ஐக்கிய இராச்சியத்தின் வேல்ஸில் நடைபெற்ற பொதுநலவாய உயிர்காப்பு சம்பியன்ஷிப்பில் கொழும்பு ஆனந்தா கல்லூரியைச் சேர்ந்த 17 வயது ஹிருண டி சில்வா மற்றும் மீதும் மெண்டிஸ் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
இதன் மூலம் பொதுநலவாய உயிர்காப்பு சம்பியன்ஷிப்பில் இலங்கை அணி முதல் தடவையாக தங்கப் பதக்கம் வென்று புது வரலாற்று சாதனை படைத்தது.
12.5 மீற்றர் லைன் த்ரோ (Line Throw) போட்டியில் இந்த வீரர்கள் தங்கப் பதக்கத்தை வென்று இலங்கைக்கு பெருமையை சேர்த்துள்ளனர்.
இலங்கையின் முந்தைய சிறந்த சாதனையான 2014 பொதுநலவாய உயிர்காப்பு சம்பியன்ஷிப்பில் பெற்ற வெண்கலப் பதக்கத்திற்குப் பிறகு ஹிருண டி சில்வா மற்றும் மீதும் மெண்டிஸ் ஜோடி பெற்றுக்கொண்ட இந்த வெற்றி முக்கிய இடத்தைப் இடம்பிடித்தது..
இந்த வெற்றி தொடர்பில் ஹிருண டி சில்வா கருத்து தெரிவிக்கையில், ‘இந்த தங்கப் பதக்கம் எங்களுக்கும், இலங்கைக்கும் மிகவும் முக்கியமானது. இந்த தருணத்திற்காக நாங்கள் மிகக் கடினமாக உழைத்தோம்,’ என தெரிவித்தார்.
‘எமது பாடசாலைக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க விரும்பினோம். வேல்ஸில் தேசிய கீதத்தைக் கேட்டது நாங்கள் என்றென்றும் நினைவில் கொள்ளும் தருணமாக இருக்கும்‘ என்று மீதும் மெண்டிஸ் கூறினார்.
சர்வதேச உயிர்காப்பு கூட்டமைப்பு ((ILS) மற்றும் பொதுநலவாய விளையாட்டு கூட்டமைப்பின் பங்களிப்புடன் பிரித்தானியாவின் வேல்ஸில் ஜூலை 10ஆம் திகதி ஆரம்பமாகிய இந்தப் போட்டித் தொடரில் இலங்கையிலிருந்து 10 வீரர்கள் பங்குபற்றினர்.
- தொடர் வெற்றிகளுடன் முன்னேறும் மடவளை மதீனா ரக்பி அணி
- ஏழு கண்டங்களின் உயர்ந்த சிகரங்களை அடைந்த முதல் இலங்கையரானார் யோஹான் பீரிஸ்
இதனிடையே, இந்தப் போட்டித் தொடர் உயர்தர நீர்த்திறன் மற்றும் மீட்பு தயார்நிலையை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இந்த ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள உலக விளையாட்டுப் போட்டிகளுக்கான இறுதித் தகுதிச் சுற்றாகவும் அமைந்துள்ளது. அங்கு உயிர்காப்பு ஒரு போட்டி நிகழ்ச்சியாக அதிகாரப்பூர்வமாக உள்வாங்கப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இலங்கையின் 22ஆவது தேசிய விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்ட உயிர்காப்பு விளையாட்டு, விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் செயல்படுகிறது. மேலும், றோயல் லைஃப் சேவிங் சொசைட்டி (பொதுநலவாய), இன்டர்நேஷனல் மாரிடைம் ரெஸ்க்யூ ஃபெடரேஷன் (ANF) மற்றும் ஜப்பானின் UITEMATE போன்ற உலகளாவிய அமைப்புகளுடன் இணைந்துள்ளது.
உயிர்காப்பு விளையாட்டின் அனைத்து முக்கிய அம்சங்களான வேகம், திறன் மற்றும் மீட்பு தொழில்நுட்பத்தை பரிசோதிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பு இம்முறை உயிர்க்காப்பு சம்பியன்ஷிப்பில் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் விளையாட்டுச் செய்திகளைப் படிக்க<<