ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுகிறார் ஜேபி டுமினி

116

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு சகலதுறை வீரரான ஜேபி டுமினி, எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருடன், சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். எனினும், இவர் சர்வதேச T20I போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ள இம்ரான் தாஹிர்

தென்னாபிரிக்க அணியின் சுழல்…

தென்னாபிரிக்க அணியின் அனுபவ வீரர்களில் ஒருவரான ஜேபி டுமினி, கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இதன் பின்னர் ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் விளையாடிவந்த இவர், தோற்பட்டை உபாதை காரணமாக அதிகமான போட்டிகளில் பங்கேற்கவில்லை.

ஜேபி டுமினி உபாதை காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்திலிருந்து எவ்வித போட்டிகளிலும் விளையாடவில்லை. தற்போது, குணமடைந்துள்ள இவர், இலங்கை அணிக்கு எதிரான 4ஆம் மற்றும் 5ஆவது ஒருநாள் போட்டிகளுக்கான குழாத்தில் இணைக்கப்பட்டார். நான்காவது போட்டியில் விளையாடிய இவர், ஒரு விக்கெட்டினை வீழ்த்தியதுடன், 21 பந்துகளில் 31 ஓட்டங்களை விளாசியிருந்தார்.

டுமினியின் மீள் வருகை தென்னாபிரிக்க அணிக்கு பலமளித்துள்ள போதிலும், இவரின் திடீர் ஓய்வு முடிவானது இரசிகர்களுக்கு ஏமாற்றத்தை வழங்கியுள்ளது. எவ்வாறாயினும் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ள அவர், ஓய்வு குறித்து குறிப்பிடுகையில்,

“உபாதை காரணமாக கடந்த சில மாதங்களாக போட்டிகளில் பங்கேற்காத நிலையில், மீண்டும் கிரிக்கெட்டில் பிரகாசிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், எதிர்காலத்தில் சில குறிக்கோள்களை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது.

எனது இந்த முடிவானது இலகுவாக எடுக்கப்பட்டது அல்ல. நான் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதற்கு இதுதான் சரியான தருணம் என தோன்றுகிறது. எவ்வாறாயினும், சர்வதேச T20I மற்றும் T20 லீக் போட்டிகளில் விளையாட தயாராக இருக்கிறேன். ஆனால், எந்த தருணத்திலும் எனது குடும்பத்துக்கு முன்னுரிமை அளிக்க விரும்புகிறேன். நான் விரும்புகின்ற விளையாட்டுடன் வாழ்ந்தமையை நினைத்து பெருமையடைகிறேன். அதேநேரம், இவ்வளவு காலங்களும் எனக்கு ஆதரவாக இருந்த அணி வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இரசிகர்கள் என அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

Photos : Sri Lanka vs South Africa – 4th ODI

ThePapare.com | 13/03/2019 | Editing and re-using images without permission of ThePapare.coM…

ஜேபி டுமினி இதுவரை 193 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 37.09 என்ற சராசரியில் 5,047 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், 68 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதேநேரம், ஜேபி டுமினி இந்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தில் விளையாடினால், அது அவரது மூன்றாவது உலகக் கிண்ணமாக அமையும். இவர் ஏற்கனவே 2011 மற்றும் 2015ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கிண்ண தொடர்களில் தென்னாபிரிக்க அணியை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

இதேவேளை, உலகக் கிண்ண தொடருடன் ஜேபி டுமினி ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருப்பதுடன், கடந்த வாரம் தென்னாபிரிக்க அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<