இறுதி டெஸ்ட் போட்டிக்கான ஆஸி. அணியில் புதுமுக வீரர்

218
Image Courtesy - FOX sports

இலங்கை அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு சகலதுறை வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் டெஸ்ட் அறிமுக வீரராக அழைக்கப்பட்டுள்ளார்.  

சுற்றுலா இலங்கை அணிக்கும் ஆஸி. அணிக்குமிடையிலான இந்த சுற்றுத் தொடர் இரண்டு டெஸ்ட் போட்டிகளை மாத்திரம் கொண்டதாக அமைந்துள்ளது.

ஐந்து நாட்கள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டியானது நேற்று (26) மூன்று நாட்களுடன் நிறைவுக்கு வந்திருந்தது. இந்த போட்டியில் ஆஸி. அணி இன்னிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றிருந்தது.

அவுஸ்திரேலிய டெஸ்டில் லஹிரு குமாரவை இழக்கும் இலங்கை அணி

தொடைத்தசை உபாதையினால் இலங்கை அணியின் இளம்….

இந்நிலையில் அடுத்து நடைபெறவுள்ள, தொடரின் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியானது இலங்கை அணிக்கு மிக முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது. தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பினை இழந்திருந்தாலும், தொடரை சமநிலை செய்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது. இதன்படி அடுத்த போட்டியை எப்படியாவது வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணி காணப்படுகின்றது.

இவ்வேளையில் ஆஸி. அணியானது அதன் குழாத்தில் மாற்றம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக முதல் டெஸ்ட் போட்டிக்கான குழாத்தில் இடம்பெற்றிருந்த மெட் ரென்ஷோவ் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் முதல் டெஸ்ட் போட்டிக்கான குழாமில் இடம்பெற்றிருந்தாலும் அப்போட்டியில் விளையாடவில்லை.

இந்நிலையில் இவர் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் லீக் தொடர்களில் ஒன்றான பிக் பேஷ் லீக் தொடரில் பிரிஸ்பேர்ன் ஹீட் அணிக்காக விளையாடவுள்ள காரணத்தினால் இவ்வாறு அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இவரின் இடத்திற்கு டெஸ்ட் போட்டிகளுக்கு அறிமுக வீரராக சலதுறை வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். 29 வயதுடைய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 2015ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற டி20 போட்டி மூலமாக சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். பின்னர் அதே சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டியிலும் அறிமுகம் பெற்றார்.

இலங்கையுடனான டெஸ்ட் போட்டியில் 25 வயதுடைய ஆஸி வீரர் இணைப்பு

இலங்கை கிரிக்கெட் அணியுடனான பயிற்சிப் போட்டியில்…..

இதுவரையில் 24 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் ஒரு சதம், ஐந்து அரைச்சதங்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 807 ஓட்டங்களை குவித்துள்ளார். இவரின் ஒருநாள் போட்டிகளுக்கான துடுப்பாட்ட சராசரி 42.47 சதவீதமாகும். அத்துடன் பந்துவீச்சில் 22 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.  

17 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 128 ஓட்டங்களையும், 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

53 முதல்தர டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 4 சதங்கள், 19 அரைச்சதங்களுடன் மொத்தமாக 2857 ஓட்டங்களை குவித்துள்ளார். அத்துடன் பந்துவீச்சில் 52 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவரின் துடுப்பாட்ட சராசரி 33.61 சதவீதமாகும்.

இலங்கை மற்றும் ஆஸி. அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (01) கன்பேராவில் ஆரம்பமாகவுள்ளது.

மாற்றத்தின் பின்னரான புதிய ஆஸி. குழாம்

டிம் பெய்ன் (அணித்தலைவர்), ஜொய் ப்ரூன்ஸ், பெட் கம்மிண்ஸ், மார்கஸ் ஹாரிஸ், ட்ரெவிஸ் ஹெட், உஸ்மான், கவாஜா, மார்னஸ் லாபுஸ்சக்னே, நைதன் லயன், கேர்டிஸ் பெட்டர்சன், வில் புகௌஸ்கி, மிட்சல் ஸ்டாக், பீட்டர் சிடில், ஜை றிச்சட்சன், மார்கஸ் ஸ்டொய்னிஸ்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<