முதல் பாதியின் அபார ஆட்டத்தினால் புனித ஹென்ரியரசர் கல்லூரி அரையிறுதிக்குள்

2627
St.Henry's v Maris Stella

19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான ”கொத்மலே” கால்பந்து சுற்றுத் தொடரில் இன்று (செப்.29) இடம்பெற்ற மூன்றாவது காலிறுதியில் நீர்கொழும்பு மரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டதன் மூலம் யாழ்ப்பாணம் புனித ஹென்ரியரசர் கல்லூரி அணி அரையிறுதியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. 

ஏற்கனவே இடம்பெற்று முடிந்த குழு மட்டத்திலான முதல் சுற்றுப் போட்டிகளில் குழு ”ஏ” யில் போட்டியிட்ட யாழ்ப்பாணம் புனித ஹென்ரியரசர் கல்லூரி அணி, தாம் விளையாடிய ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்று குழு நிலையில் முதல் இடத்தைப் பெற்றுக்கொண்டது. அதேபோன்று கடந்த முறை இடம்பெற்ற கொத்மலே சொக்ஸ் தொடரின் சம்பியனான வந்த அணியாகவும் இவ்வணி உள்ளது. எனவே இவ்வணி சுற்றுத் தொடரில் உள்ள மிகவும் பலம் வாய்ந்த ஒரு அணியாகவே கருதப்பட்டது.

அதேபோன்று, குழு ”டி” யில் போட்டியிட்ட நீர்கொழும்பு மரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணி, தாம் விளையாடிய ஆறு போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் தோல்வியடைந்தும், ஒரு சமநிலையான முடிவுடனும் குழு மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.

அதன்படி குழு ”ஏ” யில் இருந்து தெரிவாகிய புனித ஹென்ரியரசர் கல்லுாரி அணியும், குழு ”டி” யில் இருந்து தெரிவாகிய மரிஸ் ஸ்டெல்லா கல்லுாரி அணியும் இன்றைய காலிறுதியில் மோதிக்கொண்டன. இந்தப் போட்டி, ஏற்கனவே முதல் இரண்டு காலிறுதிப் போட்டிகளும் இடம்பெற்ற கொழும்பு சிட்டி லீக் கால்பந்து மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டி ஆரம்பித்தது முதலே புனித ஹென்ரியரசர் கல்லுாரி அணியினர் சிறந்த முறையில் தமது திறமையை வெளிப்படுத்தினர். போட்டியின் 9ஆவது நிமிடத்தில் அவ்வணியின் முக்கிய வீரராகக் கருதப்படும் ஜுட் சுபன் தனது அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து 17ஆவது நமிடத்தில் அவ்வணியின் மற்றொரு வீரரான அனோஜன் இரண்டாவது கோலைப் பெற்றுக்கொடுக்க, புனித ஹென்ரியரசர் கல்லுாரி அணி முதல் 20 நிமிடங்களிலேயே 2-0 என்று முன்னிலை பெற்றது. அதன் பின்னரும் அவ்வணி கோல் பெறுவதற்கான வாய்ப்புக்களை பெற்றாலும் அந்த வாய்ப்புகள் சிறந்த முறையில் நிறைவு செய்யப்படவில்லை.

முதல் பாதியில் புனித ஹென்ரியரசர் கல்லுாரி அணியினரின் பலமே அதிகமாக இருந்தமையினால், மரிஸ் ஸ்டெல்லா கல்லுாரி அணி வீரர்களுக்கு பந்தைத் தமது கால்களில் வைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே கிடைத்தது.

முதல் பாதி: புனித ஹென்ரியரசர் கல்லூரி  2 – 0 மரிஸ் ஸ்டெல்லா கல்லூரி

பின்னர் ஆரம்பமாகிய இரண்டாவது பாதியில் மரிஸ் ஸ்டெல்லா கல்லுாரி அணியினரின் ஆதிக்கம் முதல் பாதியை விட சற்று அதிகரித்தது. இரண்டாவது பாதியில் இரு அணியினரும் சம அளவில் மோதிக்கொண்டனர்.

இதில் இரு அணிகளுக்கும் பல கோணர் வாய்ப்புக்கள் கிடைத்தபோதும் கோல்காப்பாளர்கள் மற்றும் பின்கள வீரர்களின் சிறந்த ஆட்டத்தினால் எந்தவித கோல்களும் யாராலும் பெறப்படவில்லை. எனினும் போட்டியின் இறுதி 30 நிமிடங்கள் மிகவும் விறுவிறுப்பாகவே சென்றது.

எனினும் முதல் பாதியில் பெறப்பட்ட கோல்கள் இரண்டும் மாத்திமே போட்டியில் பெறப்பட்ட மொத்த கோல்களாக இருந்தன.

முழு நேரம்: புனித ஹென்ரியரசர் கல்லூரி  2 – 0 மரிஸ் ஸ்டெல்லா கல்லூரி

பெறப்பட்ட கோல்கள்

புனித ஹென்ரியரசர் கல்லூரி- ஜுட் சுபன் (09), அனோஜன் (20)

போட்டியின் பின்னர் புனித ஹென்ரியரசர் கல்லூரி அணியின் பயிற்றுவிப்பாளர் டனிஸ்டன் விஜயகுமார் thepapare.com இடம் பிரத்தியேகமாகக் கருத்து தெரிவிக்கையில்,

”இன்றைய போட்டியில் இரு அணிகளும் சம அளவிலான பலத்தைக் கொண்ட அணிகளாகவே கருதப்பட்டன. எனினும் எமது வீரர்கள் போட்டியின் ஆரம்பத்திலேயே சிறந்த முறையில் செயற்பட்டதால், இரு கோல்களையும் விரைவில் பெற்றுக்கொண்டனர்.

எனினும் இரண்டாவது பாதியில் எமது அணியினரின் ஆட்டம் சற்று மந்தமாக இருந்தது. அடுத்த போட்டிகளில் அவ்வாறான நிலைகளை இல்லாமல் ஆக்குவோம்.

அரையிறுதியில் எம்மோடு ஸாஹிரா கல்லூரி போட்டியிடும் என்று எதிர்பார்க்கின்றோம். அவ்வாறு அந்த அணி வந்தால், எமக்கு அரையிறுதி, இறுதிப் போட்டி போன்றே இருக்கும். அதில் எமது முழுத் திறமையையும் காண்பிப்போம்” என்றும் தெரிவித்தார்.  

Thepapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – அன்டனி ரமேஷ் (புனித ஹென்ரியரசர் கல்லூரி)