அயர்லாந்தை வீழ்த்தி புதிய வரலாறு படைத்த அமெரிக்கா

10973
USA Cricket

அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது T20I போட்டியில் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டி அமெரிக்க கிரிக்கெட் அணி புதிய வரலாறு படைத்தது.

இதன்மூலம், ஐசிசி இன் டெஸ்ட் அந்தஸ்த்து பெற்ற நாடொன்றை முதல் முறையாக வீழ்த்தி அந்த அணி சாதனை படைத்தது.

அமெரிக்காவுக்கு சுற்றுப்பணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் விளையாடி வருகிறது. அமெரிக்காவில் நடைபெறும் முதலாவது சர்வதேச கிரிக்கெட் தொடராக இது அமைந்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது T20I போட்டி நேற்று (22) புளோரிடாவில் உள்ள ப்ரோவார்ட் கவுண்ட்டி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அமெரிக்க அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி, அமெரிக்க அணியில் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் மொனன்க் படேல் (2), ரையன் ஸ்கொட் 8 (8) ஆகியோர் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து வந்த மார்ஷல் (4), ரித்விக் பெஹேரா (0) ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், அந்த அணி 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன்பின் ஜோடி சேர்ந்த சுஷாந்த் மொதானி – கஜானந்த் சிங் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர். இதில் இருவரும் அரைச்சதம் கடந்தனர்.

இதன்மூலம் 20 ஓவர்கள் நிறைவில் அமெரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் அதிகபட்சமாக கஜானந்த் சிங் 65 ஓட்டங்களையும், சுஷாந்த் மொதானி 50 ஓட்டங்களையும் எடுத்தனர்.

அயர்லாந்து அணியின் பந்துவீச்சில் பெர்ரி மெக்கார்தி 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை அதமிகபட்சமாக வீழ்த்தினார்.

பின்னர் 189 ஓட்டங்களை துரத்திய அயர்லாந்து அணிக்கு போல் ஸ்டெர்லிங் – லோர்கன் டக்கர் ஜோடி அதிரடியான ஆரம்பத்தைக் கொடுத்தது. இதில் டக்கர் அரைசச்தம் விளாசினார்.

எனினும், போல் ஸ்டெர்லிங் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, 57 ஓட்டங்களை எடுத்த நிலையில் டக்கரும் ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து வந்த பின்வரிசை வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதனால் 20 ஓவர்கள் நிறைவில் அயர்லாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் அமெரிக்க அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க அணி, ஐசிசி இன் டெஸ்ட் அந்தஸ்த்து பெற்ற நாடொன்றை முதல் முறையாக வீழ்த்தி புதிய வரலாறு படைத்தது. போட்டியின் ஆட்டநாயகன் விருது கஜானந்த் சிங்குக்கு வழங்கப்பட்டது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது T20I போட்டி இன்று (23) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<