பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் முதலிடம் பிடித்த சங்கக்கார

900
Image Courtesy - PSL Offical Website

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் 3ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் சுப்பர் லீக் டி20 போட்டித் தொடர் கடந்த பெப்ரவரி மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகியதுடன், 15 லீக் போட்டிகள் இதுவரை நடைபெற்றுள்ளன.

ஆறு அணிகளின் பங்குபற்றலுடன் நடைபெற்று வருகின்ற இம்முறை போட்டித் தொடரில் இலங்கை சார்பாக நட்சத்திர துடுப்பாட்ட வீரரான குமார் சங்கக்கார மாத்திரம் விளையாடி வருகின்றார்.

கடந்த வருடம் கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடிய, குமார் சங்கக்காரவை பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் முதற்தடவையாக இடம்பெற்றுள்ள முல்டான் சுல்தான்ஸ் அணி ஒப்பந்தம் செய்ததுடன், அவ்வணியின் ஆலோசகராகவும் அவர் செயற்பட்டு வருகின்றார்.

இறுதி முடிவாக சுதந்திரக் கிண்ணத்திருந்து ஷகீப் அல் ஹஸன் நீக்கம்

உலகின் பல்வேறு நாடுகளில் இடம்பெற்றுவருகின்ற டி20 போட்டித் தொடர்களில் விளையாடி வருகின்ற 40 வயதான சங்கக்கார, கடந்த வருடம் நடைபெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் அணியின் தலைவராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனது வயதையும் தாண்டி நாளுக்கு நாள் துடுப்பாட்டத்தில் முன்னேற்றம் கண்டு வருகின்ற சங்கக்கார, இம்முறை பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்றார்.

முல்டான் சுல்தான்ஸ் அணிக்காக இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 59.00 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் 4 இன்னிங்சுகளில் 3 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 177 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

இதில் பெஷாவர் சல்மி அணிக்கெதிரான முதல் போட்டியில் 57 ஓட்டங்களையும், லாஹுர் கிளெண்டர்ஸ் அணிக்கெதிராக 63 ஓட்டங்களையும், குவாட்டா கிளெடியேட்டர்ஸ் அணிக்கெதிராக 57 ஓட்டங்களையும் சங்கக்கார பெற்றுக்கொண்டதுடன், இம்மூன்று போட்டிகளிலும் அவ்வணி வெற்றியைப் பதிவுசெய்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, சங்கக்கார இறுதியாக விளையாடிய ஏழு டி20 போட்டிகளில் 87.8 என்ற சராசரியுடன் 06 அரைச்சதங்களுடன் 439 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், கடந்த மாதம் நிறைவுக்கு ஹொங்கொங் டி20 பிளிட்ஸ் போட்டித் தொடரின் ஆட்ட நாயகனாகவும் அவர் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Image Courtesy – PSL Offical Website

இந்நிலையில், போட்டி நிறைவடைந்த பிறகு நடைபெற்ற நேர்காணலில் கலந்துகொண்டு சங்கக்கார கருத்து வெளியிடுகையில், ”உண்மையில் பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் இம்முறையும் விளையாட கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. அதிலும் குறிப்பாக பாகிஸ்தானின் சிரேஷ்ட வீரர்களைப் போன்று இளம் வீரர்களுடன் விளையாடுவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது. உலகத்தில் இடம்பெறுகின்ற ஏனைய டி20 லீக் போட்டிகளைப் போன்று பாகிஸ்தான் சுப்பர் லீக்கும் போட்டித் தன்மை கொண்டதாக மாறியுள்ளது” என்றார்.

அத்துடன், ”எனக்கு தற்போது 40 வயதாகின்றது. எனினும், தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுகின்ற உடற்தகுதியை நான் கொண்டிருக்கின்றேன். இதன் காரணமாக ரசிகர்களின் கண்களுக்கு விருத்தளிக்கின்ற டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதற்கு ஆர்வமாக உள்ளதாகவும்” அவர் தெரிவித்தார்.

இதேநேரம், இம்முறை பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் பெஷாவர் சல்மி அணியின் டுவைன் ஸ்மித் இதுவரை 5 போட்டிகளில் கலந்துகொண்டு 148 ஓட்டங்களைக் குவித்து 2ஆவது இடத்திலும், குவாட்டா கிளெடியேட்டர்ஸ் அணியின் ஷேன் வொட்சன் 146 ஓட்டங்களைக் குவித்து 3ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை உள்ளூர் T-20 தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள்

இந்நிலையில், சங்கக்காரவின் அணியில் இடம்பெற்றுள்ள மற்றுமொரு நட்சத்திர வீரரான இம்ரான் தாஹிர், இம்முறை பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள தாஹிர், 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார். லாஹுர் அணிக்கெதிராக 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், இஸ்லாமாபாத் அணிக்கெதிராக 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய இம்ரான் தாஹிர், இறுதியாக நடைபெற்ற குவேட்டா அணியுடனான போட்டியில் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி ஹெட்ரிக் சாதனையும் படைத்தார்.

இதேநேரம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் மொஹமட் சமி 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றியவர்கள் வரிசையில் 2ஆவது இடத்தையும், முல்டான் சுல்தான்ஸ் அணியின் மற்றுமொரு வீரரான ஜுனைட் கான், 7 விக்கெட்டுக்களை கைப்பற்றி 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் இமாத் வசீம் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணி முதலிடத்திலும், ஷுஐப் மலிக் தலைமையிலான முல்டான் சுல்தான்ஸ் அணி 2ஆவது இடத்திலும், டெரன் சமி தலைமையிலான பெஷாவர் சல்மி அணி 3ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.