புனித பத்திரிசியாரை வீழ்த்தி சம்பியன் கிண்ணத்தை வென்றது யாழ் மத்தி

775
Jaffna Central

யாழ் மாவட்ட பாடசாலைகள் விளையாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் வட மாகாண பாடசாலை அணிகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் இரண்டாவது பாதி கோல்களின் மூலம் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி அணியை 02 – 01 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்ட யாழ் மத்திய கல்லூரி அணி தொடரின் சம்பியன் கிண்ணத்தை வென்றது.

துரையப்பா விளையாட்டரங்கில்  நேற்று (15) மாலை 7 மணிக்கு மின்னொளியின் கீழ் இடம்பெற்ற இந்த  இறுதிப் போட்டியில் Thepapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் மூன்றாவது இடத்தினை தமதாக்கியிருந்த, தொடரின் நடப்புச் சம்பியன்களான புனித பத்திரிசியார் கல்லூரி அணியினை எதிர்த்து 2017ஆம் ஆண்டில் தொடரின் சம்பியன் பட்டத்தினை வென்ற யாழ் மத்திய கல்லூரி அணி மோதியிருந்தது.

இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடாத்தவுள்ள பத்திரிசியார், மத்திய கல்லூரிகள்

யாழ் மாவட்ட பாடசாலைகள் விளையாட்டு சங்கத்தின்..

அரையிறுதிப் போட்டியில்  மத்திய கல்லூரி வீரர்கள் மகாஜனா கல்லூரியை 14 – 01 என்ற கோல்கள் கணக்கிலும்,  புனித பத்திரிசியார்  கல்லூரி வீரர்கள் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணியினை 02 – 01 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்றிருந்தனர்.

இந்நிலையில் விறுவிறுப்பாக இடம்பெற்ற நேற்றைய போட்டியின் ஆரம்பத்திலேயே புனித பத்திரிசியார் கல்லூரிக்கு கிடைத்த கோணர் கிக்கினை டட்லி கோல் கம்பத்தினை நோக்கி உதைய, டைனியஸ் கோல் நோக்கி ஹெடர் செய்த பந்து நிலத்தில் வீழ்ந்து கம்பத்திற்கு மேலால் சென்றது.  

மத்திய களத்திலிருந்து அனிஸ்ரன் வலது பக்கத்திலிருந்த டைனியஸை நோக்கி பந்தினை உதைய, டைனியஸ் நேர்த்தியாக கோலினை நோக்கி உதைந்தார். இதன்போது, இடது பக்கத்திலிருந்து வேகமாக பந்தினை நோக்கி பாய்ந்த சாந்தன் போட்டியின் முதலாவது கோலினை பத்திரிசியார் கல்லூரிக்காக பதிவுசெய்தார்.  

அந்த கோலுடன் தடுமாறிய மத்திய கல்லூரியின் பின்கள வீரர்கள் பந்துகளை, விரைவாக பின்களத்திலிருந்து வெளியேற்றுவதற்கே எத்தணித்தனர். அதனை சாதகமாக்கிய பத்திரிசியார் வீரர்கள் பந்தினை அடுத்தடுத்து கோல் நோக்கி நகர்த்தினர்.

Photos : Manipay Hindu College vs St Patrick’s College | Semi Finals | JSSA Football Tournament 2019

ThePapare.com | ushanth ui | 01/15/2018 | Editing and re-using..

31ஆவது நிமிடத்தில்  மத்திய கல்லூரிக்கு கிடைத்த ப்ரீ கிக்கினை றேம்சன் உதைய, அதனை யூட் டிலக்சனுக்கு கோலினுள் செலுத்துவதற்கான வாய்ப்பிருந்தும் பந்தினை அவர் ரவிவர்மனிற்கு வழங்கினார். ரவிவர்மன் கம்பத்தினை நோக்கி தட்டிய பந்து கம்பத்திற்கு அருகால் வெளியேறியது.  

முதலாவது பாதியின் இறுதி நிமிடத்தில் மத்திய களத்திலிருந்து சிறந்த பந்து பரிமாற்றத்தின் பின்னர் முன்களம் நோக்கி அனுப்பிய பந்தினை சாதகமாக நிறைவுசெய்யத் தவறினார் ரவிவர்மன்.

முதல் பாதி : புனித பத்திரிசியார் கல்லூரி 01 – 00 யாழ் மத்திய கல்லூரி

இரண்டாவது பாதியாட்டத்தின் ஆரம்பம் முதலே புனித பத்திரிசியார் கல்லூரியின் பாதியினை ஆக்கிரமித்தனர் மத்திய கல்லூரி வீரர்கள்.  

றேம்சன் உள்ளனுப்பிய கோணர் உதையினை ஜிந்துயன் பின்னங்காலால் கோல் நோக்கி தட்டி விட, பத்திரிசியார் கோல்காப்பாளர் டிலக்சன் லாவகமாக பந்தினை சேகரித்தார்.  

அடுத்த நிமிடத்திலேயே பந்து பெனால்டி எல்லையினுள்ளே பத்திரிசியார் வீரரின் கையில் பட்டதற்காக கிடைக்கப்பெற்ற பெனால்டியினை றேம்சன் நேர்த்தியாக வலையினுள் செலுத்தி கோல் கணக்கினை சமன் செய்தார்.  

மத்திய கல்லூரியின் றேம்சன், விக்னேஷினது அடுத்தடுத்த முயற்சிகளை கோல்காப்பாளர் டிலக்சன் லாவகமாக முன் நகர்ந்து வந்து தடுத்தார்.

போட்டியின் 72ஆவது நிமிடத்தில் ஆர்த்திகன் கோணர் எல்லைக்கு அருகிலிருந்து கோல் கம்பத்தினை நோக்கி செலுத்திய பந்தினை கோலாக்கினார் விக்னேஷ். இதனால் மத்திய கல்லூரி வீரர்கள் மேலதிக ஒரு கோலினால் போட்டியில் முன்னிலை பெற்றனர்.

மத்திய களத்திலிருந்து றேம்சன் முன் செலுத்திய பந்தினை ஜூட் டிலக்சன் வலையினுள் செலுத்த முயற்சிக்க கோல்காப்பாளர் டிலக்சன் விரைவாக பந்தினை சேகரித்தார்.

மேலுமொரு முறை ஜூட் டிலக்சன் கோலினை நோக்கி உதைந்த பந்து மயிரிழையில் கம்பத்திற்கு மேலால் சென்றது.

பத்திரிசியார் அணியின் நிர்மல கிறிஸ்ரீபனிற்கு சிறந்த வாய்ப்பு ஒன்று கிடைத்த போதும் ஜூட் நிஷாந் பந்தினை அங்கிருந்து வெளியேற்றினார்.

Photo Album – Jaffna Central College vs Tellipalai Mahajana College | Semi Finals | JSSA Football Tournament 2019

மேலும் சில நிமிடங்களில் அனிஸ்ரன் கோலினை நோக்கி உதைந்த பந்தினை பவிராஜ் கோலாக்குவதாற்கு சந்தர்ப்பம் கிடைத்தபோதும், பந்து தலைக்குமேல் உயர, பந்தினை கையால் தட்டினார் பவிராஜ்.

இரண்டாம் பாதி நிறைவை அண்மிக்கையில் சாந்தன் கோலினை நோக்கி உதைந்த பந்து பின்கள வீரர்களின் உடம்பில் பட்டுத் திரும்ப, மீண்டும் கோலினை நோக்கி உதைந்த பந்து மயிரிழையில் கம்பத்திற்கு அருகால் வெளியேறியது.

தொடர்ந்தும் மத்தியின் கோல்பரப்பினை ஆக்கிரமித்த புனித பத்திரிசியார் வீரர்களுக்கு, போட்டியின் மேலதிக நேரத்தில் பந்துடன் கோல்நோக்கி நகர்ந்த, சாந்தனை மத்திய கல்லூரியின் பின்கள வீரர் பெனால்டி எல்லையினுள் முறையற்ற விதத்தில் வீழ்த்தியதற்காக நடுவர் பெனால்டி வாய்ப்பினை வழங்க போட்டியினை சமநிலையாக்குவதற்கு மிகச்சிறந்த சந்தர்ப்பம் கிடைத்தது.  

இதன்போது, புனித பத்திரிசியார் நட்சத்திர ஆட்டக்காரர் சாந்தன்  பெனால்டியினை கோல் கம்பத்திற்கு வெளியே உதைந்து தமது ரசிகர்களிற்கு அதிர்ச்சியளித்தார்.  

எனவே, இரண்டாம் பாதியில் பெற்ற இரண்டு கோல்களின் உதவியுடன் யாழ் மத்திய கல்லூரி வீரர்கள் இம்முறை தொடரில் சம்பியன் கிண்ணத்தை வென்றனர்.

முழு நேரம் : புனித பத்திரிசியார் கல்லூரி 01 – 02 யாழ் மத்திய கல்லூரி

கோல் பெற்றவர்கள்

புனித பத்திரிசியார் கல்லூரி – சாந்தன் 15’

யாழ் மத்திய கல்லூரி றேம்சன் 57′, விக்னேஷ் 72′

விருதுகள்

  • இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் றேம்சன் ( யாழ் மத்திய கல்லூரி)
  • சிறந்த கோல் காப்பாளர் டிலக்சன் (புனித பத்திரிசியார் கல்லூரி )
  • தொடரின் நாயகன் – ஜூட் டிலக்சன் (யாழ் மத்திய கல்லூரி)

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<