மாலிங்கவின் பண்புகள் வனிந்து ஹஸரங்கவிடம் இருக்கின்றது – மஹேல

1171

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்கு ஆலோசக பயிற்சியாளராகவும் இருக்கும் மஹேல ஜயவர்தன, நட்சத்திர சகலதுறைவீரர் வனிந்து ஹஸரங்கவின் வளர்ச்சி பற்றி கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

>> இளம் இலங்கை அணியை பலப்படுத்தும் முன்னாள் ஜாம்பவான்கள்

வனிந்து ஹஸரங்க கடைசியாக நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரில் 16 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி தொடரில் அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய பந்துவீச்சாளராக மாறி இருந்ததோடு, ஆசியக் கிண்ணத் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரின் ஆட்டநாயகன் விருதினையும் வென்றிருந்தார்.

இந்த நிலையில் வனிந்து ஹஸரங்க முதிர்ச்சியினைக் காட்டும் ஒரு கிரிக்கெட் வீரராக உருவெடுத்துள்ளதாக மஹேல ஜயவர்தன சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) நிகழ்ச்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருக்கின்றார்.

”கடந்த 12 மாதங்களாக அவர் எந்தளவிற்கு முதிர்ச்சியுடன் இருக்கின்றார் என்பதனை காட்டியிருக்கின்றார் – ஒரு பந்துவீச்சாளராக மட்டுமின்றி துடுப்பாட்டத்திலும் நிரூபித்துக் காட்டியிருக்கின்றார். சிக்கலான சந்தர்ப்பங்களில் அவர் களத்திற்கு வந்து தேவையானதை செய்திருக்கின்றார்.”

”தலைவருக்கான பட்டங்களாக இருக்கும் தலைவர், பிரதி தலைவர் பட்டங்கள் இல்லாது போயினும் இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் தலைவராக அவர் (வனிந்து)  காணப்படுகின்றார்.”

அதேநேரம் மாலிங்கவின் குணங்களை வனிந்து ஹஸரங்கவும் கொண்டிருப்பதாக மஹேல ஜயவர்தன மேலும் பேசுகையில் குறிப்பிட்டிருந்தார்.

”அவர் ஆரம்பித்ததனைப் பார்க்கும் போது அவரிடம் மாலிங்கவிடம் இருக்கும் பண்புகளுக்கான ஒற்றுமைகள் இருக்கின்றது இருவரும் தென் பகுதியில் (காலி) இருந்தே வந்திருக்கின்றனர்.”

”இருவரும் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையினை சாந்தமாகவே ஆரம்பித்திருந்தனர். உடைமாற்றும் அறையிலும் ஒரு மூலையிலேயே இருப்பார்கள். ஆனால் படிப்படியாக வளரத் தொடங்கியிருக்கின்றனர். இருவருக்கும் சிகை அலங்கார மாற்றம், உடம்பில் பச்சை (Tatoo) மற்றும் ஏனைய விடயங்களும் ஒத்துப் போகின்றது.”

”இந்த வளர்ச்சியில் (அதாவது ஹஸரங்கவின் வளர்ச்சியில்), லசித் மாலிங்க எப்படி ஒரு லசித் மாலிங்கவாக மாறினாரோ அதே மாதிரியே வனிந்து ஹஸரங்கவும், ஒரு வீரராக வருவதனைப் பார்க்கின்றேன்.”

”ஆனால் மைதானத்திற்குள் வந்த பின்னர் மாலிங்க போன்று இவரும் போட்டித்தன்மையானவராக இருக்கின்றார். இதுவே அவரிடம் (வனிந்துவிடம்) எனக்கு பிடித்திருக்கின்றது.”

>> உலகக் கிண்ணத்தில் துடுப்பில் பெருமை காண்பிக்க துடிக்கும் துருப்புச்சீட்டுகள்

வனிந்து ஹஸரங்க தற்போது T20 போட்டிகளில் ஒரு முன்னணி சகலதுறைவீரராக இருப்பதோடு, T20I பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் மூன்றாம் இடத்திலும் சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் நான்காம் இடத்திலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. அத்துடன் T20 உலகக் கிண்ணத்திலும் இலங்கை கிரிக்கெட் அணியின் நம்பிக்கைகுரிய வீரராக வனிந்து ஹஸரங்க எதிர்பார்க்கப்படுகின்றார்.

 >> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<