2023 ஐ.பி.எல். தொடரில் முதல் வெற்றியினைப் பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ்

148

2023ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரின் 16ஆவது லீக் போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் அணியினை மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இந்தப் பருவத்திற்கான தொடரில் தமது முதல் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

பூரான், ஸ்டொய்னிஸ் அதிரடியில் லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் வெற்றி

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கெபிடல்ஸ் அணிகள் இடையிலான ஐ.பி.எல். போட்டி நேற்று (11) டெல்லி நகரில் ஆரம்பமாகியது.

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹிட் சர்மா முதலில் டெல்லி கெபிடல்ஸ் அணியினை துடுப்பாட பணித்திருத்தார். அதன்படி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெபிடல்ஸ் 19.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து  விக்கெட்டுக்களையும் இழந்து 172 ஓட்டங்கள் எடுத்தது.

டெல்லி கெபிடல்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆரம்பவீரராக வந்திருந்த அதன் தலைவர் டேவிட் வோர்னர் மற்றும் மத்திய வரிசையில் ஆடிய அக்ஷார் பட்டேல் ஆகிய இருவரும் அரைச்சதம் விளாசினர். இதில் வோர்னர் 47 பந்துகளுக்கு 6 பௌண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்கள் எடுக்க, அக்ஷார் பட்டேல் 25 பந்துகளில் அதிரடியாக 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் உடன் 54 ஓட்டங்கள் எடுத்தார்.

மறுமுனையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில் ஜேசன் பெஹ்ரென்ட்ரோப் மற்றும் பியூஸ் சாவ்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருக்க, ரைலி மெரடித் 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 173 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியின் வெற்றி இலக்கினை 173 ஓட்டங்களுடன் அடைந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் தலைவர் ரோஹிட் சர்மா 45 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்கள் எடுக்க, திலக் வர்மா 29 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 41 ஓட்டங்கள் பெற்றார்.

டெல்லி கெபிடல்ஸ் பந்துவீச்சில் முகேஷ் குமார் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய போதும் அதன் காரணமாக எந்த பிரயோஜனமும் ஏற்பட்டிருக்கவில்லை. போட்டியின் ஆட்டநாயகனாக ரோஹிட் சர்மா தெரிவானார்.

போட்டியின் சுருக்கம்

டெல்லி கெபிடல்ஸ் – 172 (19.4) அக்ஷார் பட்டேல் 54(25), டேவிட் வோர்னர் 51(47), பியூஸ் சாவ்லா 22/3(4), ஜேசன் பெஹ்ரென்ட்ரோப் 23/3(3)

மும்பை இந்தியன்ஸ் – 173/4 (20) ரோஹிட் சர்மா 65(45), திலக் வர்மா 41(29), முகேஷ் குமார் 30/2(2)

முடிவு – மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட்டுக்களால் வெற்றி

இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<