இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்ற அணிகளில் ஒன்றான லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைவராக இந்திய அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரிஷப் பண்ட் நியமிக்கப்பட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் 14ஆம் திகதி முதல் மே 25ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
இம்முறை நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தலைவராக இருந்த கேஎல் ராகுலை விடுவித்ததுடன், நிகோலஸ் பூரனை 21 கோடி ரூபாய்க்கும், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ் ஆகியோரை தலா 11 கோடி ரூபாய்க்கும், மொசின் கான், ஆயுஷ் பதோனி ஆகியோரை தலா 4 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்தது.
2022ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரின் அணிகளில் ஒன்றாக விளையாடி லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 2024 வரை கேஎல் ராகுல் வழிநடத்தினார். அந்த அணி முதல் இரண்டு ஆண்டுகளும் பிளே ஆஃப் சுற்றுகளுக்குள் முன்னேறியது.
இருப்பினும், இரண்டு முறையும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை. அதேபோல, கடந்த ஆண்டு லக்னோ அணிக்கு ஏமாற்றத்தைக் கொடுத்ததுடன், அந்த அணி 7ஆவது இடத்தை பிடித்தது. இதனால் அந்த அணி நிர்வாகம் அதிருப்தி அடைந்தது.
- 2025 ஐபிஎல் தொடர் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு
- IPL இல் மீண்டும் தலைவராக அவதாரம் எடுக்கும் ஸ்ரேயாஸ் ஐயர்
- குஜராத் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளரானார் பார்த்திவ் படேல்
இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்டை லக்னோ சுப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி 27 கோடிக்கு வாங்கியது. இதன் மூலம் ரிஷப் பண்ட் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
2016 ஆம் ஆண்டு முதல் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக ஆடி வந்த ரிஷப் பண்ட், 2021 ஆம் ஆண்டு அணியின் தலைவராகப் பொறுப்பேற்றார். அந்த ஆண்டு டெல்லி அணி பிளே ஆஃப் சுற்று வரை சென்றது. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான தோல்வியால் அந்த அணி இறுதிப் போட்டியை எட்டவில்லை. 2022 ஆம் ஆண்டில் அந்த அணி 5ஆவது இடத்தைப் பிடித்தது.
அதேபோல, அந்த ஆண்டு முடிவில் ஏற்பட்ட கார் விபத்தால் ரிஷப் பண்ட் 2023ஆம் ஆண்டு ஐபிஎல் உள்ளிட்ட போட்டிகளில் விளையாடவில்லை. எவ்வாறாயினும், காயத்தில் இருந்து பூரண குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பிய நிலையில் அவரது தலைமையில் களமிறங்கிய டெல்லி அணியால் 6ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.
எது எவ்வாறாயினும், இம்முறை ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டால் அந்த அணியை அவர் எவ்வாறு வழிநடத்துவார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இது இவ்வாறிருக்க, லக்னோ அணியில் இருந்து வெளியேறிய கேஎல் ராகுலை டெல்லி கேபிட்டல்ஸ் அண 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. டெல்லி அணி இதுவரை இந்த ஆண்டுக்கான தலைவராக முடிவு செய்யவில்லை.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<