மீண்டும் துடுப்பால் துவம்சம் செய்த குசல் மெண்டிஸ்

128

தென்னாபிரிக்காவில் இடம்பெற்று வரும் SA20 லீக் T20 தொடரில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற லீக் போட்டி ஒன்றில் இலங்கை வீரர் குசல் மெண்டிஸ் துடுப்பாட்டத்தில் அபாரம் காண்பித்துள்ளார்.

அதன்படி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொடரின் கடைசி லீக் போட்டியில் பிரிட்டோரியா கெபிடல்ஸ் மற்றும் பார்ல் றோயல்ஸ் அணிகள் செண்சூரியன் சுபர்ஸ்போர்ட் அரங்கில் மோதின.

போட்டியின் நாணய சுழற்றியில் வெற்றி பெற்ற பார்ல் றோயல்ஸ் அணியின் தலைவர் டேவிட் மில்லர், ஏற்கனவே, தாம் விளையாடிய 9 போட்டிகளில் 6 வெற்றிகளைப் பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பிரிட்டோரியா கெபிடல்ஸ் அணியை முதலில் துடுப்பாடுமாறு பணித்தார்.

தோல்வியின் விளிம்பில் இருந்த அணியை அதிரடியால் மீட்ட தசுன் ஷானக

சர்வதேச T20 லீக்குகளில் அதிரடி காட்டும் குசல், மதீஷ

இதன்படி முதலில் துடுப்பாடிய பிரிட்டோரியா கெபிடல்ஸ் அணிக்கு இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் மற்றும் இங்கிலாந்து வீரர் பிலிப் சோல்ட் ஆகியோர் மூலம் சிறந்த ஆரம்பம் கிடத்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்காக வெறும் 5.2 ஓவர்களில் 62 ஓட்டங்களைக் குவித்தனர்.

ஆரம்ப விக்கெட்டாக 39 ஓட்டங்களுடன் வீழ்ந்த சோல்ட்டினைத் தொடர்ந்து வந்த வீரர்களும் ஓரளவு பங்காற்றி ஆட்டமிழந்து சென்றபோதும், குசல் மெண்டிஸ் அதிரடியாக ஆடி ஓட்டங்களைக் குவித்தார்.

இன்னிங்ஸின் 17ஆவது ஓவர் வரை களத்தில் இருந்த அவர் 41 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்களாக 80 ஓட்டங்களைக் குவித்த நிலையில் தென்னாபிரிக்க வேகப் பந்துவீச்சாளர் லுங்கி நிகிடியின் பந்தில் டேவிட் மில்லரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

ஏற்கனவே நான்கு போட்டிகளில் மாத்திரம் விளையாடிய குசல் மெண்டிஸ் இந்த தொடரில் தனது முதலாவது அரைச் சதத்தை இந்தப் போட்டியில் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்கதக்கது.

குறித்த இன்னிங்ஸில் குசல் மெண்டிஸைத் தொடர்ந்து அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக இன்ங்ராம் 41 ஓட்டங்களை விளாசியிருந்தார். இவர்களின் பங்களிப்புடன் பிரிட்டோரியா கெபிடல்ஸ் அணி தமது இன்னிங்ஸ் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 226 ஓட்டங்களைக் குவித்தது. பந்துவீச்சில் லுங்கி நிகிடி இரண்டு விக்கெட்டுக்களை அதிகபட்சமாகக் கைப்பற்றினார்.

இலங்கையின் ஆசியக் கிண்ண வாய்ப்பை மீண்டும் தட்டிப் பறிக்குமா UAE?

பின்னர், 227 என்ற இமாலய இலங்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய பார்ல் றோயல்ஸ் அணியினர் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களைப் பெற்று 59 ஓட்டங்களால் தோல்வி கண்டது.

அந்த அணியின் துடுப்பாட்டத்தில் தனி ஒருவராகப் போராடிய இங்கிலாந்து அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் 45 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்களாக 70 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

பிரிட்டோரியா கெபிடல்ஸ் அணியின் பந்துவீச்சில் பிரிட்டோரியஸ் மற்றும் ஆதில் ரஷீத் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை அதிகபட்சமாக கைப்பற்றினர்.

இந்த வெற்றியுடன் பிரிட்டோரியா கெபிடல்ஸ் அணியினர் லீக் சுற்றில் 10 போட்டிகளில் 7 வெற்றிகளைப் பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். பார்ல் றோயல்ஸ் வீரர்கள் 10 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளனர்.

குழுநிலைப் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில்  SA20 லீக் தொடரின் முதல் அரையிறுதியில் பிரிட்டோரியா கெபிடல்ஸ் மற்றும் பார்ல் றோயல்ஸ் அணிகள் மோதவுள்ள அதேவேளை, இரண்டாவது அரையிறுதியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<