*, வனிது ஹஸரங்க 79, இசுரு உதான 47, சாமிக்க கருணாரட்ன 3/40

முடிவு – குசல் மெண்டிஸ் XI அணி 2 ஓட்டங்களால் வெற்றி 

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…