யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் அரங்கு அமைப்பதற்கான அடிக்கல் நிகழ்வு

6

யாழ்ப்பாணத்தின் முதல் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தினை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வானது இன்று (01) யாழ். மண்டைதீவு பிரதேசத்தில் நடைபெற்றிருக்கின்றது.

>>இலகு வெற்றியுடன் ஒருநாள் தொடரினைக் கைப்பற்றிய இலங்கை அணி

அந்தவகையில் மிக நீண்ட காலம் எதிர்பார்க்ப்பட்டிருந்த யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் இலங்கையின் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க இலங்கை கிரிக்கெட் சபையின் அழைப்பில் கலந்து கொண்டு மைதானத்திற்கான அடிக்கல்லை நட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்படும் மைதானமானது உள்ளூர் போட்டிகளுக்காக அடுத்த ஓராண்டுக்குள் தயாராகும் எனக் குறிப்பிட்டதோடு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்த மைதானத்தில் சர்வதேச போட்டிகளை நடாத்தும் வகையில் மைதானம் நிர்மாணிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

அத்துடன் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் சபையின் முக்கிய பிரமுகர்கள் இலங்கையின் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் சேவைகள் அமைச்சர் மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி நேரங்களில் மாற்றம் 

அதேவேளை வடக்கின் விளையாட்டு வளர்ச்சிக்கு முக்கிய பங்காக மாறவிருக்கும் இந்த கிரிக்கெட் மைதானமானது, இயற்கையாகவே திறமைகளைக் கொண்ட ஒவ்வொரு கிரிக்கெட் வீர, வீராங்கனைக்கும் தேசிய அணியினை பிரதிநிதித்துவம் செய்வதற்கான சம வாய்ப்பினை வழங்கும் எண்ணக்கருவில் அமைக்கப்படவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை அடிக்கல் நிகழ்வில் கருத்து வெளியிட்ட இலங்கையின் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க இலங்கை கிரிக்கெட் அணியானது சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களை ஒன்றிணைந்து பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அமைவதனை தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<