“பங்களாதேஷிற்கு நாம் யார் என்று காட்டவேண்டும்” – மஹேல ஜயவர்தன

Asia Cup 2022

868

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் காலெட் மஹ்மூட், இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன பதில் பதிவொன்றை டுவிட்டரில் பதிவுசெய்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் அணி எது என்பதை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்றைய தினம் (01) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

>> இலங்கை அணியில் உலகத்தரமிக்க பந்துவீச்சாளர்கள் இல்லை

ஆசிய கிண்ண தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தானிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. குறித்த போட்டியை தொடர்ந்து இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக, “ஆப்கானிஸ்தான் அணியில் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர். முஸ்தபிசூர் ரஹ்மான் ஒரு நல்ல பந்துவீச்சாளர் மற்றும் சகிப் அல் ஹசன் ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர் என்பதை நாம் அறிவோம்.

ஆனால் அதைத் தவிர பங்களாதேஷ் அணியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை. ஆப்கானிஸ்தானுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், பங்களாதேஷ் அணியை வீழ்த்துவது எளிதாகும்” என்ற கருத்தை பதிவுசெய்திருந்தார்.

குறித்த இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளர் காலெட் மஹ்மூட், “எனக்கு தசுன் ஷானக ஏன் இப்படியான விடயம் ஒன்றை கூறினார் என்பது தெரியாது. பங்களாதேஷிடம் சகீப்பினையும், முஸ்தபிசுரையும் தாண்டி வேறு பந்துவீச்சாளர்கள் இல்லை எனக் கேட்டேன். உண்மையில் இலங்கை அணியிலேயே (உலகத் தரம் வாய்ந்த) பந்துவீச்சாளர்கள் இல்லை” என குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையில் மஹலே ஜயவர்தன இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டுவிட்டரில் கருத்தொன்றை பதிவுசெய்துள்ளார். “இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் தங்களுடைய திறமையையும், துடுப்பாட்ட வீரர்கள் தாங்கள் யார் என்பதையும் காட்டுவதற்கான சரியான நேரம் இதுவென கருதுகிறேன்” என பதிவுசெய்துள்ளார்.

பல்வேறு கருத்து முரண்பாடுகள் மற்றும் சமுகவலைத்தளங்களின் வைரலான கருத்து பதிவுகளுக்கு மத்தியில் இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<