இந்தியா செல்லும் அந்-நூர் தேசிய பாடசாலையின் பந்து பட்மின்டன் வீரர்கள்

243

இந்தியாவின் ஹைதராபாத் நகரில் இடம்பெறும் இந்தோ – இலங்கை பந்து பட்மின்டன் (Indo-Sri Lanka Ball Badminton) டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இலங்கையின் 16 வயதின் கீழ்ப்பட்ட பந்து பட்மின்டன் அணிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை அந்-நூர் தேசிய பாடசாலையின் 12 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய பந்து பட்மின்டன் சம்மேளனம் (BBFOI) ஏற்பாடு செய்துள்ள இந்தோ – இலங்கை பந்து பட்மின்டன் தொடர் எதிர்வரும் 19 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கை மகளிர் கால்பந்து அணியில் மலையக வீராங்கனை யுவராணி

சர்வதேச ரீதியான இத்தொடரில் இலங்கையின் 20 வயதுப்பிரிவினைச் சேர்ந்த பந்து பட்மின்டன் அணிக்கும், 16 வயதுப்பிரிவினைச் சேர்ந்த பட்மின்டன் அணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்தே தேசிய ரீதியில் பந்து பட்மின்டன் போட்டிகளில் சிறந்த அடைவுகளை காட்டிய வாழைச்சேனை அந்-நூர் தேசிய பாடசாலையின் வீரர்கள் தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்யும் சந்தர்ப்பத்தினைப் பெற்றுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கை பந்து பட்மின்டன் சம்மேளனத்தின் (SLNBBF) ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்றிருந்த கனிஷ்ட வீரர்களுக்கான தேசிய பந்து பட்மின்டன் சம்பியன்ஷிப் தொடரில் வாழைச்சேனை அந்-நூர் தேசிய பாடசாலை வீரர்கள் 16 வயதுப்பிரிவில் சம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இத்தொடரில் கலந்து கொள்வதன் மூலம் வாழைச்சேனை அந்-நூர் தேசிய பாடசாலையின் வீரர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்திருக்கின்றனர். ஏனெனில், கிழக்கு மாகாண பாடசாலை ஒன்றினது வீரர்கள் தேசிய பந்து பட்மின்டன் அணியில் இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும்.

நடைபெறவுள்ள இந்த இந்தோ – இலங்கை பந்து பட்மின்டன் டெஸ்ட் தொடரில் பந்து பட்மின்டன் போட்டிகளுக்கு மேலதிகமாக ஒரு விஷேட முகாம் ஒன்றின் மூலம்  இலங்கை வீரர்களுக்கு பந்து பட்மின்டன் விளையாட்டில் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான பிரத்தியேக பயிற்சிகளும் வழங்கப்படவிருக்கின்றன.

இத்தொடரில் இலங்கை பந்து பட்மின்டன் அணிக்கு முகாமையாளராக செயற்படப்போகும் ALM. இர்பான் அவர்கள் தொடருக்காக தெரிவு செய்யப்பட்ட அந்-நூர் பாடசாலை மாணவர்கள் பற்றி ThePapare.com உடன் பேசும் பொழுது இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

“இந்தியாவின் ஹைதராபாத் நகரில் இடம்பெறவிருக்கும் இந்த தொடரில்  இலங்கையைச் சேர்ந்த 34 வீர, வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இதில், 16 வயதுப்பிரிவு தேசிய பந்து பட்மின்டன் அணியை பிரதிநிதித்துவம் செய்வதற்காக அந்-நூர் தேசிய பாடசாலையின் 12 வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்தொடருக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள இவ்வீரர்கள் மும்முரமாக தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்காலத்தில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பந்து பட்மின்டனும் சேர்க்கப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றது. எனவே, இப்போது நடைபெறவுள்ள இந்தோ – இலங்கை டெஸ்ட் தொடரில் திறமை காட்டும் வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்கும் ஒரு சந்தர்ப்பத்தினையும் எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ள முடியும்“ எனக் குறிப்பிட்டிருந்தார்.

  • பயிற்சிகளில் ஈடுபடும் அந்-நூர் பாடசாலை வீரர்கள்

இந்தோ – இலங்கை பந்து பட்மின்டன் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கையின் தேசிய பந்து பட்மின்டன் அணி வீரர்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி காலை இந்தியாவை நோக்கி பயணமாகின்றனர்.

அந்-நூர் தேசிய பாடசாலையில் இருந்து 16 வயதின் கீழ்ப்பட்ட தேசிய பட்மின்டன் அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள வீரர்கள்

  1. MHM. ஹனான்
  2. MM. அப்ராத்
  3. MAA. இலாஹி
  4. MFM. அல்-அமீன்
  5. MNM. முஸ்னி
  6. MBM. நஜாத்
  7. AMA. சாஹிரான்
  8. MFM. சியாத்
  9. MM. அப்னான்
  10. MNR. சஹரான்
  11. MM. மக்காரிம்
  12. MSM. கைப்

 

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<