மற்றுமொரு இலகு வெற்றியுடன் ஒரு நாள் தொடரில் முன்னேறும் இலங்கை A அணி

720

சுற்றுலா அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையிலான உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரின் நான்காவது போட்டியில், இலங்கை  A அணி அவிஷ்க பெர்னாந்துவின் அதிரடி சதத்தோடு அயர்லாந்து A அணியினை 202 ஓட்டங்களால் அபாரமாக தோற்கடித்துள்ளது.

இவ்வெற்றியோடு இலங்கை A அணி ஐந்து போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் தொடரிலும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 4-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது.

அசத்தல் வெற்றியுடன் ஒருநாள் தொடர் இலங்கை A அணியின் வசம்

இரு அணிகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் தொடரினை இலங்கை A அணி, ஏற்கனவே (3-0 என) கைப்பற்றிய நிலையில், இந்த உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் தொடரின் நான்காவது போட்டி இன்று (26) கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை A அணித்தலைவர் உபுல் தரங்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தேர்வு செய்திருந்தார்.

இதன்படி முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை A அணிக்கு அவிஷ்க பெர்னாந்து அதிரடியான முறையில் சதம் ஒன்றைப் பெற்றுத்தந்தார். மொத்தமாக 118 பந்துகளினை மட்டுமே எதிர்கொண்ட அவிஷ்க பெர்னாந்து அயர்லாந்து A அணியின் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து 7 அபார சிக்ஸர்கள் மற்றும் 10 பெளண்டரிகள் அடங்கலாக 139 ஓட்டங்களை குவித்திருந்ததோடு, இது தொடரில்  பெற்ற இரண்டாவது சதத்தினையும் பதிவு செய்தார்.

இதனை அடுத்து கமிந்து மெண்டிஸ் மற்றும் அஞ்செலோ பெரேரா ஆகியோர் அட்டகாசமான முறையில் துடுப்பாடி அரைச்சதங்கள் பெற்றனர். இவர்களின் துடுப்பாட்ட உதவியோடு இலங்கை A அணி, 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து இமாலய 353 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

Photo Album – Ireland A Team Tour to Sri Lanka 2018/19 | 4th ODI

இலங்கை A அணியின் துடுப்பாட்டத்தில் அரைச்சதங்கள் பெற்ற அஞ்செலோ பெரேரா 34 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 32 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பெளண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இதேநேரம் அயர்லாந்து A அணி, இலங்கை வீரர்களின் அதிரடி துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்த 8 பந்துவீச்சாளர்களை உபயோகம் செய்த போதிலும்  சிமி சிங்கினால் மாத்திரமே இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்ற முடியுமாக இருந்தது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 354 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய அயர்லாந்து A அணி ஆரம்பம் முதலே தடுமாற்றம் காட்டி வந்ததோடு வெறும் 30.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 151 ஓட்டங்களை மட்டுமே பெற்று போட்டியில் படுதோல்வியடைந்தது.

அயர்லாந்து A அணியின் துடுப்பாட்டத்தில் சிமி சிங் பெற்ற 31 ஓட்டங்களே அவ்வணி சார்பில் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாக அமைந்தது. அதேவேளை, பந்துவீச்சில் ஏற்கனவே துடுப்பாட்டத்தில் அசத்திய கமிந்து மெண்டிஸ் மற்றும் இசுரு உதான ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் தொடரில் இலங்கை A அணியின் மற்றுமொரு வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.

கம்மின்ஸின் வேகத்தால் மூன்று நாட்களில் முடிவை எட்டிய முதல் டெஸ்ட்

கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கு மேலாக இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் அயர்லாந்து A அணி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (29)  இலங்கை A அணியுடனான இந்த உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டியினை நிறைவு செய்த பின்னர் நாடு திரும்புகின்றது.

ஸ்கோர் விபரம்

முடிவு – இலங்கை A அணி 202 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<