அடுத்த மாதம் தியகமவில் ஆரம்பமாகும் தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர்

138
96th National Athletic championship

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் நடாத்தப்படுகின்ற வருடத்தின் மிகப் பெரிய போட்டித் தொடரான 96ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் இம்மாதம் 31ஆம் திகதி முதல் செப்டெம்பர் 2ஆம் திகதி வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவுள்ளன.  

இதன்படி இம்முறை போட்டித் தொடரில் 498 வீரர்களும், 202 வீராங்கனைகளும் கலந்துகொள்ளவுள்ளனர். அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவின் கோல் கோஸ்ட்டில் நடைபெறவுள்ள 19ஆவது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளை இலக்காகக் கொண்டு வீரர்களைத் தெரிவு செய்வதற்கான போட்டித் தொடராகவும் இது அமையவுள்ளது.

எனினும், வருடத்தின் மிகப் பிரதான மெய்வல்லுனர் போட்டித் தொடரான தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் கடந்த காலங்களைப் போல இவ்வருடமும் தேசிய மட்ட வீரர்களுடன், புதுமுக வீரர்களும் பங்குபற்றவுள்ளதாக இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

190 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படும் டொரின்டன் மைதானம்

விளையாட்டுத்துறை அமைச்சின் 50ஆவது ஆண்டு நிறைவு பொன் விழாவை முன்னிட்டு…

இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற இலங்கை மெய்வல்லுனர் சம்மேளன தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ தலைமையிலான புதிய நிர்வாகத்தினர், அடுத்த வருடத்துக்கான மெய்வல்லுனர் போட்டி அட்டவணையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்படி, அடுத்த வருடம் மார்ச் மாதம் 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளை கொழும்பில் அல்லது தியகமவில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள மெய்வல்லுனர் சம்மேளனம், எதிர்வரும் மே மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரையும் இலங்கையில் நடத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது.

இதனையடுத்து எதிர்வரும் ஜுன் மாதம் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை ஜப்பானில் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளும், ஜுலை 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை பின்லாந்தில் உலக கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி வரை இந்தோனேஷியாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவைக் கருத்திக் கொண்டு அடுத்த வருடத்துக்கான 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளை ஜுலை மாதம் 6,7 மற்றும் 8ஆம் திகதிகளில் நடத்தவும் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் தீர்மானித்துள்ளளது.

எனவே, அடுத்த வருடம் அதிகளவான சர்வதேசப் போட்டிகளைக் கொண்ட ஆண்டாகக் இருப்பதால் தேசிய மெய்வல்லுனர் குழாமில் இடம்பெறவுள்ள வீரர்களைத் தெரிவு செய்வதற்கான போட்டித் தொடர்களாக இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரும், அதன்பிறகு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு விழாவும் இந்நாட்டு மெய்வல்லுனர் வீரர்களுக்கு முக்கிய தொடராக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவையனைத்துக்கும் மத்தியில் சுகததாஸ மைதானத்தின் செயற்கை ஓடுபாதையின் நிர்மானப் பணிகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவடைந்தால் அடுத்த வருடத்திலிருந்து சர்வதேசப் போட்டிகளை இலங்கையில் நடத்துவது குறித்தும் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் அவதானம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.