இந்திய அணியை துரத்தும் காயம்: முக்கிய சகலதுறை வீரர் விலகல் 

India tour of England 2025

39
India tour of England 2025

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணியின் சகலதுறை வீரர் நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக விலகியுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதேபோல, இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களான ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் காயத்தால் அவதிப்படுவதால் இங்கிலாந்துடனான 4ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்திய இங்கிலாந்து அணி 2 -1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.

அதைத்தொடர்ந்து நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் மான்செஸ்டரில் ஆரம்பமாக உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடர் தோல்வியைத் தவிர்க்க முடியும். இதனால் இந்திய வீரர்கள் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு தீவிர முயற்சி மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் முக்கிய சகலதுறை வீரரான நிதிஷ் குமார் ரெட்டி எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மூட்டில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் எனவும் மேலதிக சிகிச்சைக்காக அவர் விரைவில் இந்தியா திரும்ப உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று இங்கிலாந்துடனான 2ஆவது டெஸ்ட்டில் 10 விக்கெட் வீழ்த்தி இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப், தற்போது இடுப்பு பகுதி காயத்தால் அவதிப்பட்டு வருவதால் இங்கிலாந்துடனான 4ஆவது டெஸ்ட்டில் களமிறங்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுபுறத்தில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பயிற்சியின் போது காயத்தைச் சந்தித்தார். இதுகுறித்து வெளியான தகவலின் படி அர்ஷ்தீப் சிங் வலைப்பயிற்சியில் சாய் சுதர்ஷன் அடித்த பந்தை தடுக்க முயன்றபோது கையில் காயத்தை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் அவரது காயம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்ததுடன், இத்தொடரில் இருந்து விலகும் சூழலும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அணியின் மருத்துவக் குழு அவரது காயத்தை மதிப்பிட்டு வருவதாகவும், அதன் முடிவிலேயே அவர் இத்தொடருக்கான இந்திய அணியுடன் பயணிப்பாரா இல்லையா என்பது தெரியவரும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இதன் காரணமாக ஹரியானாவைச் சேர்ந்த 24 வயதான வேகப் பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ்ஜை மாற்றீடு வீரராக இணைத்துக்கொள்ள பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் இறுதிப் பதினொருவர் அணியில் அன்ஷுல் கம்போஜ் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா A அணியில் இடம்பெற்று விளையாடிய அன்ஷுல் கம்போஜ், சிறப்பாக செயல்பட்டு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அதன் காரணமாகவே அவர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ரஞ்சி கிண்ணத் தொடரில் கேரளா அணிக்கு எதிரான போட்டியில், ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். குறிப்பாக, ரஞ்சி கிண்ணத்தில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். கடந்த ரஞ்சி கிண்ண கிரிக்கெட் தொடரில் 6 போட்டிகளில் விளையாடிய அன்ஷுல் கம்போஜ், 34 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கம்போஜ், 11 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<