2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடருக்கு இத்தாலி முதல் முறையாக தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.
கால்பந்து உலகில் மிகப் பிரபலமாக விளங்கி வரும் இத்தாலி அணி, கிரிக்கெட் உலகில் கால்பதித்திருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் ஆடவருக்கான T20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெறுகிறது. இம்முறை, அடுத்த ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடரில் மொத்தம் 20 அணிகள் விளையாட உள்ளன. இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 13 அணிகள் தகுதி பெற்றன. மீதமுள்ள 7 இடங்களுக்கு தகுதிசுற்றுகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசிய மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களுக்கான தகுதிச்சுற்றுகள் நடைபெற்று வருகின்றன.
இதில் ஐரோப்பிய அணிகளுக்கான தகுதிச் சுற்றில் நெதர்லாந்து, ஸ்கொட்லாந்து, ஜெர்சி, கெர்ன்சி, இத்தாலி ஆகிய 5 அணிகள் பங்கேற்றன. நெதர்லாந்தில் நடைபெற்ற இத் தகுதிச்சுற்றுப் போட்டிகள் நேற்று (11) நிறைவு பெற்றுள்ளன.
இதில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் இத்தாலி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களைச் சேர்த்தது.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணி 16.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் இத்தாலி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து அணி நேரடியாக அடுத்த ஆண்டு நடைபெறும் ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதி பெற்றது. அதேசமயம் இப்போட்டியில் இத்தாலி அணி தோல்வியைத் தழுவிய நிலையிலும், ஓட்ட வேக விகித்தில் T20 உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
- ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணம் முதல் தடவையாக இலங்கையில்
- 2026 மகளிர் T20 உலகக் கிண்ண இறுதிப்போட்டி லோர்ட்ஸில்
முன்னதாக நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் ஸ்கொட்லாந்து மற்றும் ஜெர்சி அணிகள் பலப்பரீட்சை நடத்தி இருந்தன. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்களை மட்டுமே சேர்த்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையடிய ஜெர்ஸி அணி 20 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டியதுடன் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஸ்கொட்லாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இப்போட்டியில் ஸ்கொட்லாந்து அணி தோல்வியைத் தழுவியதன் மூலம் அந்த அணி விளையாடிய 4 போட்டிகளில் ஒரு வெற்றி இரண்டு தோல்வி மற்றும் ஒரு முடிவில்லை என மொத்தமாக 3 புள்ளிகளை மட்டுமே எடுத்திருந்தது. மறுபக்கம் இத்தாலி அணி விளையாடிய 4 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வி மற்றும் ஒரு முடிவில்லை என 5 புள்ளிகளை பெற்றதன் மூலம் எதிர்வரும் T20 உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதிப்பெற்று அசத்தியுள்ளது.
அதேநேரத்தில், கடந்த நான்கு தடவைகள் T20 உலகக் கிண்ணத் தொடரில் இடம்பெற்றிருந்த ஸ்கொட்லாந்து அணி தற்போது T20 உலகக் கோப்பை தொடரில் தகுதி பெறாமல் வெளியேறியிருக்கிறது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்திற்கு இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், கனடா, இத்தாலி, நெதர்லாந்து அணிகள் இதுவரை தகுதி பெற்றுள்ளன.
இன்னும் 5 அணிகள் இந்த தொடரில் பங்கேற்க தகுதி பெற வேண்டி உள்ளது. அதில் இரண்டு அணிகள் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்தவகையாக இருக்கும். மற்ற மூன்று அணிகளும் ஆசியாவைச் சேர்ந்த அணிகளாக இருக்கும்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<